சனி, 5 மே, 2018

தமிழகத்தின் மீது தொடர்ந்து காறி துப்பும் மத்தியஅரசும் உச்ச நீதிமன்றமும் ..

வினவு :மத்திய அரசும் உச்சநீதிமன்றமும் சேர்ந்து மீண்டும் ஒருமுறை
தமிழகத்தின் மீது காறித் துப்பியுள்ளன. ஒரு நதியின் கீழ்ப்பகுதிக்கும் அதன் டெல்டா பகுதிகளும் அந்நதியின் நீரில் உள்ள நியாயமான பங்கை தனது இறுதித் தீர்ப்பில் மறுத்ததன் மூலம் ஏற்கனவே தமிழகத்தின் மீது எச்சில் துப்பியது உச்சநீதிமன்றம். மேலும் தமிழகத்திற்கான நீர் அளவையும் தனது இறுதித் தீர்ப்பில் குறைத்து அறிவித்தது.
அவ்வாறு குறைக்கப்பட்ட அளவிலான நீரைத் தமிழகத்திற்கு வழங்குவதற்கான முறையையும் தெளிவாக விளக்கவில்லை. மேலாண்மை வாரியம் என நேரடியாக குறிப்பிடாமல் “ஸ்கீம்” என்கிற வார்த்தையைப் பயன்படுத்தி மத்திய அரசு வார்த்தை விளையாட்டில் ஈடுபடுவதற்கான கதவைத் திறந்து வைத்த உச்ச நீதிமன்றம், பற்றாக்குறை காலத்தில் தண்ணீர்ப் பகிர்வு குறித்தும் தனது தீர்ப்பில் விளக்கவில்லை.

அநீதியான அந்தத் தீர்ப்பாவது அமல்படுத்தப்பட்டால் தாகத்தைத் தீர்க்க முடியா விட்டாலும் தொண்டையையாவது நனைத்துக் கொள்ளலாம் என தமிழகம் எதிர்பார்த்தது. காவிரி நீர்ப் பகிர்வுக்கான வரைவுத் திட்டமொன்றை மத்திய அரசு சமர்பிப்பதற்கு வழங்கப்பட்ட 6 வார கால அவகாசத்தில் ஏதும் செய்யாமல் இறுதி நேரத்தில் உச்சநீதிமன்றத்தை நாடிய மோடி அரசு, “ஸ்கீம்” என்கிற வார்த்தைக்கு என்ன அர்த்தம் எனக் கேட்டு மீண்டுமொரு முறை தமிழகத்தின் மேல் எச்சில் துப்பியது.

இதை எதிர்த்து மத்திய அரசின் மேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தது தமிழக அரசு. அப்போது மத்திய அரசைச் செல்லமாக கடிந்து கொண்ட உச்சநீதிமன்றம், உரிய விளக்கம் ஏதும் அளிக்காமல் நாங்கள் சொன்ன தீர்ப்பை செயல்படுத்த ஒருவரைவு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். மே 3-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.
இதற்கிடையே வரைவு அறிக்கையைத் தயாரிக்கும் பணி முடியவில்லை, மேலும் கால அவகாசம் வேண்டும் என மத்திய அரசு ஒரு கோரிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்து அம்மனுவும் தள்ளுபடியானது. இன்று மே 4-ம் தேதி. வரைவு அறிக்கையைத் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் விதித்த கெடு நேற்றோடு முடிந்தது . இந்நிலையில் வரைவு அறிக்கை தயாராகவே இல்லை என்று சொன்ன மத்திய அரசு, கர்நாடகா தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமரும் அமைச்சர்களும் இருக்கிறார்கள்.. ஆகையால் வரைவு அறிக்கைக்கான ஒப்புதலைப் பெற முடியவில்லை என பச்சை பொய்யை சொல்லியிருக்கிறது.
மத்திய அரசின் பச்சைப் பொய்யை அப்படியே விழுங்கிக் கொண்ட உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள், கர்நாடகாவில் தேர்தல் நடைபெறுவது பற்றி எங்களுக்குக் கவலையில்லை என மயிலிறகால் அடித்துள்ளனர். கர்நாடக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞரோ, தற்போதைய சூழ்நிலையில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று கூறியுள்ளார். கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் இதே கருத்தைக் கூறியுள்ளார்.
ஏனினும் ”கோபம்” அடைந்த நீதிபதிகள், காவிரி விவகாரத்தில் அரசியல் காரணங்களை ஏற்க முடியாது. தமிழகத்துக்கு இந்த மாதம் 4 டிஎம்சி நீர் கர்நாடகா அரசு திறந்துவிட வேண்டும். இந்த உத்தரவை மீறினால், கர்நாடக அரசு கடும் விளைவைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தகவல் தொழில்நுட்பமும், போக்குவரத்து வசதிகளும் இந்தளவுக்கு முன்னேறிய காலத்தில் ’பிரதமர் ஊரில் இல்லை’ என்று நொண்டிச் சாக்கு சொன்னதற்கோ, தயாராகவில்லை என்று சொல்லி விட்டு இப்போது எல்லாம் தயார் ஆனால் கையெழுத்து போட ஆளில்லை என்று பொய் சொன்னதற்கோ மோடி அரசை உச்சநீதிமன்றம் எந்தவகையிலும் தண்டிக்கப் போவதில்லை. ஏற்கனவே இதே உச்சநீதிமன்றம் வழங்கிய எந்த இடைக்காலத் தீர்ப்பையும் கர்நாடகம் மதித்ததில்லை – அதற்காக தண்டிக்கப்பட்டதும் இல்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக