ஞாயிறு, 20 மே, 2018

நீதிபதி செலமேஸ்வர் : பாராட்டு தேவையில்லை குரல் கொடுங்கள்

பாராட்டு தேவையில்லை குரல் கொடுங்கள் : நீதிபதி செலமேஸ்வர்மின்னம்பலம் :தன்னைப் பாராட்டும் நீதிபதிகளிடமெல்லாம், பிரச்னைகளுக்கு எதிராக நீங்களும் குரல் எழுப்ப வேண்டும் என்று தான் வேண்டியதாக நீதிபதி செலமேஸ்வர் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் இரண்டாம் நிலையில் உள்ள நீதிபதியான ஜஸ்தி செலமேஸ்வர் வரும் ஜூன் 22ஆம் தேதியோடு ஓய்வு பெறுகிறார். எனினும் நீதிமன்றங்களுக்கான கோடை விடுமுறை காரணமாக கடந்த மே 18ஆம் தேதியுடன் அவருக்கான கடைசி பணிநாள் முடிந்து போனது.
தனது கடைசி பணிநாளின்போது வழக்கறிஞர்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் செலமேஸ்வர் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “ஏதாவது தவறாக நடப்பதாக உங்களுக்குத் தெரிந்தால், அதை நீங்கள் கேள்வி கேட்கவேண்டும். முன்னாள் நீதிபதிகள் என்னை அழைத்துப் பாராட்டும்போது, நீங்களும் பேசுங்கள் என்று நான் அவர்களிடத்தில் வலியுறுத்துவேன்” என்று கூறினார்.

உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதிகள், தன்னைப் பாராட்டும்போது ஒருவித சஞ்சலம் ஏற்படுவதாக குறிப்பிட்ட செலமேஸ்வர், “ எனினும், நீங்களும் பேச வேண்டும் என்று நான் அவர்களிடம் கூறுவேன். சரியானவற்றைப் பாதுகாக்க வேண்டும். சந்தேகத்துக்கு இடமாக ஏதாவது இருந்தால் அதனைச் சோதித்து சரி செய்திட வேண்டும். ஏதாவது தவறாக இருந்தால் அதை அழித்திட வேண்டும். அந்த எண்ணத்தில்தான் நான் பணியாற்றினேன். நீதித் துறையில் யார் மீதும் எனக்குத் தனிப்பட்ட விரோதம் இல்லை. சில விஷயங்கள் தவறாக நடக்கின்றன என்பதை உணர்ந்ததால் எழுந்து நின்று கேள்விகளை எழுப்பினேன்” என்றும் தெரிவித்தார்.
கடந்த ஜனவரி மாதம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், மதன் பி லோகூர் மற்றும் குரியன் ஜோசப் ஆகியோருடன் ஊடகத்துக்கு அளித்த பேட்டியையும் தனது பேச்சின்போது அவர் குறிப்பிட்டார்.
“எந்த சட்டத்தில் நீதிபதிகள் பத்திரிக்கையாளர் சந்திப்பைக் கூட்டக்கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தங்களின் தீர்ப்பை பாதுகாப்பதற்காக நீதிபதிகள் அவ்வாறு செய்யக்கூடாதா?. இதனால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும் என்று அப்போதே எனக்குத் தெரியும். அவற்றை ஏற்றுக்கொள்ளத் தயாராகவே இருந்தேன்” என செலமேஸ்வர் குறிப்பிட்டார்.
மேலும், மூத்த வழக்கறிஞர்கள் தனக்கு எதிராக இருந்ததாக குறிப்பிட்ட அவர்,” இளம் தலைமுறையினர் எனக்கு ஆதரவாக இருந்தனர். மூத்தவர்கள் எப்போதாவதுதான் நீதிமன்றத்தில் தங்களின் வாயைத் திறப்பார்கள். தெளிவான நிலைபாட்டையும் அவர்கள் விரைவில் எடுக்க மாட்டார்கள். ஒரு நாளைக்கு ஒரு கோடி வாங்கும் வழக்கறிஞர்கள் எல்லாம் கடைசியாக எப்போது தங்களின் வாயைத் திறந்துள்ளனர் என்பதை எண்ணி நான் வியப்படைந்திருக்கிறேன்” என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக