வெள்ளி, 18 மே, 2018

புலிகளால் திமுக இழந்தது ஏராளம் ... புலிகளால் முழுக்க முழுக்க பயன் அடைந்தது அதிமுக

Vallialagappan Alagappan : 1965 காலத்து மாணவர்கள் எல்லாம் ஹிந்தி எதிர்ப்புக்காக போராடியதைப்போல, 1985 காலத்து மாணவர்கள் எல்லாம் ஒரு நாளாவது இலங்கை தமிழனுக்காக போராடியவர்களாகத்தான் இருப்பார்கள். இரண்டிலும் திமுகவின் பங்களிப்பை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது.
45 வயதைக்கடந்த எஞ்சோட்டு திமுக அபிமானிகள் எல்லாம் தங்களின் இளமைக்காலத்தில் கண்டிப்பாக பிரபாகரன் ஆதரவாளர்களாக இருந்தவர்கள் தான். வரலாற்றில் யார் யாரையோ, மன்னன், மாவீரன் என படித்திருந்தாலும் கூட , கண்கூடாக, சமகாலத்தில் நாங்கள் கண்ட மன்னன், மாவீரன் எல்லாம் பிரபாகரன் என்ற அந்த அண்ணனைத்தான். அப்படி கொண்டாடினோம் அவரை. ராஜீவ் இறந்தபோது திமுக பொறுப்பாளர்கள் யாரும் வீட்டில் தங்க முடியாத பாதுகாப்பற்ற நிலை தான் இருந்தது என்ற ஒன்று சொல்லும், திமுக - பிரபாகரன் இடையே இருந்த உறவை.
எம்ஜிஆருக்கு பயந்துகொண்டு, கலைஞரின் பிறந்தநாள் வசூல் 50 ஆயிரத்தை வாங்க மறுத்தபோது எங்கள் மனதில் பிரபாகரன் பற்றிய உறுத்தல் வந்தது. கலைஞரின் வேண்டுகோளை உதாசீனப்படுத்தி சபாவை கொன்றபோது கொஞ்சம் பொருமல் வந்தது. கலைஞர் ஆட்சிக்கு கெட்ட பெயர் வருவது பற்றி எல்லாம் கவலைப்படாமல் பத்மநாபா கொலை நடந்து, ஆட்சி இழந்து திமுக நின்றபோது சலிப்பு வந்தது. ராஜீவையும் 18 அப்பாவி தமிழர்களையும் நம் மண்ணிலேயே கொன்று முடித்தபோது ஒட்டுமொத்த தமிழ் மக்களின் வெறுப்பு வந்து , நம்மிடமிருந்து முற்றிலும் அந்நியப்பட்டு போனார் பிரபாகரன். ராஜீவ் கொலையின் சந்தேக நிழல் திமுக மீது படர்ந்தபோதும் கூட , பிரபாகரனை வெளிப்படையாக குற்றம் சொல்லாமல் மவுன சாட்சியாக நின்றுவிட்டது திமுக.

பிரபாகரன் உறவால் திமுக இழந்ததே அதிகம்.
2009ல் பிரபாகரன் சுற்றி வளைக்கப்பட்டதாக செய்தி வந்தபோது எல்லோரும் கலங்கிப்போனோம். பிரபாகரன் இறந்துவிட்டதாக செய்தி வந்தபோது ஊமை அழுகை தான் அழ முடிந்தது. எங்களின் அண்ணனாக , எங்களுக்கு உதாரண புருஷனாக, மாவீரனாக இருந்த அதே பிரபாகரன், கால ஓட்டத்தில் எங்களுக்கு அந்நியப்பட்டு, மனதில் ஒட்டாமல், விலகியே போய்விட்டார் என்பது தான் கசப்பான உண்மை.
மே 18 , பல நினைவலைகளை எங்களுக்குள் கொண்டு வந்து சேர்க்கிறதென்றாலும், ஆழ்கடலின் அமைதியைப்போல, அந்த நாளை சலனமில்லாமல் கடந்துபோகவும் பழகிக்கொண்டோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக