வெள்ளி, 25 மே, 2018

முழு அடைப்புப் போராட்டம்: தலைவர்கள் கைது!

முழு அடைப்புப் போராட்டம்: தலைவர்கள் கைது!மின்னம்பலம்: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து முழு அடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உட்பட பலரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெறும் என திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் அறிவித்தன. அதன்படி இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றுவருகிறது. திமுக, காங்கிரஸ், மதிமுக, சிபிஐ, சிபிஐ(எம்), விடுதலைச் சிறுத்தைகள் உட்பட பல்வேறு கட்சிகள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளன.
முழு அடைப்புப் போராட்டம் காரணமாகப் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. எனினும், சென்னையில் பேருந்துகள், கோயம்பேடு காய்கறிச் சந்தை போன்றவை வழக்கம்போல் இயங்கிவருகின்றன.


சென்னை எழும்பூரில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அவர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றதையடுத்து போலீசார் அனைவரையும் கைது செய்தனர்.
மணமக்களுடன் ஸ்டாலின் போராட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற திமுக நிர்வாகி இல்லத் திருமண விழாவில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டார். ஸ்டாலின் தலைமையில் திருமணம் நடைபெற்றது. அதன் பின்னர் போராட்டத்தில் ஸ்டாலின் பங்கெடுத்தார். அவருடன் மணமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஸ்டாலின் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். ஸ்டாலினை வாகனத்தில் அழைத்துச் செல்ல போலீசார் முயன்றபோது திமுகவினர் வாகனத்தைச் சூழ்ந்துகொண்டு நின்றனர். வாகனத்தை இயக்க முடியாமல் போலீசார் தவித்தனர். இதனால் வாகனம் அதே இடத்திலேயே நீண்ட நேரம் இருந்தது.
தியாகராய நகர் பேருந்து நிலையம் அருகே மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் திமுக நிர்வாகிகள் போராட்டம் நடத்தினர்.

இதில் அண்ணாநகர் மோகன், கு.க.செல்வம், பகுதி செயலாளர்கள் ஜெ.கருணாநிதி, கே.ஏழுமலை, அகஸ்டின் பாபு உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். அவர்களும் கைது செய்யப்பட்டனர்.
சைதாப்பேட்டையில் திமுக மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் நடைபெற்றன.
தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன், தி.மு.க. பகுதி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, சைதை குணசேகரன், மகேஷ்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் இதில் பங்கேற்றனர்.
திருநெல்வேலியில் போராட்டத்தில் ஈடுபட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் கைது செய்யப்பட்டார். தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபடும் தலைவர்கள் கைது செய்யப்பட்டுவருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக