செவ்வாய், 5 ஜூன், 2018

காவிரியில் குமாரசாமிக்கு கைகொடுக்கும் கமலஹாசன் ... பச்சை துரோகம் ...50 ஆண்டுகள் பின்னோக்கி இழுக்கும் நயவஞ்சகம்

காவிரி: 50 ஆண்டுகள் பின்னோக்கி இழுக்கும் கமல்மின்னம்பலம்: காவிரி: கமலுக்கு வலுக்கும் கண்டனங்கள்!
காவிரி விவாகரத்தில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்று கமல் கூறியுள்ளதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
காவிரி மேலாண்மை ஆணையத்தை ஜூன் 1ஆம் தேதிக்குள் அமைக்க வேண்டும் என்றும் இது தொடர்பாக அரசிதழில் வெளியிட வேண்டும் என்றும் கடந்த மாதம் 18ஆம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து கடைசி நாளான ஜூன் 1ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்கும் கோப்பில் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கையெழுத்திட்டார்.
அன்றைய தினமே இது தொடர்பாக அரசிதழிலும் வெளியிடப்பட்டது.
ஆணையத்தின் தற்காலிகத் தலைவராக மத்திய நீர்வளத் துறை செயலாளர் யு.பி.சிங் செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆணையத்திற்கான தமிழக உறுப்பினர்களாகத் தமிழக பொதுப்பணித் துறை செயலாளர் எஸ்.கே. பிரபாகரை நியமிக்குமாறு மத்திய அரசுக்குத் தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது. இது தொடர்பாக மத்திய நீர்வள அமைச்சகத்திற்குத் தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஜூன் 2 கடிதம் எழுதியுள்ளார். மேலும், காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் தமிழக உறுப்பினராக தலைமைப் பொறியாளர் செந்தில் குமாரை நியமிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்திற்குப் புதுச்சேரி மாநில நீர்வளத் துறை செயலர் அன்பரசு மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவுக்கு உறுப்பினராக பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் சண்முகசுந்தரம் ஆகிய இருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். கர்நாடக மற்றும் கேரளா ஆகியவை இன்னும் உறுப்பினர்களைப் பெயரை பரிந்துரைக்கவில்லை. அதனால் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைப்பதிலும், அதன் முதல் கூட்டத்தைக் கூட்டுவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதில் மத்திய அரசு செய்வதற்கு எதுவுமில்லை என்றும், சம்பந்தப்பட்ட 4 மாநிலங்களும் பகுதிநேர உறுப்பினர்களைப் பரிந்துரை செய்தால் மட்டும் தான் ஆணையத்தைக் கூட்ட முடியும் என்று மத்திய நீர்வளத் துறை கூறியுள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னும் காவிரி விவகாரத்தில் கர்நாடகம் தாமதம் செய்து வருகிறது என்று தமிழக அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில்தான், மக்கல் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று(ஜூன் 4) கர்நாடகம் சென்று அம்மாநில முதல்வர் குமாரசாமியுடன் காவிரி விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளார்.
பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய குமாரசாமி, “ கர்நாடக விவசாயிகள் மற்றும் தமிழக விவசாயிகள் இருதரப்புமே எங்களுக்கு முக்கியம். இரு மாநில மக்களும் சகோதரர்களாகவும் சகோதரிகளாகவும் பழகி வருவதாக, எவ்வகையான பிரச்னை என்றாலும் இணைந்தே எதிர்கொள்வோம் என்று விவாதித்தோம். தமிழக தயார் என்றால், காவிரி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவும் நாங்கள் தயார் என்று குறிப்பிட்டார். நடிகர் கமல்ஹாசன் பேசும்போது, “காவிரி விவகாரத்தில் இரு மாநில அரசுகளும் சகோதரத்துவத்துடன் நடந்து கொண்டு பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். குறுவை சாகுபடி தொடங்கவுள்ள நிலையில் நீர் கிடைக்க வேண்டியதன் தேவையை குமாரசாமியிடம் வலியுறுத்தினேன்” என்று தெரிவித்தார். மேலும், அவருடனான சந்திப்பு இனிதாக அமைந்ததாகவும், இந்தச் சந்திப்பில் காலா திரைப்பட வெளியீடு பற்றி பேசவில்லை என்றும் குறிப்பிட்ட கமல், “ சினிமாவை விடக் காவிரி முக்கியம்” என்று தெரிவித்தார்.

காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்பான அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்ட நிலையில், பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று கமல் கூறியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு பலரும் தங்களின் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் முத்தரசன் கூறுகையில், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியாததால் தான் உச்ச நீதிமன்றம் சென்று நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று கோரினோம். நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு அது ஒரு தீர்ப்பை வழங்கியது. தற்போது இறுதியாக உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் காவிரி பிரச்னையில், மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், தேவையில்லாமல் கமல் ஏன் அது குறித்து தவறான கருத்தை பரப்பி வருகிறார். காவிரி விவகாரம் மீண்டும் தவறான பாதைக்குச் செல்கிறது” என்று விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறுகையில், “காவிரி விவகாரத்தை எதற்காக தற்போது கமல்ஹாசன் கையில் எடுக்கிறார். அவர் குமாரசாமியை சந்திக்க வேண்டிய அவசியம் என்ன ? காவிரி பிரச்னையை திரும்பவும் 50 ஆண்டுகள் பின்னோக்கி இழுப்பதன் மூலம் தமிழ் மக்களுக்கு அவர் துரோகம் இழைக்கிறர். நடிகர் கமல் வாயை மூடிக்கொண்டு இருப்பது நல்லது” என்று தெரிவித்துள்ளார்.
அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் பி.ஆர் பாண்டியன் பேசுகையில், “உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபின் காவிரி பிரச்னையை பேசி தீர்க்க வேண்டும் என்று கமல் கூறியிருப்பது பச்சை துரோகம். கமல் காவிரி விவகாரம் தொடர்பாக குமாரசாமியைச் சந்திக்க வேண்டாம் என்று நான் ஏற்கனவே கோரிக்கை வைத்து இருந்தேன். இந்நிலையில், கமலின் கருத்து தமிழக விவசாயிகளை அழிக்கும் நடவடிக்கை போல் உள்ளது. தனது பேச்சை அவர் திரும்ப பெற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
காவிரி உரிமை மீட்புக்குழு தலைவர் பெ.மணியரசன் கூறுகையில், காவிரி விவகாரத்தில் கர்நாடக மாநில பிரதிநிதி போலக் கமல் கருத்து தெரிவித்துள்ளார். இவரைக் கர்நாடக முதல்வரிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்துங்கள் என்று யார் அனுப்பி வைத்தார்கள். கருணாநிதி பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தபோது தொடங்கி பலமுறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. கமல் செய்திருப்பது பச்சைத் துரோகம். இந்தச் செயலுக்கு கமல் உடனடியாக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக