வியாழன், 14 ஜூன், 2018

18 அதிமுக எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று பகல் 1 மணிக்கு தீர்ப்பு

HC to deliver verdict on 18 AIADMK MLAs Disqualification case on today tamil.oneindia.com/ Mathi :சென்னை: தினகரன் ஆதரவு 18 அதிமுக எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று பகல் 1 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்றக் கோரி கடந்த ஆண்டு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏக்கள் மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நம்பிக்கை வாக்கெடுப்பு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக மனுத் தாக்கல் செய்தது. இந்த வழக்கு தொடரப்பட்டதையடுத்து தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய சபாநாயகர் தனபாலுக்கு அதிமுக கொறடா ராஜேந்திரன் பரிந்துரைத்தார். இதையடுத்து 18 எம்.எல்.ஏக்களையும் சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் 18 எம்.எல்.ஏக்களும் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய பெஞ்ச் கடந்த ஜனவரி 24-ந் தேதி வழக்கு விசாரணைகளை முடித்து தீர்ப்பை ஒத்தி வைத்தனர்.

இவ்வழக்கின் தீர்ப்பு இன்று பகல் 1 மணிக்கு வழங்கப்பட இருக்கிறது. 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என தீர்ப்பளித்தால் 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லாது என தீர்ப்பளிப்பத்தால் முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழக்கும் நிலை உருவாகும்.
அதேநேரத்தில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினால் இன்னொரு பெஞ்ச் விசாரித்து தீர்ப்பளிக்கும் வரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு பாதிப்பும் ஏற்படாது. இதனால் தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக