சனி, 12 மே, 2018

வாட்சைப் வதந்திகளால் அப்பாவிகளை மீது தாக்கும் தொடர்கிறது பழவேற்காடு கொலையில் 18 பேர் கைது

அப்பாவிகளை கிராமத்தினர் தாக்கும் சம்பவம் தொடர்கிறது பழவேற்காடு கொலையில் 18 பேர் கைதுதினத்தந்தி :குழந்தைகளை கடத்த வந்ததாக சந்தேகப்பட்டு கிராமத்தினர் அப்பாவிகளை தாக்கும் சம்பவங்கள் தொடர்கிறது. பழவேற்காட்டில் மனநிலை பாதித்தவரை கொலை செய்ததாக 18 பேர் கைது செய்யப்பட்டனர். திருவள்ளூர், காஞ்சீபுரம், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் குழந்தைகள் கடத்தப்படுவதாகவும், இதற்காக வடமாநில கும்பல் வந்துள்ளதாகவும் சமூகவலைத்தளங்களில் வதந்தி பரவியது. இதனால் இந்த மாவட்டங்களில் கிராமத்தினர் அப்பாவிகளை தாக்கி வருகிறார்கள். இதில் பலர் உயிரையும் இழந்துள்ளனர். எனவே போலீசார் ஆட்டோக்களில் ஒலிபெருக்கி வைத்து கிராமங்களில் விழிப்புணர்வு பிரசாரம் செய்துவருகிறார்கள். சந்தேகப்படும்படியாக யாராவது சுற்றித்திரிந்தால் அவர்களை தாக்க வேண்டாம், உடனே போலீசுக்கு தகவல் தெரிவியுங்கள் என்று கூறிவருகிறார்கள். ஆனால் இதையும் மீறி அப்பாவிகள் மீதான தாக்குதல் தொடர்ந்து வருகிறது.


திருவள்ளூரை அடுத்த பூண்டி பொன்னியம்மன் கோவில் அருகே நேற்று 35 வயது மதிக்கத்தக்க வடமாநில வாலிபர் ஒருவர் சந்தேகப்படும் விதமாக சுற்றிக்கொண்டிருந்தார். அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இதைப் பார்த்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அந்த வடமாநில வாலிபர் குழந்தைகளை கடத்த வந்தவர் என்று நினைத்தனர். அவரை சுற்றிவளைத்து சரமாரியாக அடித்து உதைத்து அங்குள்ள மின்கம்பத்தில் கட்டிவைத்தார்கள்.

இதுகுறித்து தகவல் அறிந்த புல்லரம்பாக்கம் போலீசார் விரைந்து சென்று பலத்த காயம் அடைந்த அந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தார்கள். போலீசார் இதுதொடர்பாக பூண்டியை சேர்ந்த துரை, குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

2 நாட்களுக்கு முன்னர் பழவேற்காடு வைரவன்குப்பம் மீனவ கிராமத்தில் மனநிலை பாதிக்கப்பட்டவரை குழந்தை கடத்தும் கும்பலை சேர்ந்தவர் என கருதிய பொதுமக்கள் அவரை தாக்கி திருப்பாலைவனம் போலீசில் ஒப்படைத்தனர்.

அதேபோல் நேற்று முன்தினம் பொன்னேரியை அடுத்த பெரும்பேடு லட்சுமிபுரம் கிராமத்தில் கிளி ஜோதிடர் ஒருவர் வந்தார். அவரிடம் பொதுமக்கள் சரமாரியாக கேள்வி கேட்டனர். பதில் சொல்ல முடியாத அவரை பொதுமக்கள் தாக்கியதையடுத்து ஜோதிடர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

பொன்னேரியை அடுத்த பழவேற்காடு பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவரை அடித்து கொலை செய்து உடலை மேம்பாலத்தில் தொங்கவிட்டனர். இதுகுறித்து திருப்பாலைவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அவரை கிராமத்தினர் தாக்கிய காட்சிகள் சமூக வலைத்தளத்தில் பரவியது.

அந்த படத்தில் உள்ள நபர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி உத்திரவிட்டார். அதன்பேரில் போலீசார் சுற்று வட்டார பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதனால் பல்வேறு கிராமங்களில் உள்ள வீடுகளில் இருந்து ஆண்கள் வெளியேறிவிட்டனர். ஆனாலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி 18 பேரை கைது செய்தனர்.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த லட்சுமணன் (33) என்பவர் சோழவரம் அருகே ஒரு கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் பொன்னேரி மெதூர் கிராமத்தில் உள்ள நண்பர் வீட்டிற்கு சென்றுவிட்டு, அங்குள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு நடந்து வந்துகொண்டிருந்தார்.

அப்போது அந்த கிராமத்தை சேர்ந்த 4 பேர் லட்சுமணனை இரும்பு கம்பியால் தாக்கினர். பொன்னேரி போலீசார் இதுதொடர்பாக சரண்ராஜ் (26), மகேந்திரன் (28) ஆகிய 2 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

காஞ்சீபுரம் அருகே குழந்தை கடத்தும் கும்பல் என நினைத்து ஒடிசா மாநிலத்தை சேர்ந்த நிதானிஜீனா (46) என்ற கட்டிட தொழிலாளியை கிராமத்தினர் அடித்து உதைத்தனர். இதில் பலத்த காயமடைந்த அவர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் வழக்கு பதிவு செய்து, அமீது (25), தினகரன் (23), மன்சூர்அலி (25) ஆகிய 3 பேரை கைது செய்தார்.

வடமாநிலத்தை சேர்ந்த அசித்புஜ்ஜிர் (25) என்பவரை காஞ்சீபுரம் தாயாரம்மன்குளம் அருகே ஒரு கும்பல் அடித்து உதைத்தது. இதில் காயமடைந்த அவர் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக பெரிய காஞ்சீபுரம் இன்ஸ்பெக்டர் பழனி வழக்கு பதிவு செய்து சுரேஷ் (25), ஜெகதீஸ் (23), சம்பத் (20), பிரசாந்த் (20), கார்த்தி (28), ராமச்சந்திரன் (31) ஆகிய 6 பேரை கைது செய்தார்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் அதிமானி கூறும்போது, “வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் காஞ்சீபுரம் மாவட்டத்தில் தனியார் நிறுவனங்களுக்கு வேலைக் காக வந்துள்ளனர். அவர்களை கணக்கெடுக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை வடமாநிலத்தவர்கள் தாக்கப்பட்ட வழக் கில் 11 பேரை கைது செய்துள்ளோம். தவறான தகவல்களை பரப்புபவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டம் முழுவதும் போலீசார் விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகின்றனர்” என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக