செவ்வாய், 26 ஜூன், 2018

அண்ணா பல்கலை:,, மாணவர்களுக்கான 70% காலியிடங்கள்?

அண்ணா பல்கலை:70% காலியிடங்கள்? மின்னம்பலம்:  அண்ணா பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள பொறியியல் கல்லூரிகளில், நடப்பாண்டில் டிப்ளமோ முடித்து விட்டு நேரடியாக இரண்டாமாண்டு பி.இ / பி.டெக். படிப்புகளில் சேர்வோருக்கான இடங்கள் 70 சதவிகிதம் காலியாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும் அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 525 கல்லூரிகளில் உள்ள 35,000 இடங்களுக்கு இந்த ஆண்டு 12,000 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். இது, சமீபத்தில் கிடைத்த அதிகாரப்பூர்வ தரவுகளில் இருந்து எடுக்கப்பட்டவை.
சில ஆண்டுகளுக்கு முன்பு டிப்ளமோ படிப்பை முடித்துவிட்டு,பொறியியல் படிப்புகளில் சேர்வது மாணவர்களிடையே விருப்பமாக இருந்தது. ஆனால், இந்த படிப்புகளில் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் குறைந்து வருவதால், இந்த படிப்புக்கான கோரிக்கையும் குறைந்துவிட்டது.

2017 ஆம் ஆண்டில், 40 சதவிகித பொறியியல் மாணவர்கள் வேலை கிடைக்காமல் இருந்தனர். மற்றொரு பக்கம், டிப்ளமோ படித்த மாணவர்கள் அதிகளவில் தேவைப்பட்டனர். தொழிற் நிறுவனங்களும், 1:30 விகிதசாரப்படி, பொறியியல் மற்றும் டிப்ளமோ மாணவர்களுக்கு வேலை கொடுத்தனர்." டிப்ளமோ மாணவர்களுக்கு அதிகளவில் பயிற்சி கொடுக்க அவசியமில்லை,ஏனெனில்,அவர்கள் படிக்கும் காலத்திலேயே அனைத்திலும் பயிற்சி பெற்று திறமையானவர்களாக இருப்பார்கள்" என கல்வி ஆலோசகர் மூர்த்தி செல்வகுமாரன் தெரிவித்துள்ளார்.
டிப்ளமோ மாணவர்கள் மூன்று ஆண்டுகள் படித்து டிகிரி பட்டம் வாங்குவதை விட, வேலைக்கு செல்லுவதற்கே முன்னுரிமை கொடுத்தனர் என மூர்த்தி செல்வகுமாரன் கூறியுள்ளார்.
சென்னை, ஒசூரில் டிப்ளமோ மாணவர்களுக்கு ரூ.12,000 முதல் 14,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால், இந்த சம்பளத்துக்கு பி.இ./ பி.டெக் மாணவர்கள் வேலை செய்ய தயாராக இல்லை. ஆனால், டிப்ளமோ மாணவர்கள் தங்கள் திறமையின் காரணமாக, இந்த பணிகளில் முன்னேற்றம் அடைந்து வளர்கின்றனர் என அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் சந்திரன் கூறினார்.
தொழில்நுட்ப கல்வி இயக்குநர் அதிகாரி ஒருவர் கூறுகையில், தொழில் நிறுவனங்களின் கோரிக்கைகளுக்கேற்ப அடிக்கடி பாலிடெக்னிக் கல்லூரிகள், தங்களின் பாடத்திட்டத்தை மேம்படுத்தி வருகின்றன. ஏனெனில், டிப்ளமோ மாணவர்கள் கல்லூரி காலத்திலேயே பயிற்சி செய்து 50 சதவிகித அளவுக்கு தொழிலைக் கற்று கொள்கின்றனர். இருப்பினும், டிப்ளமோ முடித்துவிட்டு, தரம் வாய்ந்த பொறியியல் கல்லூரிகளில் சேர்வது கடினமாக இருக்கிறது. அரசு கல்லூரிகளில் சேர்வதற்கு மாணவர்கள் 90 சதவிகிதம் அல்லது அதற்கு மேல் மதிப்பெண் வைத்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இவர்களுக்கான கவுன்சிலிங் ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்களில் தொடங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக