சனி, 19 மே, 2018

கர்நாடகாவில் பாஜகவின் கடத்தல் ஆரம்பம் ... இரண்டு எம் எல் ஏக்கள் கடத்தப்பட்டனர்

எம்.எல்.ஏ.க்கள் கடத்தல்: கர்நாடக அதிர்ச்சி! மின்னம்பலம்: கர்நாடகாவில் பாஜகவை ஆதரிக்க வலியுறுத்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ.விடம் ஜனார்த்தன ரெட்டி பேரம் பேசும் ஆடியோவை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், தங்கள் கட்சி எம்.எல்.ஏக்கள் இருவரை பாஜக கடத்திவைத்திருக்கிறது என்று மஜத தலைவர் குமாரசாமி குற்றம் சாட்டியிருக்கிறார்.
கர்நாடக முதல்வராக நேற்று முன்தினம் பதவியேற்ற எடியூரப்பா, தனது பெரும்பான்மையை இன்று மாலை 4 மணிக்கு நிரூபிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் சட்டப் பேரவையில் நடைபெற்று வருகின்றன.
பெரும்பான்மையை நிரூபிக்க 112 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் பாஜகவிடம் 104 எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ளனர். எனவே, பாஜக மற்றும் மஜத எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கும் முயற்சியில் அக்கட்சி ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை ஜனார்த்தன ரெட்டி செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக எம்.எல்.ஏக்கள் வேட்டை: தயாராகும் ஜனார்த்தன ரெட்டி என்ற தலைப்பில் நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்த நிலையில் பணம், அமைச்சர் பதவி தருவதாக ராய்சூர் காங்கிரஸ் எம்.எல்.ஏவிடம் ஜனார்த்தன ரெட்டி பேரம் பேசும் ஆடியோ ஒன்றை காங்கிரஸ் நேற்று (மே 18) வெளியிட்டுள்ளது.
அந்த ஆடியோவில் தன்னை ஜனார்த்தன ரெட்டி என்று கூறும் அந்த நபர், “உங்களை நான் பார்த்துக்கொள்கிறேன். பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவை நீங்கள் பார்ப்பதற்கு நான் ஏற்பாடு செய்கிறேன். அவருடன் ஒருமுறை நீங்கள் பேசினால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யலாம். உங்களுக்கு எந்தப் பதவி வேண்டுமானாலும், நாங்கள் ஏற்பாடு செய்கிறோம். எங்கள் பேச்சைக் கேட்டவர்கள் எல்லாம் தற்போது வசதியாகவும் நல்ல பதவியிலும் உள்ளனர். எங்களை நம்பினால் தற்போது உள்ளதைவிட 100 மடங்கு வசதியாக இருக்கலாம்” என்று கூறுகிறார்.
அதற்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ பசன கவுடாவோ, “மன்னிக்கவும் சார். நான் எதுவும் இல்லாமல் இருந்தபோது அவர்கள் எனக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்து வெற்றி பெற செய்துள்ளனர். அவர்களுக்கு என்னால் துரோகம் செய்ய முடியாது” என்று தெரிவிப்பதாக ஆடியோ முடிகிறது.
இதற்கிடையே, இந்த ஆடியோ போலியானது என பாஜக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், “இந்த ஆடியோ சிடி காங்கிரஸின் தந்திரங்களில் ஒன்றாகும். ஆடியோ சிடி போலியாகத் தயாரிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
எம்.எல்.ஏக்கள் கடத்தல்
அடுத்த அதிர்ச்சியாக நேற்று இரவு ஏ.என்,ஐ. செய்தி நிறுவனத்திடம் பேசிய குமாரசாமி, “எங்கள் கட்சியின் இரண்டு எம்.எல்.ஏக்களை பாஜகவினர் கடத்தி வைத்திருக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் திரும்பி வந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. எங்கள் கட்சி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க முடியாது’’ என்று தெரிவித்திருக்கிறார்.
இன்று காலை அனைத்து எம்.எல்.ஏக்களும் சட்டமன்றத்துக்கு வரவேண்டிய நிலையில் நேற்று குமாரசாமி இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக