திங்கள், 28 மே, 2018

தருமு சிவராம்: நட்சத்திரவாசி

எழுத்துலகப் பிரவேசத்தின் ஆரம்பத்தில் தருமு சிவராம் என்றும், பின்னாளில் பிரமிள் என்றும் அறியப்பட்ட இவர், காலம் நமக்கு அருளிய பெரும் கொடை. சிறுபத்திரிகை என்ற கருத்தாக்கத்தின் செம்மையான வடிவமாக, காந்தியுக அர்ப்பணிப்பு உணர்வுடன் சி.சு.செல்லப்பா நடத்திய ‘எழுத்து’ (1959-70) இதழின் மூலம் இளம் வயதிலேயே ஒரு பேராற்றல்மிக்க படைப்பு சக்தியாகவும் விமர்சன சக்தியாகவும் வெளிப்பட்டவர். அறிவியல், மெய்ஞான தத்துவங்களின் மீதான ‘அறிவின் விசார மயமான பிரமிப்புகள்’ அவருடைய படைப்புலகம் என்றால், இலக்கியக் கோட்பாடுகள் சார்ந்த அறிவின் விசாரமயமான அணுகுமுறையே அவருடைய விமர்சன நெறி. தன்னுடைய 20-வது வயதில் ஓர் அபூர்வ ஞானச் சுடராக, ஈழத்தின் திருகோணமலையிலிருந்து எழுத்துப் பிரவேசம் நிகழ்த்தியவர்.
1939, ஏப்ரல் 20-ல் பிறந்த இவரின் முதல் கவிதை, 1960 ஜனவரி ‘எழுத்து’ இதழில் பிரசுரமானது. இதிலிருந்து ஆரம்பம் கொண்ட இவருடைய எழுத்தியக்கம், சிறுபத்திரிகை இயக்கத்தில் ஒரு திகைப்பூட்டும் சக்தியாக எழுச்சி கொண்டது.
தன்னுடைய 23-வது வயதில் ‘மெளனி கதைகள்’ நூலுக்கு, திருகோணமலையில் இருந்து இவர் எழுதிய முன்னுரை, அவருடைய இலக்கிய மேதமைக்கும், தமிழகத்தில் அது அறியப்பட்டிருந்ததுக்குமான பிரத்தியேக அடையாளம். 1970களின் தொடக்கத்தில், தனது அம்மாவின் மரணத்துக்குப் பின், தன் பங்கு சொத்துகளை விற்றுவிட்டு கொஞ்சம் வசதியாகவே தமிழ்நாடு வந்துசேர்ந்தார். தமிழ்நாட்டில் சில நாட்கள் தங்கியிருந்து இலக்கியச் சந்திப்புகள் மேற்கொள்வதென்பதும், பின்னர் இங்கிருந்து பாரீஸ் சென்று ஒரு நவீன ஓவியக் கலைஞனாகவும் சிற்பியாகவும் வாழ்வை அமைத்துக்கொள்வது என்பதுவுமே அவருடைய திட்டமாகவும் கனவாகவும் இருந்தது. ஓவிய, சிற்பக் கலையும் அவருடைய இயல்பான ஆற்றல்களில் ஒன்று.
அவருடைய தமிழக வருகைக்குப் பின், அவருடைய ஆளுமையின் வசீகரம், சில தமிழ்ப் படைப்பாளுமைகளால் வியப்புடன் பார்க்கப்பட்டது. அவருடைய தனித்துவமிக்க மேதமையை உணர்ந்து அவரைப் பேணிப் பாதுகாக்க வேண்டுமென சுந்தர ராமசாமியும் வெங்கட் சாமிநாதனும் பிரயாசை எடுத்துக்கொண்டனர். சிறுபத்திரிகை வெளியின் ஒரு சிறு வட்டம் அவரை அரவணைத்துக்கொண்டது. இங்கேயே நீடித்து இருந்துவிட்டார். அதேசமயம், கையிருப்பும் கரைந்தது. பாரீஸ் கனவும் கலைந்தது. வாழ்நாளின் இறுதிவரை அவர் தமிழகத்திலேயே நிலைத்திருந்தார். ஈழத்தைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழக எழுத்தாளர் என்பதே அவருடைய அடையாளமாகவும் ஆனது.
என் 21-வது வயதில், 1973-74ல் நவீனத் தமிழ் இலக்கியத்தோடும், சிறுபத்திரிகைகளோடும் என் உறவு தொடங்கியது. இக்காலகட்டத்தில் தருமு சிவராமின் படைப்பு மற்றும் விமர்சனங்கள் என்னுள் ஆழமான பாதிப்புகளை நிகழ்த்தியிருந்தன. அவருடைய கோட்பாட்டு அடிப்படை சார்ந்த தர்க்கரீதியான விமர்சனங்களும், அவற்றில் இழையோடிய தார்மீக ஆவேசங்களும் அதுவரை நிலவிவந்த இலக்கிய மதிப்பீடுகளை மறுபரிசீலனைக்கு உள்ளாக்கின. ஒரு சூறாவளியெனச் சுழன்றடித்தது அவர் குரல். அவருடைய விமர்சனச் சுடரில் பல அபிப்ராயங்கள் பொசுங்கின. E=mc2, கண்ணாடியுள்ளிருந்து என்ற நெடுங்கவிதைகள் உள்ளிட்ட அவருடைய இக்காலத்திய கவிதைகள் நவீனத் தமிழ்க் கவிதையின் சிகர வெளிப்பாடுகள். மனமும் மூளையும் ஓர் இசைமையில் விகாசம் பெற்ற அபூர்வ ஆளுமை. என் ஆதர்ச ஆளுமைகளில் ஒருவராக அவரை என் மனம் வெகு இயல்பாகவும் உத்வேகத்துடனும் வரித்துக்கொண்டிருந்தது.
கடிதம் மூலம் தருமு சிவராமிடம் என் தொடர்பு தொடங்கியது. மதுரைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையில் ஆய்வு மாணவனாக 1975-ல் சேர்ந்த பிறகு, நகுலனின் ‘குருக்ஷேத்திரம்’ போன்றதொரு தொகுப்பைக் கொண்டுவர ஆசைப்பட்டேன். அதற்காகப் படைப்புகளும் கட்டுரைகளும் கேட்டு அன்றைய எழுத்தாளுமைகளோடு கடிதத் தொடர்புகொண்டேன். பிரமிப்படையும் வகையில் படைப்புகள் வந்துசேர்ந்தன. இதற்காகத் சிவராம் அனுப்பியதுதான் ‘நக்ஷத்திரவாசி’ நாடகம். (அத்தொகுப்பை என்னால் கொண்டுவர முடியாமல் போனது வேறு கதை.)
தருமு சிவராம் பெரும்பாலும் அஞ்சலட்டையில்தான் கடிதங்கள் எழுதுவார். சமயங்களில் ஒரே நாளில் இரண்டு, மூன்று அஞ்சலட்டைகள் வருவதுமுண்டு. கடிதத்தை எப்போதும் ‘மை டியர்’ என்றுதான் ஆரம்பிப்பார். அஞ்சலட்டையின் மேற்புற வலது மூலையில் அவருடைய அந்நேரத்திய பெயர் ஆங்கிலத்தில் இருக்கும். விதவிதமான உச்சரிப்பில் அப்பெயர்கள் மாறிக்கொண்டே இருக்கும். வானவியல் சாஸ்திரத்திலும் எண் கணிதத்திலும் பேரார்வம் கொண்டிருந்த இவர், தன் பெயரை முன்வைத்துக் கடைசிவரை பரிசோதனைகள் மேற்கொண்டபடி இருந்தார்.
அந்தந்த மாற்றங்களின்போது, அது நிகழ்த்தும் விளைவுகளை அவதானிப்பதாகச் சொல்லுவார். கடிதத் தொடர்பின் தொடர்ச்சியாக, ஒருகட்டத்தில், கேரளாவில் கவிதை பற்றிய ஒரு அகில இந்தியக் கருத்தரங்கில் கலந்துகொள்ள இருப்பதாகவும், திரும்பும்போது சந்திக்க விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார். அப்படி வந்தால் சில நாட்கள் தங்குவதற்கு ஏற்பாடுசெய்ய முடியுமா என்றும் கேட்டிருந்தார்.
மனம் குதூகலத்தில் பரபரத்தது. அதேசமயம், என்ன ஏற்பாடுசெய்வது என்று மலைப்பாகவும் இருந்தது. ‘பெரியநாயகி அச்சகம்’ குமாரசாமியிடம் சொன்னேன். அவர் சாதாரணமாக, அச்சகத்தின் மாடியிலிருக்கும் அறையை ஒழுங்குபடுத்தித் தருகிறேன் என்றார். அவ்வளவு சுலபமாக முடிந்ததில் பெரும் ஆனந்தம். உடனடியாகக் கடிதம் எழுதிவிட்டு, வரும் நாளுக்காகக் காத்திருந்தேன்.
குறிப்பிட்ட நாள் காலையில் மதுரை ரயில் நிலையத்தின் முதலாவது நடைமேடையில், கையில் ‘கண்ணாடியுள்ளிருந்து’ புத்தகத்தை வைத்துக்கொண்டு, ரயிலின் வரவுக்காகத் தவித்தபடி இருந்தேன். அப்புத்தகத்தின் பின்னட்டையில் சிவராம் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. மனதில் அந்தச் சித்திரம் படிந்திருந்தது. ரயில் வந்தது. குறிப்பிட்ட பெட்டியை அடைந்து, மையமாக நின்றுகொண்டு, இரு வாசல்கள் வழியாகவும் இறங்குபவர்களைக் கவனித்துக்கொண்டிருந்தேன். பேண்ட், முழுக்கைச் சட்டை, தடித்த கண்ணாடி, அடர்த்தியான தலைமுடி, சிறிய சூட்கேஸ் என கச்சிதமான தோற்றத்தோடு இறங்கினார். அவர் முன்னால் போய் நின்றேன். என் கையிலிருந்த ‘கண்ணாடியுள்ளிருந்து’ புத்தகத்தைப் பார்த்துவிட்டு அட்டகாசமாகச் சிரித்தார். அந்த விசித்திரச் சிரிப்பு, என்னைப் பல ஆண்டுகள் தொடர்ந்துகொண்டிருந்தது.
– சி.மோகன், எழுத்தாளர்.
தொடர்புக்கு: kaalamkalaimohan@gmail.com
hindu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக