வெள்ளி, 18 மே, 2018

எம் எல் ஏக்களை விரட்டி பிடிக்க முழுமூச்சில் பாஜக ... ஜனார்த்தன் ரெட்டி களத்தில்

எம்.எல்.ஏக்கள் வேட்டை: தயாராகும் ஜனார்த்தன ரெட்டிமின்னம்பலம: கர்நாடக முதல்வராக எடியூரப்பா நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைத்த ஆளுநர் வஜுபாய் வாலா 15 நாள்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். பாஜக 104 தொகுதிகளிலும் காங்கிரஸ் 78 தொகுதிகளிலும் ஜனதா தளம் (மதச்சார்பற்றது) 37 இடங்களிலும் வென்றுள்ளன. 15 நாள்கள் மட்டுமே அவகாசம் உள்ளதால், காங்கிரஸ் மற்றும் மஜத கட்சியில் இருந்து எம்.எல்.ஏக்களை இழுக்கும் முயற்சியை பாஜக தொடங்கியுள்ளது. இதைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள ஜனார்த்தன ரெட்டி திட்டமிட்டுள்ளார்.
பாஜகவில் செல்வாக்கு மிக்க தலைவராக இருந்தவர் ஜனார்த்தன ரெட்டி. எடியூரப்பாவின் முந்தைய ஆட்சியின்போது அமைச்சராகவும் ஜனார்த்தன ரெட்டி இருந்துள்ளார். பின்னர், பல ஆயிரம் கோடி அளவுக்குக் கனிம வளங்களைச் சுரண்டியதாக வழக்குகள் பதியப்பட்டதையடுத்து தனது பதவியை அவர் ராஜினாமா செய்தார். மூன்றாண்டுகள் சிறையிலும் அடைக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஜனார்த்தன ரெட்டியைக் கட்சியில் ஓரங்கட்டி வைத்திருந்தார்.

தற்போது பெரும்பான்மையை நிரூபிக்க எம்.எல்.ஏக்களை பாஜக பக்கம் இழுப்பதன் மூலம் தனது செல்வாக்கைக் கட்சியில் மீண்டும் உயர்த்த ஜானர்த்தன ரெட்டி தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக பாஜக தலைவர்களுடன் ஆலோசிப்பதற்காக ஜனார்த்தன ரெட்டி டெல்லி சென்றுள்ளார்.
கர்நாடகாவில் கடந்த 2008ஆம் ஆண்டு ‘ஆபரேஷன் கமல்’ என்னும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதாவது, எம்.எல்.ஏக்களை பாஜக பக்கம் (கமல் - தாமரை) இழுக்கும் திட்டம். இப்போதும் ஆபரேஷன் கமலைப் பயன்படுத்தி காங்கிரஸ் - மஜத எம்.எல்.ஏக்களை பாஜகவுக்கு இழுக்கும் பணிகள் நடைபெறுவதாகத் தகவல்கள் வெளியாகின. முந்தைய ஆபரேஷன் கமலில் பெரும்பங்காற்றிய ஜனார்த்தன ரெட்டி இம்முறையும் களத்தில் இறங்கியுள்ளார்.
காங்கிரஸ் தரப்பில் தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளதாகக் கூறப்படும் எம்.எல்.ஏக்கள் ஆனந்த் சிங் மற்றும் நாகேந்திரா ஆகிய இருவருமே ஜனார்த்தன ரெட்டியுடன் நீண்ட நாள்கள் தொடர்பில் உள்ளனர். சுரங்க ஊழலில் ஜனார்த்தன ரெட்டிக்கு இருவரும் உதவி செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜனார்த்தன ரெட்டிக்கு நெருக்கமானவரான பாஜக எம்.எல்.ஏ ஸ்ரீராமுலு காங்கிரஸ் எம்.எல்.ஏக்களைத் தொடர்புகொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக என்டிடிவி ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், துணை முதல்வர் பதவிக்கு முயற்சித்துவரும் ஸ்ரீராமுலு காங்கிரஸ் எம்.எல்.ஏக்களைத் தொடர்புகொள்ள முயற்சித்து வருகிறார். அதேவேளையில், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அனைவரும் தங்கள் போனில் வரும் அழைப்புகளை ரெக்கார்ட் செய்யும் செயலியைத் தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள் என்று அக்கட்சியின் தலைமை அறிவுறுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. ஜனார்த்தன ரெட்டி மூலம் எம்.எல்.ஏக்களை இழுப்பதாக ஒருபுறம் கூறப்படும் நிலையில், அமலாக்கத் துறை மூலம் காங்கிரஸ், மஜத எம்.எல்.ஏக்களை வளைக்கவும் பாஜக முயற்சி செய்து வருவதாக மஜத மாநிலத் தலைவர் குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
அதேநேரத்தில், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வெளிமாநிலங்களுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து முன்னாள் அமைச்சர் சிவக்குமார் கூறுகையில், “எம்.எல்.ஏக்களுக்குப் பாதுகாப்பு தருவதாக ஆந்திரா, தெலங்கானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் அழைப்பு விடுத்துள்ளன. மஜத கட்சி முடிவு செய்யும்பட்சத்தில் வேறுமாநிலத்தில் எம்.எல்.ஏக்களைத் தங்க வைப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக