செவ்வாய், 15 மே, 2018

மம்தாவின் கர்நாடக தேர்தல் கணிப்பு மிக சரியாகவே உள்ளது

தேர்தல் முடிவு: முன்பே கணித்த மம்தாகர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் பல்வேறு ஊகங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், மம்தா பானர்ஜியின் கணிப்பு ஏறக்குறைய தேர்தல் முடிவுகளுடன் நெருக்கமாக உள்ளது.
கர்நாடகத் தேர்தல் முடிவுகள் வெளியாகி இழுபறியான நிலை தொடர்கிறது. பாஜக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தாலும் தனிப்பெரும்பான்மையை பெறாததால் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் கூட்டணி ஆட்சி அமைக்கவுள்ளதாகவும் மஜகவின் குமாரசாமி முதல்வராகப் பதவியேற்க காங்கிரஸ் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கர்நாடகாவின் முதல்வராகக் குமாரசாமி பதவியேற்பார் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த மே 11ஆம் தேதி ஜி 24 கண்டா என்ற வங்க ஊடகத்துக்குப் பேட்டியளித்திருந்த மம்தா, “பாஜக மற்றும் காங்கிரஸ் சம அளவில் தொகுதிகளைப் பெற வாய்ப்புள்ளது.
முடிவெடுக்கும் சக்தியாக தேவகௌடா இருப்பார். தேவகௌடாவின் மகன் குமாரசாமி முதல்வராக வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்திருந்தார். தற்போது தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் அவரது கணிப்புகள் ஏறக்குறைய முடிவுகளோடு நெருக்கமாக உள்ளன.
இதேபோல், மதசார்பற்ற ஜனதா தள கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்திருந்தால் தேர்தல் முடிவுகள் வித்தியாசமாகியிருக்கும்; மிகப் பெரிய வித்தியாசமாகியிருக்கும் என்று மம்தா தேர்தல் முடிவுகள் தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று கருத்து தெரிவித்திருந்தார். தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ்-மஜக இடையே கூட்டணி ஏற்படவில்லை என்றாலும் தற்போது முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக