புதன், 16 மே, 2018

தமிழ்நாட்ட சீரழிச்சிட்டியே எடப்பாடி!” சாமியாடிய பக்தர்… அதிர்ந்த எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமிvikatan vikatan ::ஜெ.அன்பரசன் அர்ச்சனை என் பேருக்கு இல்ல… சாமி பேருக்கு.” “எந்த சாமிக்குமா?” “நம்ம தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அய்யா பேருக்கு…”
– என்ற விளம்பரத்தின் முடிவில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருப்பதி வெங்கடாஜலபதி வடிவில் தனது தெய்வீகக் காட்சியை பக்தர்களுக்கு அருள்வார். அந்த விளம்பரம் பற்றி சமூக வலைதளங்களில் தமிழக மக்கள் வறுத்தெடுக்க, அதன்பிறகு அந்த விளம்பர ஒளிபரப்பை உடனடியாக நிறுத்தியது அரசு. இது, சென்ற வார வைரல்.
இந்த நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது குடும்பத்தினருடன் திருப்பதிக்கு சாமி கும்பிடுவதற்காகச் சென்றுள்ளார். அங்கே, கோயிலில் பக்தர் ஒருவருக்கு திடீரென்று அருள் வந்துவிடவே, எடப்பாடி பழனிசாமியைப் பார்த்து “தமிழ்நாட்டை சீரழிச்சிட்டியே எடப்பாடி…” என்று சாமியாடியபடியே சத்தமாகக் கத்தினார். எதிர்பாராத இந்தச் சூழ்நிலையால் அதிர்ச்சியானது முதல்வர் தரப்பு. உஷாரான பாதுகாவலர்கள், உடனடியாக அந்த பக்தரை சுற்றிவளைத்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
முதல்வர் முன்னிலையிலேயே பக்தர் ஒருவர் இப்படி நேருக்கு நேர் பேசியது, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இணையதளத்திலும் இந்த வீடியோ தற்போது வைரலாகிவருகிறது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தனது குடும்பத்தினருடன் சேலத்திலிருந்து வேலூர் வழியாக கார் மூலம் நேற்று (14.5.2018) திருப்பதிக்குச் சென்றார். தேவஸ்தான இணைச் செயல் அலுவலர் சீனிவாச ராஜு, திருப்பதி ஆர்.டி.ஓ., கனக நரசா ரெட்டி, துணைச் செயல் அலுவலர் பாலாஜி, ஏ.எஸ்.பி. முரளி கிருஷ்ணா ஆகியோர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது குடும்பத்தினரை வரவேற்றனர். அதன் பின்னர் நடைபெற்ற ஆந்திர போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொண்டார்.  அதன்பின்னர், நேற்றிரவு தன் குடும்பத்தினர் மற்றும் அதிகாரிகளுடன் லக்ஷ்மி நரசிம்மர் கோயிலுக்குச் சென்றார். அப்போது, கூட்டத்தில் இருந்த பக்தர் ஒருவர், திடீரென சாமி வந்து ஆக்ரோஷமாகக் கத்தினார். “எடப்பாடியை என்னை வந்து பாத்துட்டுப் போகச் சொல்லு…. தமிழ்நாட்டை சீரழிச்சிட்டியே… என்கிட்ட வரச் சொல்லு… ஒருமுறை அவன…” என்று முதல்வரை ஒருமையில் குறிப்பிட்டுப் பேசியது, அங்கிருந்த அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனாலும் சூழ்நிலையை உணர்ந்துகொள்ளாத அந்த பக்தர், தொடர்ந்து  கத்திக்கொண்டே அங்கும் இங்கும் ஓட, எடப்பாடி பழனிசாமி மட்டுமல்லாமல், அருகில் இருந்த அனைவருமே அதிர்ச்சியில் உறைந்துபோயினர்.
எடப்பாடி பழனிசாமி
கொஞ்சம் தாமதமாக சூழ்நிலையை உணர்ந்துகொண்ட பாதுகாவலர்கள், அந்த பக்தரை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தினர். விசாரித்ததில், அந்த பக்தர் ஸ்ரீவில்லிப்புத்தூரைச் சேர்ந்தவர் என்றும், அவர் பெயர் ஸ்ரீ ராமலு என்பதும் தெரியவந்தது. அதன் பின்னர் ஸ்ரீராமலு, போலீஸாரால் கடுமையாக எச்சரிக்கப்பட்டு  விடுவிக்கப்பட்டார்.
இந்தச் சம்பவத்துக்குப் பின், எடப்பாடி பழனிசாமி திருமலையில் உள்ள விருந்தினர் மாளிகையில் சென்று தங்கினார். இன்று காலை, தனது குடும்பத்தினருடன் வெங்கடாஜலபதியை தரிசனம் செய்தார். ‘தமிழக முதல்வர் தனது பதவியை தொடர்ந்து தக்கவைக்கவேண்டி, குடும்பத்துடன் கோயில் கோயிலாகச் சென்று சாமி தரிசனம் செய்துவருகிறார்’ என்கின்றனர் எதிர்க்கட்சியினர். இந்த நிலையில், நேற்று திருப்பதியில் பக்தர் ஸ்ரீ ராமலு திட்டியதைக் கண்டிப்பாக எடப்பாடி பழனிசாமி எதிர்பார்த்திருக்க மாட்டார். இது, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘கோயிலுக்கு அடிக்கடி செல்வதால், தன்னை சாமி என்று நினைத்துக்கொள்ளக் கூடாது. அப்படி நினைத்தால், அந்தச் சாமியே இப்படித்தான் தண்டிக்கும்’ என்று நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் எடப்பாடி பழனிசாமியை வறுத்தெடுத்துவருகிறார்கள்.
vikatan.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக