ஞாயிறு, 6 மே, 2018

இழுத்து மூடப்பட்ட அதானி மீதான ஊழல் விசாரணை

கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா ...
Savukku : பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்தியில் ஆளும் பாஜகவுக்கு மிகவும் நெருக்கமானதாக அறியப்படும் அதானி குழும நிறுவனங்கள் விலை மதிப்பை அதிகமாகக் காட்டி (ஓவர் இன்வாய்ஸ்) மின் உபகரணங்கள் இறக்குமதி செய்ததாக கூறப்படும் வழக்கின்  பூர்வாங்க விசாரணையை மத்திய புலனாய்வு நிறுவனம் (சிபிஐ) தனது “அதிகார எல்லை வரம்புக்குள் வரவில்லை” என்ற சொதப்பலான ஒரு காரணத்தைச் சொல்லி இழுத்து மூடிவிட்டது. இதன் மூலம் இந்த விசாரணை குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக  கடந்த செவ்வாய்க்கிழமை டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ ஒரு அறிக்கை  தாக்கல் செய்தது. அதில் இந்த விசாரணை மகாராஷ்டிரா மாநிலத்திற்குள் உள்ள ஒரு பரிமாற்ற நெட்வொரக் தொடர்பானது. ஆகையால் இது மகாராஷ்டிர மாநில அரசாங்கத்தின் ஒரு திட்டம் என்று அந்த அறிக்கையில் சிபிஐ தெரிவித்துள்ளது.

இதுவே இந்த வழக்கை  சிபிஐ விசாரிப்பதை  தடுத்தது.
“த ஒயர்” இணையதளம் ஏப்ரல் மாதம் கூறியிருந்தபடி, அதானி குழும நிறுவனங்கள் விலை மதிப்பை அதிகமாகக் காட்டி மின் உபகரணங்கள் இறக்குமதி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் மீதான விசாரணையின் “தற்போதைய நிலை” குறித்து சிபிஐயின் பதிலை டெல்லி உயர் நீதிமன்றம் கேட்டிருந்தது. இந்த வழக்கை சிறப்பு விசாரணைக் குழு (எஸ்.ஐ.டி) விசாரிக்கக் கோரும் இரண்டு பொதுநல வழக்குகளை டெல்லி உயர் நீதிமன்றம் தற்போது விசாரித்து வருகிறது.
இதுபோன்ற வழக்குகளில் இரண்டு மாநில அரசாங்கங்களின் அதிகார எல்லைகள் குறித்து கடந்த இரு தசாப்தங்களாக சட்ட விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில் இதுபோன்ற வழக்குகளை விசாரிப்பதில் சிபிஐயின் அதிகார எல்லை என வருகிறபோது  சிபிஐ “கண்மூடித்தனமான அணுகுமுறையை“ கையாளுவதாக இந்தியாவின் மிகப் பெரிய பெருநிறுவனக் குழுக்களின் ஓவர் இன்வாய்ஸ் எனப்படும் விலைமதிப்பை அதிகமாக காட்டிய வழக்குகள் குறித்த விசாரணைகளை தொடர்ந்து கவனித்துவரும் வழக்கறிஞர்கள் மற்றும் தொழில்துறை பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
”வருவாய் புலனாய்வு இயக்குனரகம் (டி.ஆர்.ஐ) அளித்த குற்றச்சாட்டுகளின் தகுதியைின் அடிப்படையில் விசாரணை செய்யாமல், மிகவும் சட்டப்பூர்வ மற்றும் தொழில்நுட்ப நிலைகளை சிபிஐ எடுத்துள்ளதாக தோன்றுகிறது” என்கிறார் பத்திரிகையாளர் பரஞ்சோய் குஹா தார்த்தா.
”இவை அனைத்தும் ஒரே முறையைப் பின்பற்றுவதுபோல் தோன்றுகிறது …. உதாரணத்திற்கு, சுரங்க வழக்குகளை சிபிஐ கையாண்டு வருகிற முறையையே எடுத்துக் கொள்வோம். நான் வருத்தத்தோடு சொல்கிறேன்.   சிபிஐ வழக்குகளின் குற்றத் தன்மையை ஆராயாமல், வழக்குகளை எப்படி மூடுவது என்பதில் கவனத்தை செலுத்தி, டெக்னிக்கல் காரணங்களைக் கூறி தப்பிக்கப் பார்க்கிறது.  அரசியல் சூழல் மாறுகையில் சிபிஐயின் நிலைபாடுகளும் மாறும்” என்கிறார் அவர்.
ஓவர் இன்வாய்ஸிங்
2014 ஆம் ஆண்டு மே மாதத்தில், மோடி அரசாங்கம் அதிகாரத்திற்கு வருவதற்கு முன்னதாக, ”மூலதன உபகரண இறக்குமதியை மதிப்பை அதிகமாக்கியதற்காக ”  வருவாய் புலனாய்வு இயக்குனரகம் (டி.ஆர்.ஐ) அதானி குழுமத்திற்கு. ரூ. 5,500 கோடி  அபராதம் விதிப்பதற்கான விளக்கம்கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
ஒரு மாதத்திற்குப் பின்னர்,  இதுபற்றி  ஒரு பூர்வாங்க விசாரணையை சிபிஐ பதிவு செய்துள்ளதாக மீடியாக்கள் செய்தி வெளியிட்டன.  அதானி பவர் மகாராஷ்டிரா, அதானி பவர் ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா கிழக்கு கிரிட் பவர் டிரான்ஸ்மிஷன் கம்பெனி ஆகிய மூன்று நிறுவனங்கள் தென் கொரியா மற்றும் சீனாவில் இருந்து ரூ 3,580 கோடி  மதிப்புள்ள மின் உபகரணங்களை இறக்குமதி செய்துவிட்டு, 9,048 கோடி ரூபாய்க்கு இறக்குமதி செய்ததாக அதன் விலை மதிப்பை உயர்த்திக் காட்டியிருந்ததை வருவாய் புலனாய்வு நிறுவனம் (டிஆர்ஐ) கண்டுபிடித்தது.
இந்த வித்தியாசம் ரூ 5,468 கோடியை அதானி குழுமத்திற்கு தொடர்புடைய ஐக்கிய அரபு எமிரேட்டைச் சேர்ந்த எலக்ட்ரோஜென் இன்ஃப்ரா என்ற நிறுவனத்துக்கு “ஒதுக்கப்பட்டதாக” டிஆர்ஐ குற்றஞ்சாட்டியது.
த ஒயர் மற்றும் மற்றவர்கள்  தெரிவித்தபடி, எலக்ட்ரோஜென் இன்ஃப்ரோ நிறுவனத்தின் உரிமையாளர் அக்குழுமத்தின் முதலாளி கௌதம் அதானியின் அண்ணன் வினோத் அதானி என்பதற்கான சான்றுகள் உள்ளன.   இணைப்பு
சிபிஐ விசாரணை இல்லை
சிபிஐ 2014ம் ஆண்டு இரு நிறுவனங்களுக்கு எதிராக ஒரு பூர்வாங்க விசாரணையை பதிவு செய்தது.  ஈஸ்டர்ன் கிரிட் பவர் டிரான்மிஷன் கம்பெனி, அதானி குழுமத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் பிஎம்சி புராஜெக்ட்ஸ் இந்தியா லிமிடெட், அதானி என்டர்பிரைசஸ் லிமிடெட் மற்றும் அதானியின் மகாராஷ்டிர மாநில மின் பரிமாற்ற நிறுவனம் ஆகியவையே சிபிஐ விசாரணையில் சிக்கிய நிறுவனங்கள்.
ஆயினும் அதன் விவரங்கள் நான்காண்டுகளுக்கு முன்னர் வெளி உலகத்துக்கு தெரிவிக்கப்படவில்லை அல்லது அறிவிக்கப்படவில்லை.
சிபிஐ தனது ஆரம்ப விசாரணையில் பஞ்சாப் நேஷனல் வங்கி, விஜயா வங்கி, ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ், ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர் மற்றும் கனரா வங்கி ஆகிய ஆறு பொதுத்துறை வங்கிகளின் பெயர் தெரியாத  அதிகாரிகளை குற்றம் சாட்டியது.
வங்கிகளின் கடன் வசதிகள் மின் உபகரணங்களை அதிக விலை காண்பித்து வாங்க அல்லது இறக்குமதி செய்வதன்மூலம் பல்வேறு பொதுத்துறை வங்கிகளின் பணத்தை “கொள்ளையடிப்பதை” புலனாய்வு செய்து விசாரிக்கவே  இவ்வாறு செய்யப்பட்டது என்கிறது சிபிஐ.
திட்ட செலவினங்களை மிகைப்படுத்தி, சொந்த மூலதனத்தை உட்செலுத்துவதன் மூலம் விளிம்புப் பணத்தின் தேவையைப் பூர்த்தி செய்ய வங்கியிடமிருந்து கூடுதல் நிதியுதவியைப் பெறுதல் என்ற மற்றொரு குற்றச்சாட்டும் விசாரணையின்போது சேர்க்கப்பட்டு அதுபற்றி விசாரிக்கப்பட்டது.
ஆயினும், உபகரணங்கள் இறக்குமதி செய்யப்பட்ட திட்டம் மகாராஷ்டிராவை அடிப்படையாகக் கொண்ட ஒரு நெட்வொர்க்கிற்கானது என்பதால், விசாரணை வரம்பின் எல்லை இதில் குறுக்கிடுகிறது. அதனால் இந்த பூர்வாங்க விசாரணை  மூடப்பட வேண்டியிருந்தது எனக் கூறி இந்த வழக்கு குறித்த விசாரணையை சிபிஐ இழுத்து மூடியுள்ளது.
இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு, அதன் விசாரணை -2015ல்- ஒரு வருடத்திற்குள்ளாக அதிகாரப்புர்வமாக மூடப்பட்டதாக சிபிஐ அறிவித்தது.
இதற்கு பின்னால் உள்ள காரணத்தை, ”இது ஒரு நொண்டிச் சாக்கு – மிக மோசமான காரணம்” என்கிறார் பொதுநலன் மற்றும் பொது காரணத்திற்கான மையம் சார்பில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்த வழக்கறிஞர்  பிரணவ் சச்தேவா.
பொதுத்துறை வங்கிகளுக்கான கடன்கள் பயன்படுத்தப்பட்டன. எனவே அதை சிபிஐ எளிதாக விசாரித்திருக்க முடியும். அப்படியிருக்கையில், இது மகாராஷ்டிராவைப் பற்றிய விஷயம்,  மஹாராஷ்டிரா அரசாங்கத்தின் அனுமதி பெறவில்லை எனக்கூறி அவர்கள்(சிபிஐ) இந்த வழக்கை எப்படி மூடிவிட முடியும்?  பொதுத்துறை வங்கிகளின் பங்கு பற்றி விசாரணை நடத்தப்படும் போது, ​​மாநில அரசு அனுமதி தேவையில்லை, ”என்கிறார் சச்தேவா.
பிரிவு 6 மற்றும் மாநில விசாரணைகள்
இத் தருணத்தில்,  அதானி கூடுதல் விலை காட்டியது தொடர்பான வழக்கு விசாரணைக்கு டெல்லி சிறப்பு போலீஸ் படை (டி.எஸ்.பி.இ) சட்டம் பிரிவு 6ன் கீழ் அனுமதி வேண்டி விண்ணப்பித்துள்ளதா அல்லது விண்ணப்பிக்க வேண்டுமா என்பது தெளிவாக தெரியவில்லை.
இந்த டெல்லி சிறப்பு போலீஸ் படை சட்டத்தின்படியே, குற்ற விசாரணை மேற்கொள்வதற்கான சட்டப்பூர்வ அதிகாரத்தைப் பெறுகிறது. சட்டப்பிரிவு 6-ன்படி, தனது எல்லைக்குள் சிபிஐ விசாரணை நடத்த அனுமதி மற்றும் ஒப்புதல் அளிக்கிறது மாநில அரசு.
மாநில அரசின் அனுமதி தேவையில்லை என சிபிஐயின் விசாரணை நடைமுறைகளை அறிந்த சோர்சஸ் தெரிவிக்கின்றன.
அதே சமயம்,  இதேபோன்ற இன்னொரு வழக்கில் இரண்டாவது ஓவர் இன்வாய்சிங் தொடர்பான வழக்கில் சிபிஐ எவ்வாறு அணுகியிருக்கிறது, அது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் அப்டேட் கொடுத்திருக்கிறது   என்பது இந்த வாதத்திற்கு வலு சேர்க்கிறது.
நாலெட்ஜ் மற்றும் இன்.ஃபிராஸ்ட்ரக்சர் சிஸ்டம்ஸ் (Knowledge Infrastructure Systems) என்ற நிறுவனம் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனங்களிடமிருந்து ஓவர் இன்வாய்ஸ் தயாரித்து இந்தோனேஷிய நிலக்கரி இறக்குமதி செய்ததாக சிபிஐ ஒரு ஆரம்ப விசாரணையை பதிவு செய்தது.
இந்த வழக்கிலும் மகாராஷ்டிரா அரசு பவர் ஜெனரேஷன் கம்பெனி லிமிடெட் மற்றும் மகாராஷ்டிர அரசுக்கு சொந்தமான மின்சக்தி நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு எதிராக சிபிஐ ஆரம்ப விசாரணையை பதிவு செய்தது.
எனினும், இந்த வழக்கு மகாராஷ்டிராவில் மையமாக கொண்டுள்ளபோதிலும் சி.பி.ஐ.யின் விசாரணையின் படி ”பல்வேறு நபர்களின் அறிக்கைகளை பதிவுசெய்தல்” மற்றும் ஆவணங்களின் பிரதிகள் சேகரிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் புலன்  விசாரணை சரியான தடத்தில் நடைபெற்றுவருகிறது.
நாலெட்ஜ் மற்றும் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் மீது மகாராஷ்டிரா அரசின் அனுமதியை பெற்றுக்கொண்டா சிபிஐ விசாரணை நடக்கிறது? இல்லை எனில், இந்த வழக்கில் அதன் நிலைப்பாடு அதானி குழுமங்களின் விஷயத்தில் எடுக்கப்பட்ட நிலைக்கு முரணாக தோன்றும். ஆம் எனில், அதானி வழக்கு தொடர்பான கோப்பை (ஃபைல்) சிபிஐயும், மகாராஷ்டிரா அரசும் ஏன் மூட முடிவு செய்தன எனத் தெளிவாகத் தெரியவில்லை.
தேசிய வங்கிகளின் பணம் சம்பந்தப்பட்டிருந்தாலே சிபிஐ அவ்வழக்கை விசாரிக்க முழுமையான அதிகாரத்தை பெறுகிறது.   தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிள் நிதியில் ஊழல் நடைபெற்றால், சிபிஐ நேரடியாக விசாரணையை தொடங்க முடியும்.  அப்படி இருக்கையில், அதானி குழுமங்களின் மீதான விசாரணையை, மகாராஷ்டிர மாநில அரசுதான் விசாரிக்க வேண்டும் என்று சிபிஐ சொல்வது, விசித்திரத்திலும் விசித்திரம்.
அனுஜ் ஸ்ரீனிவாஸ்
நன்றி தி வயர் இணையதளம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக