செவ்வாய், 1 மே, 2018

காவிரி நதி நீர் பங்கீடு - மத்திய அரசின் வரைவு செயல்திட்டம் தயார்?

மாலைமலர் :காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, வரைவு செயல்திட்டத்தை மத்திய அரசு தயார் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதுடெல்லி:>காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் 16-ந்தேதி இறுதி தீர்ப்பை வழங்கியது. அதில், தமிழ்நாட்டுக்கு ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி. தண்ணீரை காவிரியில் கர்நாடகம் திறந்து விட வேண்டும் என்று அந்த தீர்ப்பில் நீதிபதிகள் அறிவித்தனர். அத்துடன் நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த புதிய திட்டத்தை (ஸ்கீம்) வகுக்கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு, அதற்காக 6 வாரம் கெடுவும் விதித்திருந்தது. ஆனால், மத்திய அரசு தொடர்ந்து கால தாமதம் செய்து வந்த நிலையில், மே 3-ம் தேதிக்குள் வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்யும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி காவிரி நீர் பங்கீட்டுக்கு வரைவு செயல் திட்டம் ஒன்றை மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் ஓசையின்றி தயாரித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக அந்த அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இது தொடர்பாக கூறியதாவது:-

காவிரி நதிநீரை பங்கீடு செய்து கொள்வதற்காக, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரைவு திட்டம் தயாராகி விட்டது. அந்த வரைவு திட்டத்தின் முழு விபரங்களும் மத்திய அமைச்சரவையிடம் விரைவில் ஒப்டைக்கப்படும்.

காவிரி மேலாண்மை வாரியம் மொத்தம் 9 உறுப்பினர்களைக் கொண்டதாக இருக்கும். அதன் தலைவராக ஐ.ஏ.எஸ். அதிகாரி அல்லது நதிநீர் தொழில்நுட்ப நிபுணர் இருப்பார். 9 உறுப்பினர்களில் தலைவர் உள்பட 5 பேர் நிரந்தர உறுப்பினர்களாக இருப்பார்கள்.

மீதமுள்ள 4 உறுப்பினர்களும் பகுதி நேர உறுப்பினர்களாக இருப்பார்கள். அந்த 4 உறுப்பினர்களும் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களின் பிரதிநிதிகளாக இருப்பார்கள். அந்த பகுதி நேர உறுப்பினர்கள் ஆண்டுதோறும் மாறிக்கொண்டே இருப்பார்கள்.

காவிரி மேலாண்மை வாரியத்துக்கான வரைவு திட்டத்தை மத்திய நீர்வள அமைச்சகம் தயாரித்தாலும் அதை அமல்படுத்தும் முழு பொறுப்பையும் சுப்ரீம் கோர்ட்டில் ஒப்படைக்க உள்ளோம். தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் ஏற்கும் வகையில் வரைவு திட்டத்தை சுப்ரீம் கோர்ட்டு செயல்படுத்த கேட்க உள்ளோம்.

இவ்வாறு மத்திய நீர்வளத்துறை மூத்த அதிகாரி கூறினார்.



இந்த நிலையில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காவிரி வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் வர உள்ளது. அப்போது வரைவு திட்டம் தொடர்பான மனுவை மத்திய அரசு தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது முழுமையான வரைவு செயல் திட்டமாக இருக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. அது முதல் கட்ட வரைவு திட்ட அறிக்கையாக இருக்கும் என்றும், விரிவான வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக