வியாழன், 24 மே, 2018

முதல்வர் பழனிசாமி : தற்காப்புக்காகவே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது ! பொய்யான தகவல்களை அளிக்கிறார் ஸ்டாலின்:

tamilthehindu : செய்தியாளர் சந்திப்பில் முதல்வர் பழனிசாமி. உடன் துணை முதல்வர் ஓபிஎஸ், தமிழக அமைச்சர்கள் | படம்: எல்.சீனிவாசன். திட்டமிட்டு துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை. தற்காப்புக்காக நடத்தப்பட்டது என்று முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்தார்.
மேலும், திட்டமிட்டு அரசியல் நாடகத்தை அரங்கேற்ற வேண்டும் என்பதற்காகத் தன் அறையில் அமர்ந்து விட்டு ஊடகங்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தவறான செய்தியை அளித்திருப்பதாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:
''இன்று காலை 11 மணிக்கு சட்டப்பேரவை தலைவர் அறையில் அலுவல் ஆய்வுக்கூட்டம் நடைபெறுவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், நான், துணை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், ஆய்வுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றோம். அப்போது, எதிர்க்கட்சித் தலைவர், எதிர்க்கட்சித் துணைத் தலைவர், காங்கிரஸ் சட்டப்பேரவை தலைவர் ஆகியோர் கூட்டத்தின் நடுவிலேயே சட்டப்பேரவையிலிருந்து வெளியேறி விட்டனர்.

அலுவல் ஆய்வுக்கூட்டத்தில் சபாநாயகர் எந்தெந்த தேதியில் என்னென்ன துறைகளுக்கு மானியக் கோரிக்கைக்கு எடுத்துக் கொள்ளலாம் என ஆலோசிக்கப்பட்டது. ஒருசில நிமிடங்களில் ஊடகங்களில் பார்த்த போது, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் என்னைப் பார்க்கச் சென்றதாகவும், அதற்கு நான் மறுத்ததாகவும் செய்திகள் வெளியாகின. அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் சபாநாயகர் அறையில் நாங்கள் இருந்தோம். எனது எதிரில் தான் எதிர்க்கட்சித் தலைவர் அமர்ந்திருந்தார். அப்போதே என்னிடம் அவர் மனுவைக் கொடுத்திருக்கலாம். இல்லையென்றால் ஆய்வுக்கூட்டம் முடிந்த பிறகு, என் அறைக்கு வந்து மனுவை அளித்திருக்கலாம்.
ஆனால், வேண்டுமென்றே திட்டமிட்டு அரசியல் நாடகத்தை அரங்கேற்ற வேண்டும் என்பதற்காக என்னுடைய அறையில் அமர்ந்துவிட்டு ஊடகங்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தவறான செய்தியை அளித்திருக்கிறார். உண்மைக்குப் புறம்பான செய்தியை தெரிவித்திருக்கிறார்.
23-03-2013 அன்று ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள பொதுமக்களிடமிருந்து அந்த ஆலைக்கு எதிராக தமிழக அரசுக்கு புகார் வந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா 29-03-2013 அன்று ஸ்டெர்லைட் ஆலைக்கு கொடுக்கப்பட்ட மின் இணைப்பைத் துண்டித்தார். அதுமட்டுமல்லாமல் ஆலையின் உரிமத்தையும் ரத்து செய்தார். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், 31-05-2013 அன்று ஆலையை தொடர்ந்து இயக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்தது. அந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.9-04-2018 அன்று ஆலையை தொடர்ந்து இயக்க அந்த ஆலை நிர்வாகம் தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு விண்ணப்பித்தது. அதற்கு அனுமதி வழங்க தமிழக அரசு நிராகரித்து விட்டது. அதன்படி, அந்த ஆலையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது.
தமிழக அரசு மக்களுடைய உணர்வுகளை மதித்து ஆலையை மூடுவதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறது. எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களும், சில இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் வேண்டுமென்றே அப்பாவி மக்களை தூண்டிவிட்டு போராட்டத்தை நடத்துகின்றனர். தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளை 14 முறை மாவட்ட நிர்வாகம் போராட்டக்காரர்களிடம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஆலையின் உரிமத்தை புதுப்பிக்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்காததை 14-4-2018 அன்று அனைத்து செய்தித்தாள்களிலும் மாவட்ட நிர்வாகம் விளம்பரப்படுத்தியிருக்கிறது. ஆலை தற்போது இயங்கவில்லை.
பலமுறை போராட்டங்களை தூத்துக்குடி மக்கள் அறவழியில் நடத்தியிருக்கின்றனர். ஆனால், இம்முறை, சில சமூக விரோதிகள் போராட்டத்தில் ஊடுருவி தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுப்பதற்காக போராட்டத்தை மோசமான நிலைமைக்கு கொண்டு வந்திருக்கின்றனர். 144 தடை உத்தரவை மீறி இச்சம்பவம் நடந்துள்ளது. 144 தடை உத்தரவை மீறி மு.க.ஸ்டாலின் அங்கு சென்று வந்திருக்கிறார். அவர் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும்.
ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் கண்ணீர் புகை குண்டு, தடியடி நடத்தியும் மக்கள் ஒத்துழைக்காததால் வேறு வழியில்லாமல்  துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அடித்தால் தடுக்கப் பார்ப்பது இயற்கையே. தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு திட்டமிட்டு நடத்தப்படவில்லை. தற்காப்புக்காகவே நடத்தப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொது சொத்துகள் சேதப்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால், மிகுந்த வேதனையையும் துயரத்தையும் தமிழக அரசு அடைந்துள்ளது” என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
முன்னதாக, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்களை துப்பாக்கிச் சூடு நடத்தி 12 பேர் உயிரிழக்கக் காரணமாக இருந்த தமிழக அரசு மீது கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது. இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஸ்டாலின் உள்ளிட்டோர் இன்று (வியாழக்கிழமை) முதல்வரைச் சந்திக்க அவரது அறைக்குச் சென்றனர். அப்போது அவரை போலீஸார் மடக்க முயன்றனர். அவர்களைத் தள்ளிவிட்டு ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் சென்றனர்.
இதற்கு போலீஸார் அனுமதிக்காத நிலையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து முதல்வர் அறை வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து வெளியே வந்த ஸ்டாலின் தலைமையிலான திமுகவினர் சாலைக்கு வந்தனர். தலைமைச் செயலகம் எதிரே திடீரென ஸ்டாலின் உள்ளிட்டோர் சாலையில் அமர்ந்தனர். இதனால் ராஜாஜி சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதையடுத்து போலீஸார் மறியலில் ஈடுபட்ட ஸ்டாலின் உள்ளிட்டோரை குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு காரணமான முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும், டிஜிபி பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் அதுவரை போராட்டம் தொடரும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் பழனிசாமி, திட்டமிட்டு துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை. தற்காப்புக்காக நடத்தப்பட்டது என்றும், திட்டமிட்டு அரசியல் நாடகத்தை அரங்கேற்ற வேண்டும் என்பதற்காகத் தன் அறையில் அமர்ந்து விட்டு ஊடகங்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தவறான செய்தியை அளிக்கிறார் என்றும் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக