ஞாயிறு, 13 மே, 2018

பொம்மினாயக்கன்பட்டி (எ) துலுக்கப்பட்டி கிராமத்தில் தலித்துகளுக்கும், இஸ்லாமியர்களுக்கும் ....

thetimestamil.com :அன்பு செல்வம்: பொம்மினாயக்கன்பட்டி (எ) துலுக்கப்பட்டி கிராமத்தில் உள்ள‌ தலித்துகளுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையே உருவாக்கப்பட்டப் பிரச்சனையை மோதலின் உச்சமாகவும், நிரந்தரப் பகை முரணாகவும் பார்க்க முடியாது.
2002 -ல் ஒரு மாணவர் பயிற்சிக்காக அந்த கிராமத்தில் ஒரு வாரம் தங்கி இருக்கும் வாய்ப்பு கிடைத்தது.. அப்போது கிடைத்த கதைகள் பொம்மினாயக்கன்பட்டி எப்படி துலுக்கப்பட்டியாக மாறியது என்பதைச் சொல்கிறது. அந்த ஊர் வழியாக‌ ஒரு பாட்டி தலையில் கூடை சுமந்து செல்கிறாள். சுமை தாங்க முடியாமல் அந்த கூடையை இறக்கி, மூடி வைத்து விட்டு போய் விடுகிறாள். கூடையைத் திறந்து பார்த்த ஊர் மக்கள் அதிர்ச்சியானார்கள். வெட்டப்பட்ட ஒரு தலை மட்டும் ரத்தம் சொட்ட உயிரோடு துடித்துக் கொண்டிருந்தது. அந்த தலை கொஞ்ச நேரம் பேசுகிறது. நாயக்கமாரில் அண்ணன்மார், தம்பிமார் ஒழுக்கம் இல்லாமல் போனதால் ஒருவருக்கொருவர் மோதி வெட்டிக் கொண்டார்கள். அதில் நானும் வெட்டப்பட்டேன். நீங்களும் அதே போல இருக்காதீர்கள். வெளியே எங்கு போனாலும் நான் நாயக்கமார்னு சொல்லாதீர்கள் என சொல்லிவிட்டு அந்த தலையிலிருந்து உயிர் பிரிந்து விட்டது. இதைக் கேட்ட பொம்மிநாயக்க வகையறாக்கள் நமது தலையையும் பாதுகாக்க வேண்டுமானால் நாம் இஸ்லாத்துக்கு மாற வேண்டும் என முடிவெடுத்ததாக‌ அந்த கதை நீள்கிறது.
இது நடந்து நூறாண்டு இருக்கலாம் என்கிறார்கள். உள்ளூரில் உள்ள சில‌ இஸ்லாமியர்கள் நாங்கள் நாயக்கர்கள் இல்லை, வெளியில் இருந்து வந்த பட்டானி பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றும் ஒரு கதை இருக்கிறது. (இதில் எதை ஏற்பது – நிராகரிப்பது என்பது ஒரு பக்கம்).
தற்போது 1200 இஸ்லாமிய குடும்பம் இருக்கிறது. பொம்மி வகையறா நாயக்கர்கள் இஸ்லாமியர்களாக‌ மாறினார்களோ, இல்லையோ பறையர்கள் இஸ்லாமியர்களாக மாறிய வரலாறு கொண்ட கிராமம் இது. மொத்தம் உள்ள‌ 500 பறையர் குடும்பங்களில் 20 குடும்பம் இன்னமும் இஸ்லாமியர்களாக இருக்கிறார்கள். இதில் பெரும்பாலானோர் நில உடமையாளர்கள். கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 12 குடும்பங்கள் (பெண் கொடுத்தது, பெண் எடுத்தது என்கிற வகையில்) இஸ்லாத்துக்கு மாறி பெரியகுளம் பகுதியில் குடியேறி இருக்கிறார்கள். பிரச்சனைக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் பின் புலத்தில் “நிலம்”, “பெரும்பான்மை – சிறுபான்மை”, கொஞ்சம் பழைய காலத்து பாகுபாடு என‌ எல்லாமும் கலந்திருக்கிறது.

இங்குள்ள இஸ்லாமியர்கள் வெளிநாடு சென்றதில் பொருளாதார வளம் அவர்கள் பக்கம் திரும்பியிருக்கிறது, பெரும்பாலான இஸ்லாமியர்கள் விவசாயம் செய்பவர்கள். ஊருக்கு உள்ளேயும், அதைச் சுற்றியும் இருக்கிற அதிக பட்ச நிலம் அவர்கள் கைவசம். கிராமத்துக்கென பொதுவளம் இல்லை என்பது நீண்ட நாள் குறை. இதில் தலித்துகள் புழங்குவதற்கான பொது வளம் முற்றிலும் சுருங்கி விட்டது. எல்லா நிகழ்வுக்கும், புழக்கத்துக்கும் பள்ளிவாசல் தெருவையும், பேருந்து நிறுத்தத்தையும் விட்டால் வேறு வழியில்லை. இது அவ்வப்போது சிறு, சிறு மோதலாக வெளிப்படுவது உண்மை தான். ஆனால் பண்பாட்டு ரீதியாக இரு சமுகங்களும் இணக்கமாகவே இருந்து வருகிறார்கள்.
அண்மைக்காலத்தில் தான் சில தீய சக்திகள், இந்துத்துவ வெறி கொண்டு தங்களின் சுயநல அரசியலை, சந்தர்ப்பவாதமாக்கிக் கொள்ள இது போன்ற மோதலை உருவாக்கி வருகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
● கிராமத்தின் பெரும்பாலான வளங்கள் இஸ்லாமியர்களின் கட்டுப்பாட்டில் இருப்பது மறுப்பதற்கில்லை. இதை கவனத்தில் கொண்டு, தலித் பயன்பாட்டுக்கு கூடுதலான பொது வளங்கள் தேவைப்படுகின்றன. அதை பெறுவதற்கு திட்டங்கள் வேண்டும்.
● ஒரு கிராமத்தை வலுப்பெறச் செய்யும் ஊரக வளர்ச்சித் திட்டங்கள் எந்த அளவுக்கு இக்கிராமத்தில் செயல்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை ஆய்வு செய்து, விடுபட்ட வளர்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்த கண்காணிப்புகள் தேவை.
● பொதுவாக தலித் சமூகங்களில் இருந்து இஸ்லாம் தழுவி இருக்கிறவர்களின் வாழ் நிலை மற்றும் சமூக, பொருளாதார மேம்பாட்டுக்காக‌ நல்லிணக்கத் திட்டங்கள் தேவை.
● தற்போது உருவாக்கப்பட்டுள்ள அமைதிக்குழு வரவேற்கப்பட வேண்டியது. நீண்டகால நோக்கில் இக்குழு கவனமாக செயல்பட வேண்டியுள்ளது.
கட்டுரையாளர்  அன்புசெல்வம், “சாதி இன்று” அறிக்கையின் நூலாசிரியர்களில் ஒருவர்.
தொடர்புக்கு : anbuselvam6@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக