திங்கள், 7 மே, 2018

வீடுதேடி வந்து கல்லூரியில் இடம் கொடுத்த கலைஞர் அரசு ... அந்த இட ஒதுக்கீட்டுக்கு NEET வேட்டு !

Srinivasan J : பிறந்து வளர்ந்தது குக்கோ குக்கிராமம். 10 ம் வகுப்பு வரை உள்ளூர்
பள்ளி. போஸ்ட் பாக்ஸ் டவுசரில் அங்கங்கே ஒட்டி மஞ்சப்பையுடன் முடித்தேன். 12 ம் வகுப்பு வெளியூர். பேண்ட் போட்டே ஆகவேண்டும் என்பதால் முதன் முறையாக ஒரே ஒரு பேண்ட் எடுத்து இரு வருடமும் அதே தான். முதன் முதலாக செருப்பும் அப்போதுதான்.. ரப்பர் செருப்பு. 1989 ம் வருடம்.. 12 ம் வகுப்பில் நல்ல மதிப்பெண். engineering medicine பற்றிய பெரிய அறிவு இல்லை. கலைஞர் மீண்டும் முதல்வராகிறார்.
20 சதவீதம் MBC இட ஒதுக்கீடு அளிக்கிறார். இட ஒதுக்கீடு என்றால் என்னெவென்றே தெரியாத வயது.. அதாவது ஊர். எல்லோரும் இன்ஜினியரிங், மெடிசின் அப்பளை பண்ணும்போது நானும் அப்பளை பண்ணேன். பின் மறந்தே போனேன். ஒரு நாள் நல்ல மழை.. கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. எங்கள் ஊரில் உள்ள போஸ்ட் மேன் வந்து ஒரு கவரை தருகிறார். பிரித்து பார்க்கிறேன். சேலம் பொறியிற் கல்லூரியில் இடம் கிடைத்ததற்கான கடிதம். பெரு மகிழ்ச்சி எல்லாம் அடையவில்லை. பெருமகிழ்ச்சி அடைய வேண்டும் என்ற அந்த அறிவு கூட இல்லை.
எல்லோருடன் சேர்ந்து படிக்கிறேன். அப்போதுதான் இந்த இட ஒதுக்கீடு, தன்னிச்சையாய் கிடைத்த அருமை எல்லாம் புரிந்தது. இன்று நல்ல நிலையில் இருக்கிறேன். அன்று கலைஞர் அந்த 20 சதவீத இடஒதுக்கீட்டினால் நான் நிகைக்காத பொறியிற் படிப்பும் என் வீடு தேடி வந்து என் கதவை தட்டியது. எங்கும் அலையவில்லை. வருடத்திற்கு 360 ரூபாய் கட்டணம். நான்கு வருடங்களுக்கும் சேர்த்து 1440ரூபாயில் குடும்பத்தின் முதல் பட்டதாரியாய் முடித்தேன். அந்த நன்றி இருக்கிறது! காலமெல்லாம் கலைஞர்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக