ஞாயிறு, 27 மே, 2018

மக்கள் அதிகாரம் தோழர்களை வேட்டையாடும் போலீஸ் .. போராட்டத்தை ஒருங்கிணைத்த ...

 'மக்கள் அதிகாரம்’ நிர்வாகிகள் கூண்டோடு கைது!
மின்னம்பலம் :தூத்துக்குடியில் மே 22 ஆம் தேதி நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்ட நிலையில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தை ஒருங்கிணைத்ததாக மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேந்த தென்மாவட்ட நிர்வாகிகளை போலீஸார் தீவிரமாக வேட்டையாடி வருகிறார்கள்.
தூத்துக்குடி, சிவகங்கை, மதுரை , நெல்லை மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகிகள் 15 பேரை நேற்று முன் தினம் நள்ளிரவு வீடு புகுந்து கைது செய்திருக்கிறார்கள் தூத்துக்குடி போலீசார். இதுபற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் வரவில்லை எனினும் மக்கள் அதிகாரம் அமைப்பினர் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
மத்திய மாநில உளவுத்துறைகளின் தூத்துக்குடி பற்றிய ரிப்போர்ட்டில் முக்கிய இடம் பிடித்திருக்கிறது மக்கள் அதிகாரம். இந்த அமைப்பு ஓர் புரட்சிகர அமைப்பு. ஏற்கனவே ஜெயலலிதாவை எதிர்த்து டாஸ்மாக் பாடல் பாடிய பாடகர் கோவன் கைது செய்யப்பட்டார். இவர் மூலம்தான் மக்கள் அதிகாரம் வெகுஜன ஊடக வெளியில் விவாதிக்கப்பட்டது. ஆனால் சமூக தளங்களில் மக்கள் அதிகாரம் தீவிரமாக இயங்கி வருகிறது. நெடுவாசல், ஹைட்ரோ கார்பன் முதல் ஸ்டெர்லைட் வரை அனைத்துப் பிரச்னைகளையும் கையிலெடுத்து போராடி வருகிறது மக்கள் அதிகாரம்.

தூத்துக்குடியில் கடந்த சில மாதங்களில் 18 பகுதிகளில் நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தை ஒருங்கிணைத்து நூறாவது நாள் அன்று பெரும் கூட்டத்தைத் திரட்டியதில் மக்கள் அதிகாரத்துக்கு பெரும் பங்கிருக்கிறது என்கிறார்கள் தூத்துக்குடி பத்திரிகையாளர்கள்.
‘’18 இடங்களில் நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பின் பிரதிநிதிகள் 25 வது நாளில் இருந்தே பங்கெடுக்க ஆரம்பித்தனர். ஒவ்வொரு இடமாகப் போய் மக்கள் கூட்டத்தில் பேச ஆரம்பித்தனர், பாட்டு பாடினர். பல வருடங்களாக நடந்து வந்த ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் இந்த நாட்களில் இவர்கள் முக்கியமான மாற்றத்தைக் கொண்டுவந்தனர்.
ஒவ்வொரு கிராமத்திலும் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்ட கமிட்டியை உண்டாக்கி அதில் மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இடம்பெற்றனர். சில நாட்களிலேயே அம்மக்களை முழுதாக கையிலெடுத்தனர் மக்கள் அதிகாரம் அமைப்பினர். நெடுநாட்களாக போராடிவந்த பேராசிரியர் பாத்திமா போராட்டக் குழுவில் இருந்து நீக்கப்பட்டபோது அதற்குப் பின்னாலும் மக்கள் அதிகாரம்தான் இருப்பதாக தகவல் பரவியது’’ என்றார் நம்மிடம் பேசிய தூத்துக்குடி பத்திரிகையாளர் ஒருவர்.
மேலும், நூறாவது நாள் போராட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடுவது என்றும் போராட்டம் மிக வலிமையாக இருக்க வேண்டும் என்றும் மக்கள் அதிகாரம் அமைப்பினர் திட்டமிட்டனர். இதையெல்லாம் உளவுத்துறை ரெகுலராக நோட் போட்டுக் கொண்டே வந்தது. அதன் விளைவாகத்தான் சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் மக்கள் அதிகாரம் அமைப்பினரும் இடம்பெற்றனர் என்றார் அந்தப் பத்திரிகையாளர்.
துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகும் மக்கள் அதிகாரம் அமைப்பின் போராட்டம் ஓயவில்லை. போராட்டம் நடந்த அன்று கலெக்டர் அலுவலகத்தில் இருந்த சிசிடிவி கேமரா ஏன் தரையை நோக்கித் திருப்பப்பட்டது என்றும், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இருந்த சிசிடிவி கேமரா ஏன் செயலிழக்கச் செய்யப்பட்டது என்றும் தொடர்ச்சியான கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். மேலும் தூத்துக்குடியைச் சுற்றியுள்ள கிராமங்களில் மக்களை சந்தித்து அடுத்த கட்ட போராட்டம் பற்றியும் ஆலோசனை நடத்த ஆரம்பித்துள்ளதாகவும் மக்கள் அதிகாரம் பற்றி போலீஸாருக்குத் தகவல் கிடைத்திருக்கிறது.
இதையடுத்து அந்த அமைப்பின் நிர்வாகிகளைத் தேடித் தேடிக் கைது செய்து வருகின்றனர் போலீஸார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக