சனி, 23 ஜூன், 2018

2017: பாஜக ஆட்சியில் இந்தியாவின் 1% பணக்காரர்கள் நாட்டின் செல்வத்தில் 73% பெற்றுவிட்டனர் ..

Swathi K : மோடி ஆட்சியின் பொருளாதார மந்திரம் என்ன தெரியுமா? -
வெங்கடேஷ் ஆத்ரேயா
உழைக்கும் மக்கள் மீது வரி விதி. கார்ப்பரேட்டுகளையும், பணக்காரர்களையும் குஷிப்படுத்து என்பதே மோடி ஆட்சியின் பொருளாதார மந்திரமாகும்.
ஐமுகூ-ஆட்சிக் காலத்தில் 2013-14இல் மத்திய அரசின் கலால் வரிகள் 169,455 கோடி ரூபாய்களாகும். இது 2014-15இல் 188,128 கோடி ரூபாய்களாகவும், 2015-16இல் 288,073 கோடி ரூபாய்களாகவும், 2016-17இல் 381,756 கோடி ரூபாய்களாகவும் உயர்ந்தன. 2017-18இல் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட பின் அரசின் வருவாய் பல்கிப் பெருகியது.
2017-18ஆம் ஆண்டில் மத்திய அரசின் ஜிஎஸ்டி மற்றும் கலால் வரிகளின் பங்கு மிகவும் அதிகமாகும். இதே காலகட்டத்தில் கார்ப்பரேட்டுகளின் லாபமும் பல்கிப் பெருகியுள்ளதைக் காண முடியும். 2013-14இல் 394,678 கோடி ரூபாயாக இருந்தது 2014-15இல் 428,925 கோடி ரூபாயாகவும், 2015-16இல் 453,228 கோடி ரூபாயாகவும், 2016-17இல் 484,924 கோடி ரூபாயாகவும் உயர்ந்தன. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், மோடி அரசாங்கமானது, இரக்கமற்ற முறையில் உழைக்கும் மக்களின் மீது மறைமுக வரிகள் மூலமாக அநியாயமாக வரி விதித்துள்ள அதே சமயத்தில், கார்ப்பரேட்டுகளின் வருமானங்களின் மீதான வரிகள் பெயரளவில் மட்டுமே விதித்திருக்கிறது.
கார்ப்பரேட்டுகள் செலுத்தி வந்த செல்வவரி (wealth tax) யை ஒழித்துக்கட்டிவிட்டது. 250 கோடி ரூபாய்க்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள நிறுவனங்களின் வரியையும் குறைத்துள்ளது. அதாவது முன்பு 30 சதவீதமாக இருந்த வரியை 25 சதவீதமாகக் குறைத்திருக்கிறது.
அரசியல் கட்சிகள் நன்கொடை பெற்று வந்தது இதற்கு முன்பு கொஞ்சமாவது வெளிப்படையாக இருந்து வந்தது. இதனை பாஜக அரசு ஒரு சட்டத்தைக்கொண்டு வந்து மாற்றிவிட்டது. கார்ப்பரேட்டுகள் தங்கள் கட்சிக்கு அளிக்கும் நன்கொடையை வெளியே கூற வேண்டிய அவசியம் இல்லை என்கிற விதத்திலும், அதே போன்று நன்கொடை அளிப்பதற்காக இருந்து வந்த உச்சவரம்பை நீக்கி எவ்வளவு வேண்டுமானாலும் அளிக்கலாம் என்கிற விதத்திலும் மாற்றிக்கொண்டது. இதனால் பெரும்பயன்கள் அடைந்தது பாஜக தான். இதற்குப் பிரதியுபகரமாக, பாஜக மோடி அரசு, கார்ப்பரேட்டுகளுக்கும், பணக்காரர்களுக்கும் தாராளமாக வரிச் சலுகைகளை அளித்துள்ள அதே சமயத்தில், இதனால் ஏற்படும் நிதிப் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்காக பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்களை விற்பதற்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இவ்வாறு ஏழைகளுக்கு விரோதமான, பணக்காரர்களுக்கு ஆதரவான மோடி அரசாங்கத்தின் கொள்கைகள் காரணமாக நாட்டில் ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையேயான ஏற்றத்தாழ்வுகள் மேலும் அதிகரித்துள்ளன.
1945: 1% பணக்காரர்கள் நாட்டின் செல்வத்தில் 21% பெற்றிருந்தனர்.
1945ல் இருந்து 1980ல் இந்த ஏற்றத்தாழ்வு குறைந்து 7% ஆனது..
1980: 1% பணக்காரர்கள் நாட்டின் செல்வத்தில் 7% பெற்றிருந்தனர்.
2013: 1% பணக்காரர்கள் நாட்டின் செல்வத்தில் 22% பெற்றிருந்தனர்.
2016: 1% பணக்காரர்கள் நாட்டின் செல்வத்தில் 58% பெற்றிருந்தனர்.
2017: 1% பணக்காரர்கள் நாட்டின் செல்வத்தில் 73% பெற்றிருந்தனர்.
அருவருக்கத்தக்க விதத்தில் ஏற்றத்தாழ்வு இந்த அளவிற்கு விரிவடைந்திருப்பது தான் மோடி அரசாங்கத்தின் முத்திரைச் சின்னமாகும். வாழ்க மோடி!!
https://thewire.in/…/richest-1-cornered-73-wealth-generated…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக