புதன், 16 மே, 2018

ஆளுநர் முன் எம்.எல்.ஏ.க்கள்,அணிவகுப்பு,காங்.,ம.ஜ.த.,தலைவர்கள் திட்டம்


தினமலர் :பெங்களூரு : தங்களின் பெரும்பான்மையை நிரூபிக்க, கவர்னர் முன் தங்கள் கட்சி, எம்.எல்.ஏ.,க்களின் அணிவகுப்பை நடத்த, காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த., தலைவர்கள் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு முன்னே, ம.ஜ.த., காங்கிரஸ் தலைவர்கள், பேரம் பேச துவங்கினர்.
யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ம.ஜ.த.,வுக்கு ஆதரவு தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர்கள், குமார கிருபா சாலையிலுள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில், இரு கட்சி தலைவர்களும் நேற்றிரவு, அவசர ஆலோசனை நடத்தினர். ம.ஜ.த.,வின் தேவகவுடா, குமாரசாமி, ரேவண்ணா, காங்கிரசின் முதல்வர் சித்தராமையா, மாநில தலைவர் பரமேஸ்வர், மேலிட பொறுப்பாளர்கள் குலாம் நபி ஆசாத், கே.சி.வேணுகோபால், அசோக் கெலட், லோக்சபா காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, டி.கே.சிவகுமார், ரோஷன் பெய்க் உட்பட, இரு கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், குமாரசாமியை முதல்வராக்கியும், காங்கிரசுக்கு துணை முதல்வர் பதவி வழங்குவதற்கும் முடிவு செய்யப்பட்டது.
அதுவும், லிங்காயத் சமுதாயத்தினரை சமாதானப்படுத்தும் வகையில், எம்.பி.பாட்டீலுக்கு வழங்குவதற்கு ஆலோசிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பரமேஸ்வருக்கு, முக்கிய இலாகா ஒதுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கவர்னர் முன்னிலையில், ம.ஜ.த., காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களை அணிவகுத்து நிறுத்துவதற்கும் முடிவு செய்து, அனைத்து எம்.எல்.ஏ.,க்களையும் அவசர, அவசரமாக பெங்களூரு வரும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த இரு கட்சி ஆலோசனை கூட்டம் நிறைவடைந்த பின், மற்றொரு தனியார் ஓட்டல் ஒன்றில், ம.ஜ.த., பிரமுகர்கள் ஆலோசனை நடத்தினர். இந்த பரபரப்பான சூழ்நிலையில், இன்று காலை, மல்லேஸ்வரம் கட்சி அலுவலகத்தில், பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டமும் நடக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக