வியாழன், 3 மே, 2018

பாமக ஒருபுறம் திமுகவை திட்டி அறிக்கை ... மறுபுறம் கூட்டணிக்கு தூது ..

minnambalam : “மின்னம்பலத்தின் மதியம் 1 மணி பதிப்பில், ‘திமுகவுடன்
கூட்டணி கிடையாது’ என்ற தலைப்பில் முதல் செய்தியாக வெளியாகியிருந்த பாமக மாநிலத் துணைத் தலைவர் பொங்கலூர் மணிகண்டன் அறிக்கையை வாசித்தேன். அந்த அறிக்கையின் பின்னணி பற்றி சொல்வதற்கு முன்பு, ஏப்ரல் 26ஆம், தேதி டிஜிட்டல் திண்ணையில் நான் சொன்ன தகவலின் ஒரு பகுதியை நினைவுபடுத்துகிறேன்.
’தனித்துப் போட்டியிட்டு தமிழ்நாட்டில் யாரும் ஆட்சியை இனி பிடிக்க முடியாது என்பது அன்புமணிக்கும் தெரியும். இப்போது இருக்கும் சூழ்நிலையில் திமுகவுடன் கூட்டணி என்பதுதான் சரியாக இருக்கும் என அன்புமணி வெளிப்படையாகவே தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லிவருகிறார். அதில் அடுத்த கட்டமாக, துரைமுருகனிடம் இது சம்பந்தமாகவும் பேசியிருக்கிறார்கள். ‘நான் தளபதிகிட்ட பேசிட்டு சொல்றேன்..’ என துரைமுருகன் சொல்லியிருக்கிறார்.
கூட்டணிக்குள் பாமக வர ரெடியாக இருக்கிறது என்ற தகவல் துரைமுருகன் மூலமாக ஸ்டாலின் கவனத்துக்கும் போயிருக்கிறது. ‘அவங்க அப்பா தினமும் ஒரு அறிக்கை விட்டு நம்மை திட்டி தீர்த்துட்டு இருக்காரு. இதுல எங்கே கூட்டணிக்கு வருவாங்க?’ என்று கேட்டாராம் ஸ்டாலின்.

அதற்கு, ‘இதற்கு முன்பு நம்மை காடுவெட்டி குரு திட்டிட்டு இருப்பாரு. அந்த நேரத்தில், ஜி.கே.மணியை அனுப்பி தலைவரிடம் கூட்டணி பேசுவாங்க. இதுவும் அது மாதிரிதான். அப்பா திட்டிட்டு இருப்பாரு. பையன் சத்தமில்லாமல் கூட்டணி பேசி முடிக்கணும்னு நினைக்கிறாரு. எல்லாவற்றையும் கவனமாகக் கேட்டுக்கொண்ட ஸ்டாலின் எந்த பதிலும் சொல்லவில்லையாம்’ என்பதுதான் அப்போது சொன்னது.
அன்புமணியை பொறுத்தவரை திமுக கூட்டணி என்பதை யோசிக்கவும் பேசவும் ஆரம்பித்துவிட்டாராம். ஆனால், மருத்துவர் ராமதாஸுக்கு இதில் உடன்பாடு இல்லை என்கிறார்கள். கூட்டணி தொடர்பாகப் பேசப்பட்ட தகவல்கள் வெளியே கசிந்ததுமே ராமதாஸ் அப்செட் ஆகிவிட்டாராம்.
‘என் கையில இந்த நேரம் கட்சி இருந்தால் நமக்கு 50 எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்துல இருந்திருப்பாங்க. கட்சியை நான் பார்த்துக்குறேன்னு எப்போ அவரு கையிலெடுத்தாரோ அப்போ இருந்தே இறங்கு முகமாகத்தான் இருக்கு. காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்யுறதுல காட்டுற ஆர்வத்தை கட்சியை வளக்கிறதுல அவர் காட்டவே இல்லை. இவ்வளவு நாளாக திமுக, அதிமுகவுடன் கூட்டணி இல்லைன்னு சொல்லிட்டு இருந்துட்டு இப்போ திமுகவுடன் கூட்டணி பேசுறோம்னு அவரு சொல்லிட்டு இருக்கிறது சரியாக வராது. இதை நான் சொன்னால் அவரு கேட்க மாட்டாரு. கூட்டணி தொடர்பாக வரும் பேச்சுகள் வதந்தி என மணியை விட்டு அறிக்கை விடச் சொல்லலாம். ஆனால் அது உடனே அவரோட கவனத்துக்குப் போகும்.அதனால் மணிகண்டனை லயன்ல வரச் சொல்லுங்க...’ எனக் கூப்பிட்டிருக்கிறார் ராமதாஸ்.
பாமகவின் மாநிலத் துணைத் தலைவரான பொங்கலூர் மணிகண்டன் தைலாபுரம் தோட்டத்து லயனில் போயிருக்கிறார். அப்போது அவர் ராமதாஸிடம், ‘அய்யா... இதுபோல நாம் திமுகவோட கூட்டணின்னு ஒரே செய்தி பரவிக்கிட்டிருக்குய்யா...’ என்று சொல்ல உடனே ராமதாஸ் அப்படியா, ’ ‘யார் பரப்புறது?’ என்று கேட்டுவிட்டு எழுதிக்கங்க என்று மணிகண்டனுக்கு டிக்டேட் செய்திருக்கிறார். “கார் உள்ளளவும் கார்னா மேகம், கடல் நீர் உள்ளளவும், பார் உள்ளளவும் பார்னா பூமி, அப்புறம் பைந்தமிழ் உள்ளளவும் திமுக அதிமுகவுடன் கூட்டணி இல்லை. இது அய்யாவின் வேத வாக்கு’ அப்டின்னு ஒரு அறிக்கையை கொடுங்க என்று உத்தரவிட்டிருக்கிறார் டாக்டர் ராமதாஸ். அதன் பிறகுதான் பொங்கலூர் மணிகண்டனின் அறிக்கை வெளியாகியிருக்கிறது.
‘கூட்டணி என்று முடிவெடுத்தாலும் அதை இப்போது சொல்ல வேண்டிய, பேசிய வேண்டிய அவசியமே இல்லை. நமக்கான முக்கியத்துவத்தை உருவாக்கிட்டே இருக்கணும். தேர்தல் நெருங்கும்போதுதான் அதற்கான வேலைகளில் இறங்கணும். இதையெல்லாம் சொல்லி அன்புமணிக்கு யார் புரியவைக்கிறது’ என்றும் வருத்தத்துடன் ராமதாஸ் சொன்னதாகச் சொல்கிறார்கள். அப்பாவுக்கும் மகனுக்கும் இடையில் ஒரு மெல்லிய கோடு வந்துவிட்டதையே இந்த அறிக்கை காட்டுகிறது” என்று முடிந்தது அந்த ஸ்டேட்டஸ். அதற்கு லைக் போட்டதுடன் அப்படியே காப்பி செய்தும் ஷேர் செய்தது வாட்ஸ் அப்.
கமலின் மக்கள் நீதி மய்யத்தில் தொடர்ந்து உறுப்பினர்கள் சேர்க்கை நடந்துவருகிறது. நேற்று தனது கட்சி அலுவலகத்தில் உள்ள டெக்னிக்கல் டீம் நிர்வாகிகளுடன் அவசர மீட்டிங்கை நடத்தியிருக்கிறார் கமல். அப்போது, கமல் கேட்ட முதல் கேள்வி, ‘இதுவரை எவ்வளவு பேர் உறுப்பினர்களாகச் சேர்ந்திருக்கிறார்கள்?’ என்பதுதான். டெக்னிக்கல் டீம் உடனடியாக லேப்டாப்பில் டேட்டாவை எடுத்திருக்கிறது. 6 லட்சத்து 30 ஆயிரத்து சொச்சம் என ஒரு லிஸ்ட்டை கமல் கையில் கொடுத்திருக்கிறார்கள். அதை வாங்கிப் பார்த்தவர், ‘இதுக்கு முன்பு என் மன்றத்துல இருந்தவங்களே 5 லட்சம் பேரு இருப்பாங்களே... அப்போ மன்றத்தைத் தவிர வெளியிலிருந்து ஒரு லட்சம் அளவுக்குத்தான் வந்திருக்காங்களா? இப்படியே போனால் எப்படி நம்ம டார்கெட்ட எட்ட முடியும்?’ எனக் கேட்டாராம். அதற்கு டீம் உறுப்பினர்கள் சில ஐடியாக்களை சொல்லியிருக்கிறார்கள். எல்லாவற்றையும் கமல் கேட்டுக்கொண்டாலும், ‘இதுல எதுவும் எனக்கு திருப்தியாக இல்லை. நாம திரும்பவும் வெள்ளிக்கிழமை மீட் பண்ணுவோம்’ எனச் சொல்லிவிட்டாராம்”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக