திங்கள், 28 மே, 2018

கீழடி அகழாய்வில் மேலும் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட பொருட்கள் கண்டெடுப்பு

BBC :சிவகங்கை மாவட்டம் கீழடி கிராமத்தில் நடந்த தொல்லியல்
அகழாய்வில் 2,000க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கிடைத்திருப்பதாக ஆய்வை நடத்திய மாநில தொல்லியல் துறை தெரிவித்திருக்கிறது. >மதுரை நகரத்திற்கு தென் கிழக்கில் சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் சிவகங்கை மாவட்டத்தில்
அமைந்திருக்கும் கீழடி என்ற கிராமத்தில் கடந்த 2014ஆம் ஆண்டிலிருந்து இந்தியத் தொல்லியல் துறையால் மூன்று தடவைகளாக அகழாய்வு மேற்கொள்ளப்பட்டுவந்தது. இதில் 7818 தொல் பொருட்கள் கிடைத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த ஆய்வுகளில் காணக்கிடைத்த பல கட்டடத் தொகுதிகளும், தொல் பொருட்களும் இங்கு ஒரு சங்ககால நகரம் இருந்ததற்கான சான்றுகளைத் தந்தன. இருந்தபோதும் அங்கு ஆய்வுகளைத் தொடர்வதில்லையென மத்தியத் தொல்லியல் துறை முடிவுசெய்தது.
இதற்குப் பிறகு அங்கு கிடைத்த பொருட்கள், அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் உள்ள பீட்டா அனாலிட்டிக் நிறுவனத்துக்கு கார்பன் டேட்டிங் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த ஆய்வுக்கு அனுப்பப்பட்ட முதலாவது மாதிரியின் காலம் 2,160 ஆண்டுகள் அல்லது அதற்கு 30 ஆண்டுகள் முன்போ, பின்போ பழமையானதாக இருக்கும் என்றும், இரண்டாவது மாதிரியின் காலம், 2,200 ஆண்டுகள் அல்லது அதற்கு 30 ஆண்டுகள் முன்போ, பின்போ பழமையானதாக இருக்கும் என்றும் ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது. இதற்குப் பிறகு, கீழடியில் மாநில அகழாய்வுத் துறையாவது தொடர்ந்து ஆய்வுகளை நடத்த வேண்டுமென கோரிக்கைகள் எழுந்த நிலையில், 2017-2018ல் பட்டறைப் பெரும்புதூரிலும் கீழடியிலும் ஆய்வு நடத்த அனுமதி அளிக்கக்கோரி தொல்லியல் துறைக்கான மத்திய ஆலோசனைக் குழுவிடம் விண்ணப்பித்தது. இதற்கென மாநில அரசு 55 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதில், கீழடியில் ஆய்வுநடத்த முதலில் அனுமதி கிடைத்தது. இதன் பிறகு கீழடியில், மத்திய தொல்லியல் துறை ஆய்வு நடத்திய இடத்திற்கு அருகில் ஆய்வுப் பணிகள் இந்த ஆண்டில் துவங்கின. 10க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு, அதிலிருந்து 2,000க்கும் மேற்பட்ட தொல் பொருட்கள் கிடைத்திருப்பதாக மாநில தொல்லியல் துறையின் இயக்குனராக இருந்த ஜெகன்னாதன் பிபிசியிடம் தெரிவித்தார். <">கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு
இது தவிர, உறைகிணறு ஒன்றின் கட்டுமானம் ஒன்றும் கிடைத்துள்ளது. இந்த உறை கிணறு 93 சென்டிமீட்டர் சுற்றளவு கொண்ட ஆறு உறைகளைக் கொண்டிருக்கிறது. இதற்கு முன்பாக கீழடியில் மத்தியத் தொல்லியல் துறை நடத்திய ஆய்விலும் இதேபோல இரண்டு உறை கிணறுகள் கிடைத்தந. தற்போது கிடைத்துள்ள பொருட்களை ஆவணப்படுத்தும் முயற்சிகளும் கார்பன் டேட்டிங் ஆய்வுக்கு அனுப்பும் முயற்சிகளும் தற்போது நடந்துவருவதாக ஜெகன்னாதன் தெரிவித்தார். இதற்கு முந்தைய காலங்களில் அகழாய்வு முடிந்த பிறகு, ஆய்வுக்கென தனியாக அரசிடம் நிதி கோரி, அதற்குப் பிறகுதான் கார்பன் டேட்டிங் ஆய்வுக்கு பொருட்களை அனுப்புவது வழக்கமாக இருந்தது. "ஆனால், இப்போது துவக்கத்தில் ஒதுக்கப்படும் நிதியிலிருந்தே ஆய்வுகளுக்கென நிதி தனியாக எடுத்துவைக்கப்பட்டுவிடுகிறது. இதனால், கார்பன் டேட்டிங் போன்ற ஆய்வுகளை உடனடியாகச் செய்ய முடியும்" என்கிறார் ஜெகன்னாதன்.
இதேபோல, சென்னையிலிருந்து 60 கி.மீ. தூரத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பட்டறைப் பெரும்புதூரில் தொல்லியல் ஆய்வு நடத்த அனுமதி கிடைத்ததையடுத்து அங்கும் மாநில தொல்லியல் துறை ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறது. இதற்கென 20 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஆய்வுகள் துவங்கப்பட்டுள்ளன. 2016ல் இங்கு நடத்தப்பட்ட ஆய்வில் சமூக - கலாச்சார ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த பல தொல் பொருட்கள் கிடைத்தன. கற்காலம், இரும்புக் காலம், வரலாற்றுத் தொடக்க காலம் ஆகியவற்றைச் சேர்ந்த மக்கள் இங்கு வாழ்ந்திருக்கக்கூடும் என முந்தைய ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
மாநில தொல்லியல் துறை நடத்திவரும் இந்த ஆய்வுகளைத் தவிர, மத்தியத் தொல்லியல் துறை கொடுமணலில் ஒரு அகழாய்வை மேற்கொண்டுவருகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக