திங்கள், 21 மே, 2018

எழுத்தாளர் பாலகுமாரன் ..இது நம்மாளு,.நாயகன் படங்களின் கதை வசனம் ...

தமிழுக்கு அவர் அளித்த பரிசுகளுக்கு நன்றி: கமல்மின்னம்பலம் :தமிழுக்கு அவர் கொடுத்துச் சென்ற பரிசுகளுக்கு நன்றி. தமிழ் அவருக்கு அதையும்விட அதிக பரிசுகள் தந்திருக்கிறது என்று மறைந்த எழுத்தாளர் பாலகுமாரனுக்கு புகழாரம் சூட்டியுள்ளார் கமல்ஹாசன்.
பிரபல எழுத்தாளரும் வசனகர்த்தாவுமான  பாலகுமாரன் கடுமையான நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி மே 15ஆம் தேதி காலமானார். அவரது மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன், ராஜ்கிரண், இயக்குநர் அட்லி, மனுஷ்யபுத்திரன், பார்த்திபன், நாசர், சிவகுமார், விவேக், மனோபாலா, இயக்குநர் லிங்குசாமி உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொறுபேற்ற கமல்ஹாசன் தீவிர அரசியல் சுற்றுப் பயணத்தில் இருந்ததால், அஞ்சலி செலுத்த வரவில்லை. இந்த நிலையில் இன்று (மே 21) சென்னை மயிலாப்பூரில் உள்ள பாலகுமாரன் வீட்டிற்குச் சென்றார். பாலகுமாரன் வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.


அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த கமல், “பாலகுமாரன் அவர்கள் சினிமாவுக்கு வருவதற்கு முன்னால் இருந்தே எனக்கு தெரியும். இளம் எழுத்தாளர். நெருப்பு பறக்க எழுதும் மெர்க்குரி பூ என்பது அப்போதே தெரிந்தது. காலம் சென்ற சுப்ரமணிய ராஜு, பாலகுமாரன், நான் எல்லோரும் பல கதைகளைப் பற்றி பேசிக்கொண்டிருப்போம். நவ சினிமாவைப் பற்றியும், நாவல், சிறுகதை குறித்தும் விவாதித்துக்கொண்டிருப்போம். நாங்கள் யாருமே எவ்வளவு பெரிய ஆள் என்பதை உலகம் நிர்ணயிக்க, நேரம் எங்களுக்குள் அதை உணர்ந்திருந்த நேரம். எங்கள் பேச்சுக்களிலெல்லாம் வானளாவிய நம்பிக்கை இருந்தது. தமிழ் சினிமாவை மாற்றுவது என்பதையெல்லாம் பேசிவிட்டோம். அதற்கான அனுபவமும் வயதும் எங்களுக்கு இருக்கிறதா என்பதை யோசிக்காமல் ஆர்வத்துடன் பேசிக்கொண்டிருப்போம்” என்றார்.
தொடர்ந்து பேசியவர், “பாலகுமாரனை சினிமாவுக்கு வரவேண்டுமென வற்புறுத்தியது நான்தான். பாலசந்தர் அவர்களிடம், பாக்யராஜ் அவர்களிடம் அவர் பணியாற்றியிருக்கிறார். எங்களோடும் ஒரு படம் பணியாற்றியுள்ளார். நாயகன் மிக முக்கியமான படம்.
ஒரு அற்புதமான எழுத்தாளர். நாங்கள் இருவரும் சேர்ந்துகூட கதை எழுதியிருக்கிறோம். சந்தோஷமான நாட்கள். ஆனால் எல்லா கதைகளும் ஒரு முடிவுக்கு வர வேண்டும். இது நல்ல முடிவுதான் என்று சொல்ல வேண்டும். குழந்தைகள் தந்தையைப் பற்றி பெருமையாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இது ஒரு நல்ல வாழ்க்கைதான். நாங்கள் அனுபவித்த வாழ்க்கையின் ஒரு பகுதி இவருடைய வாழ்க்கை. நன்றாக வாழ்ந்து சென்றிருக்கிறார். தமிழுக்கு அவர் கொடுத்துச் சென்ற பரிசுகளுக்கு நன்றி. தமிழ் அவருக்கு அதையும்விட அதிக பரிசுகள் தந்திருக்கிறது” என்று புகழாரம் சூட்டினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக