சனி, 16 ஜூன், 2018

18 எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா?

டிஜிட்டல் திண்ணை: 18 எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா? மின்னம்பலம் :  வலியுறுத்தும் தினகரன்
“டிடிவி தினகரன் தனது வீட்டுக்கு இன்றும் சில எம்.எல்.ஏ.க்களை வரவழைத்துப் பேசினார். தங்க தமிழ்ச்செல்வன், மாரியப்பன் கென்னடி உட்பட சிலர் மட்டுமே அங்கே போயிருக்கிறார்கள். அவர்களிடம் பேசிய தினகரன், ‘காலத்தைக் கடத்துவதற்காகத்தான் இப்படி ஒரு தீர்ப்பை திட்டம் போட்டு சொல்ல வைத்திருக்கிறார்கள். அவங்க ப்ளான்படி எப்படியும் இன்னும் ஒரு வருஷத்துக்கு இதை இழுத்துடலாம் என்று கணக்குப் போடுறாங்க. நான் ஒரு திட்டம் வெச்சிருக்கேன். அவங்க இனி என்ன உங்களை தகுதி நீக்கம் செய்வது? நீங்களே ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்களாக ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டால் என்ன? எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்கிறேன் என நீங்கள் கடிதம் கொடுத்தால் அதை ஏற்றுத்தான் ஆக வேண்டும்.

அப்படி ஒரு எம்.எல்.ஏ. ராஜினமா செய்துவிட்டால் அந்தத் தொகுதிக்கு 6 மாதத்தில் தேர்தல் நடத்தியாக வேண்டும். எல்லோரும் ஒரே நேரத்தில் ராஜினாமா செய்ய வேண்டாம். யாராவது ஒருத்தர் முதல்ல ராஜினாமா கடிதம் கொடுங்க. அவங்க ரியாக்‌ஷன் என்னவென்று பார்க்கலாம். அதுக்கு பிறகு மற்றவங்க ராஜினாமா செய்வதை பற்றி கலந்து பேசி முடிவு பண்ணிக்கலாம். 18 தொகுதி எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்துவிட்டால், எப்படியும் அந்தத் தொகுதிகளுக்குத் தேர்தல் நடத்த வேண்டும். தேர்தலில் எப்படி ஜெயிக்கிறதுன்னு நமக்கு தெரியும். 18 தொகுதியிலும் அதே வேட்பாளர்கள் போட்டியிடுங்க. செலவுகளை நான் பார்த்துக்குறேன்.ஒரு தொகுதியில்கூட அதிமுக டெபாசிட் வாங்காது. வாங்க விடக் கூடாது...’ என்று சொல்லியிருக்கிறார்.
அதற்கு மானாமதுரை எம்.எல்.ஏ. மாரியப்பன் கென்னடி, ‘நீங்க சொல்றது நல்லாதான் இருக்கு. திரும்பவும் அதிமுக வேண்டுமானால் ஜெயிக்காமல் இருக்கலாம். ஆனால், திமுக ஜெயிக்காது என்பதை எப்படி சொல்ல முடியும்? 18 சீட்டையும் அவங்க பிடிச்சுட்டாங்கன்னா என்ன பண்றது?’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு தினகரன், ‘தேர்தல் என்று வந்தால் போட்டி இல்லாமல் இருக்காது. எல்லாத் தடைகளையும் தாண்டி ஆர்.கே.நகரில் எப்படி ஜெயித்தோம். ஒவ்வொரு தொகுதியையும் ஆர்.கே.நகராக நினைப்போம். ஜெயிப்போம். நீங்க நம்பிக்கை வைப்பதுதான் முக்கியம்...’ என்று சொன்னாரம்.
தங்க தமிழ்ச்செல்வனும் பேசியிருக்கிறார். ‘துணைப் பொதுச் செயலாளர் சொல்றதுக்கு நான் கட்டுப்படுறேன். என் தொகுதி மக்களுக்கு எதுவும் செய்ய முடியலைன்னு எனக்கு ரொம்பவும் வருத்தமாக இருக்கு. இப்போ நான் ராஜினாமா செய்தால், அதுவே எங்க தொகுதி மக்களுக்கு என் மேல அனுதாபத்தை உண்டாக்கும். அந்த அனுதாபமே எனக்கு ஓட்டாக மாறும். இப்போ நான் ராஜினாமா செஞ்சுட்டு திரும்பவும் நின்னாலும் என்னால் ஜெயிக்க முடியும். திமுக எதிர்த்து நின்னாலும் எனக்கு கவலை இல்லை. என் பலம் எனக்கு தெரியும். நீங்க சொன்னபடி நானே முதல்ல ராஜினாமா செய்யுறேன். எனக்கு இந்த திட்டத்துக்கு பரிபூரண சம்மதம். நீதி செத்துடுச்சுன்னு தன் பதவியை ராஜினாமா செஞ்சுட்டான் தமிழ்செல்வன்னு எல்லோரும் பேசுவாங்க. அதைத்தான் நம்ம பலமாக மாத்திக்கணும். நான் ராஜினாமா கடிதம் கொடுத்துடுறேன்..’ என்று சொல்லி இருக்கிறார்.
அதற்கு தினகரன், ‘இதைத்தான் நான் எதிர்பார்த்தேன். தங்க தமிழ்ச்செல்வன் மாதிரி துணிச்சல் உங்க எல்லோருக்கும் வரணும். அவரு முதல்ல ராஜினாமா செய்யட்டும். அதுக்கு எடப்பாடி தரப்புல என்ன ரியாக்‌ஷன் வருதுன்னு பார்க்கலாம். நாம நினைக்கிற மாதிரியான ரியாக்‌ஷன் வந்தால் எல்லோரையும் ராஜினாமா செய்ய வைப்போம். இல்லை என்றாலும் தங்கத்தை எல்லோரும் சேர்ந்து திரும்பவும் ஜெயிக்க வைப்போம். இதுல ஒரு விஷயம், எந்தக் காரணத்துக்காகவும் நான் சொல்லித்தான் நீங்க ராஜினாமா செய்வதாக எந்த இடத்திலும் சொல்லிட வேண்டாம். உங்க தொகுதிக்கு எதுவும் செய்ய முடியவில்லை என்பதால் தொகுதி மக்கள் நலனை மனதில் வைத்து ராஜினாமா செய்வதாக சொல்லுங்க. அதுதான் மக்களிடம் அனுதாபத்தை உண்டாக்கும்...’ என்று ஐடியா கொடுத்திருக்கிறார். அதற்கு தங்க தமிழ்ச்செல்வனும் தலையாட்டி இருக்கிறார்.
தினகரன் சொன்னபடியே வரும் திங்கள் அல்லது செவ்வாய் கிழமை, தனது ராஜினாமா கடிதத்தை கொடுப்பாராம் தங்க தமிழ்ச்செல்வன்.” என்று முடிந்த மெசேஜ்க்கு செண்ட் கொடுத்தது வாட்ஸ் அப்.
அதற்கு ஃபேஸ்புக், “இதெல்லாம் முதல்வர் எடப்பாடிக்கு தெரியாமலா இருக்கும். என்ற கேள்வியை போட... பதிலை டைப்பிங் செய்தது வாட்ஸ் அப்.
“அவங்க என்ன வேணும்னாலும் செய்யட்டும். அதிகபட்சமாக 18 தொகுதிக்கும் தேர்தல்தானே வரும்... ஆர்.கே.நகரில் ஏமாந்த மாதிரி இப்பவும் ஏமாற மாட்டேன். அப்போ பார்த்த எடப்பாடி வேற... இப்போ பார்க்கும் எடப்பாடி வேற...’ என்று சொல்லி இருக்கிறார் எடப்பாடி. அவரும் தேர்தல் வந்தால் சமாளிக்க ரெடியாகவே இருக்கிறார்”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக