வியாழன், 10 மே, 2018

கர்நாடகா தேர்தல் ... சித்தராமையா அளவுக்கு பாஜகவில் இன்று வரை தலைவர் எவருமில்லை!


  சவுக்கு : “மதில் மேல் பூனை” யாக இருக்கும் வாக்காளர்களை பாஜகவுக்கு ஆதரவாக திருப்ப முடியும் என மோடி அவர் நம்புவதால், கர்நாடகாவில், ஏற்கெனவே திட்டமிட்டிருந்தபடி 15 இடங்களுக்குப் பதிலாக, 21 இடங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
ஆனால் இது மோடிக்கு ஒரு எளிதான காரியமாக இருக்காது. காரணம், பரபரப்பு குறைவாக உள்ள இந்த சட்டமன்ற தேர்தல் எந்தவிதமான பாரதூர விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய  பிரச்சனைகளை கண்டிருக்கவில்லை.  உண்மையில், எந்தவித முக்கிய பிரச்சினைகளும் இல்லாத வழக்கமான தேர்தல்களைப்போல,  மந்தமாக, இருப்பதால், வாக்காளர்கள் ஏற்கனவே யாருக்கு வாக்களிப்பது என்று முடிவு செய்திருப்பார்கள்.   இதன் காரணமாக  மதில்மேல் பூனையாக உள்ள வாக்காளர்கள் போதுமான எண்ணிக்யைில் இருக்க மாட்டார்கள். ஆகையால், மோடியின் இந்த 21 தேர்தல் பேரணிகள் கர்நாடக வாக்காளர்கள் மீது உண்மையிலேயே எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது  ஆராய வேண்டிய விஷயம்.
மோடியின் பிரத்யேக தேர்தல் பிரச்சார உத்தி இன்னும் குழப்பமாக இருக்கிறது. அதற்கு காரணம், கர்நாடக சட்டமன்ற தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் ஒருவேளை அறுதிப்பெரும்பான்மை இடங்கள் கிடைக்காமல் “தொங்கு சட்டமன்றம்“ உருவானால் அப்போது எச்.டி.தேவெ கவுடாவின் கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளமும் பாஜகவும் இணைந்து அரசு அமைக்கும் என பெரும்பாலான தேர்தல் கருத்து கணிப்புகள் தெரிவிக்கிற நிலையில், பிரதமர் மோடி தற்போது, மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சி இடையே ஒரு ரகசிய புரிந்துணர்வு (சீக்ரெட் அன்டர்ஸ்டாண்டிங்)  உள்ளதாக குற்றஞ்சாட்டி அக்கட்சியை தாக்கி வருகிறார்.
பெங்களுருக்கு வெளியே உள்ள தும்கூருவில் நடைபெற்ற ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்தில் பேசுகையில், கர்நாடகாவிலுள்ள மிகவும் மதிக்கத்தக்க தலைவர்களில் ஒருவர் தேவெ கவுடா என அவரைப் புகழ்ந்து தனது பேச்சை தொடங்கினார் மோடி. ஆனால்,  மதச்சார்பற்ற  ஜனதா தளம் இத்தேர்தலில் மூன்றாவது இடத்தையே பிடிக்கும் என்றும் அதனால் அக்கட்சிக்கு வாக்களித்து தங்களது வாக்குகளை வீணடிக்க வேண்டாம் என வாக்காளர்களைக் கேட்டுக்கொண்டு தனது உரையை தொடர்ந்தார். மதச்சார்பற்ற ஜனதா தளம் பல தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியுடன் ரகசிய புரிந்துணர்வு கொண்டுள்ளதாக குற்றஞ்சாட்டி அக்கட்சியை மோடி கடுமையாகத் தாக்கினார். குறிப்பாக, சில தொகுதிகளின் பெயர்களையும் அவர் குறிப்பி்ட்டார். மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் இடையே ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் ஒப்பந்தத்தின் சாராம்சங்களை பிரதமர் மோடி பகிரங்கப்படுத்தியது ஒரு சாதாரண நிகழ்வு அல்ல.
தேர்தலுக்குப் பின்னர் இணைந்து ஆட்சி அமைப்பது குறித்து பாஜகவுக்கும் மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கும் ஒரு ரகசிய புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளதாக பெரும்பாலானோர் நம்புகிறபோது, இது நடக்கிறது. பின்னர் ஏன் மதச்சார்பற்ற ஜனதா தளத்தை தாக்குகிறார் மோடி? இதன்மூலம் மோடி என்ன சாதிக்க முயற்சிக்கிறார்?
கர்நாடக மாநில அரசுக்கு எதராக தற்போது நிலவும் மக்களின் எதிப்புணர்விலிருந்து அம் மாநிலத்தில் ஒரு முக்கிய எதிர்க்கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம் பலனடையக் கூடும் என்று பாஜக அஞ்சுகிறது. எனவே, கர்நாடகாவின் ஆளும் கட்சியாக இருக்கும் காங்கிரசுக்கு நெருக்கமாக மதச்சார்பற்ற ஜனதா தளத்தை சித்தரித்துக் காட்ட பாஜக புத்திசாலித்தனமான முயற்சிக்கிறது.
தனது மகன் குமாரசாமி பாஜகவுடன் உறவு வைத்தால் அவரை கைவிடுவேன் என தேவெ கவுடாவின் அறிக்கை விட்டதைத் தொடர்ந்து, தேர்தல் பிரச்சாரத்தின் பாதியில் இருக்கும் பாஜக பெரும் கலக்கம் அடைந்துள்ளது.  ”கடைசி நேரத்தில் பாஜகவுடன் உறவு வைப்பது மிகப்பெரிய தவறாகும்” என அந்த அறிக்கையில் தேவெ கவுடா தெரிவித்துள்ளார். அவரின் இந்த அறிக்கை பிஜேபி கூடாரத்தில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.   இதுவே  பதிலடி கொடுக்க பிரதமர் மோடியை தூண்டியிருக்கிறது. ஆனால், இதன்மூலம் பாஜகவுக்கு முதலில் கொடுத்த வாக்குறுதிகளிலிருந்து தேவெ கவுடா விலகிச்செல்கிறார் என அர்த்தமாகுமா ?
உண்மை  என்னவெனில், ஒருவேளை தொங்கு சட்டமன்ற உருவானால் தேவெ கவுடாவும் அவரது மகன் குமாரசாமியும் அனைத்து துருப்புச் சீட்டுகளையும் தங்களிடம்  வைத்துக்கொள்வர்.  அடுத்த ஆட்சியை யாரோடு சேர்ந்து அமைப்பது, பிஜேபியோடா அல்லது காங்கிரஸோடா என்பதை அவர்களுக்கு வசதியாக முடிவு செய்ய முடியும்.
தேவெ கவுடா ஒரு புத்திசாலியான அரசியல்வாதி. எண்ணிக்கையைப் பொறுத்தவரை பாஜக சரிவர வெற்றி பெறவில்லை எனில், 2019ல் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தங்களின் “வாய்ப்பை“ அடிப்படையாகக்கொண்டு தங்களது சாத்தியமான பங்காளியை (பாஜக அல்லது காங்கிரஸ்) தேவெ கவுடா மதிப்பிடுவார்.
உண்மையில், மோடியின் கடைசி கட்ட முயற்சிகள் பிஜேபிக்கு எந்தவித லாபமும் தரவில்லை என்று கவுடா கருதினால், அவர் 2019 ல் தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் கூட்டணியில் இருக்க காங்கிரசுடன் பேரம் பேசக்கூடும்.
2013ல் நடைபெற்ற  தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளமும் பாஜகவும் இணைந்து 20 சதவீத வாக்குகளைப்பெற்று தலா 40 இடங்களையும் பெற்றன. எடியூரப்பாவின் கர்நாடக ஜனதா பக்ஷாவின் 10 சதவீத வாக்குகளையும் சேர்த்தால், வாக்கு சதவீதம் 30 ஆகிறது. (பாஜகவின் தற்போதைய முதல்வர் வேட்பாளராக உள்ள எடியூரப்பா தனது கட்சியை கடந்த 2014ல் பாஜகவுடன் இணைத்தார்). இதனுடன் சுரங்க அதிபர்கள் ரெட்டி சகோதரர்களின் கட்சியான பி.எஸ்.ஆர். காங்கிரஸின் பங்காக 3 சதவீத வாக்குகளையும் சேர்த்தால் பாஜகவின் வாக்கு சதவீதம் 33 சதவீதமாக உயர்கிறது. (B. Sriramulu வின்  BSR Congress 2014ல் பாஜகவுடன் இணைந்தது). ஆயினும், காங்கிரஸைவிட பாஜகவின் வாக்கு சதவீதம் இன்னும் 3 சதவீதம் குறைகிறது. காங்கிரஸின் வாக்கு  சதவிகிதம் 36 ஆகும்.
எனவே, பாஜகவுக்கு தீர்க்கமான வெற்றி தருமாறு மக்களை வலியுறுத்தி அந்த 3 முதல் 4 சதவீத வாக்குகைளைப் பெறவே தனது கடைசி மைல் பிரச்சாரத்தின் மூலம் மோடி முயற்சிக்கிறார். இந்த சூழலில்தான, மதச்சார்பற்ற ஜனதா தளத்தை கைவிட்டு,  பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என தேவெ கவுடாவின் ஆதரவாளர்களை மோடி வலியுறுத்தி வருகிறார்.
பாஜக ஒரு தலித்தை குடியரசுத் தலைவராகவும் ஒரு பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரை பிரதமாரகவும் பாஜக ஆக்கியிருக்கிறது எனக் கூறி தலித்துகள் மற்றும் பிற்பட்ட வகுப்பினரின் வாக்குகளை பெற குறிவைத்து செயல்பட்டு வருகிறார் மோடி. மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் ஆதரவாளர்களான தலித் சாதியினரையும் பிற்பட்ட வகுப்பினரையும் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தி வருகிறார்.
மாநிலத்தில் மொத்தம் 24 சதவீத வாக்காளர்களைக் கொண்ட தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் இனத்தவரின் வாக்குகளைப்பெற தற்போதைய முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான சித்தராமையா தீவிரமாக செயல்பட்டு வருகிறார் என்பது பாஜகவுக்கு தெரியும். மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் பிரதான ஆதரவு தளம் 12 சதவீத வாக்குகளைக் கொண்ட ஒக்கலிகா சமூத்திலிருந்து வருகிறது. எஸ்.சி மற்றும் எஸ்.டி இனத்தவரின் வாக்குகளில் ஒரு நியாயமான பங்கு மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு கிடைக்கிறது. சொந்தமாக அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு எஸ்.சி. மற்றும் எஸ்.டி. இனத்தவரின் வாக்குகளில் ஒரு கணிசமான பங்கை பெறுவதன் முக்கியத்துவத்தை பாஜக அறிந்துள்ளது. எனவே மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு வாக்களித்து தங்களது வாக்குகளை வீணடிக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடைசி கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் மோடியின் வெற்றியானது, பாஜகவுக்கு ஆதரவாக அந்த 3 முதல் 4 சதவீத வாக்குகளை உறுதியாக பெறுவதைப் பொறுத்தது. தனது தனிப்பட்ட கவர்ச்சியின் அடிப்படையில் மோடி அதை சமாளிப்பாரா என்பது பெரிய கேள்வியாகும். கர்நாடகா உத்தரப்பிரதேசம் அல்ல என்று பலர் வாதிடுகின்றனர். மோடிக்கு இன்னும் பிடிபடாத ஒரு வேறுபட்ட கலாச்சார மரபில் அந்த தென்னக மாநிலம் (கர்நாடகா) இயங்குகிறது. மேலும், சித்தராமையாவின் அளவுக்கு பாஜகவில் இன்று வரை தலைவர் எவருமில்லை. பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில் பிரதிபலிக்கின்ற மாதிரி, இதுவே மற்றவர்களை விட காங்கிரசுக்கு ஒரு ஆதாயத்தை கொடுக்கிறது.
எம்.கே.வேணு
நன்றி தி வயர் இணையதளம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக