வியாழன், 3 மே, 2018

காவிரி ... உச்ச நீதிமன்றம் மத்திய அரசிற்கு மேலும் இருவாரம் கால அவகாசம் அளித்துள்ளது

தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்ற அரியலூர் விவசாயி தட்சிணாமூர்த்தி. | படம்: வி.வி.கிருஷ்ணன்.- ஆர்.ஷபிமுன்னா THE HINDU TAMIL : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் நடத்தினர். இதற்காக, காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் 15 பேர் தமிழகத்தில் இருந்து டெல்லி வந்திருந்தனர்.
காவிரி மேலாண்மை வாரியம் மீதான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதை எதிர்பார்த்து தமிழகத்தில் இருந்து சில விவசாயக் குழுவினர் டெல்லி வந்திருந்தனர். உச்ச நீதிமன்றத்தின் வளாகத்தினுள் காத்திருந்தவர்கள், தங்களுக்கு சாதகமான உத்தரவு வராததால் அதிருப்தி அடைந்தனர். இதனால், திடீர் என எவரும் எதிர்பாராத வகையில் உச்ச நீதிமன்ற வளாகத்தினுள் போராட்டம் நடத்தினர்.

 
இதில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் இட்டனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. வழக்கமாக உச்ச நீதிமன்ற வளாகத்தின் புல்வெளியில் கூடியிருந்த ஊடகங்கள் இந்த சம்பவத்தை படம் எடுக்கத் தொடங்கினர். இதற்கிடையே, அரியலூர் மாவட்ட விவசாயியான தட்சணாமூர்த்தி என்ற விவசாயி உச்ச நீதிமன்ற வளாகத்தில் இருந்த ஒரு மரத்தில் தூக்கிலிட்டு தற்கொலை செய்வதாகக் கூறி ஏறிக் கொண்டார்.
இதற்குமுன், ஜந்தர் மந்தரில் ஒருமுறை ஆம் ஆத்மி நடத்திய விவசாயிகள் போராட்டத்தில் ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு விவசாயி மரத்தில் ஏறி தூக்கு மாட்டுக் கொண்டு தற்கொலை செய்திருந்தார். எனவே, இதனால், அங்கு சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது. பிறகு தட்சிணாமூர்த்தியை சமாதானப்படுத்தி பாதுகாப்பு போலீஸார் மரத்தில் ஏறி அவரை கிழே இறக்கினர். பிறகு பாதுகாப்பு போலீஸார் வந்து விவசாயிகளை திலக் மார்க் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.  இது குறித்து ‘தி இந்து’விடம் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் இளங்கீரன் கூறும்போது, ''வாரியம் அமைக்கக் கூறி உத்தரவிடப்படும் என எதிர்பார்த்து ஏமாந்தோம். வெறும் 5 டிஎம்சி நீர் அளித்தது போதாது. மத்திய அரசிற்கு மேலும் இருவாரம் கால அவகாசம் அளித்துள்ளதும் கவலைக்குரியது. இதுபோல், அவகாசம் தொடர்ந்து அளிக்காமல் மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு நீர் திறந்துவிடப்பட்டால்தான் இந்த வருடம் ஒரு போகம் சாகுபடியாவது இந்த வருடம் செய்ய முடியும். நாங்கள் செய்த போராட்டம் சட்டவிரோதம் என்பது தெரிந்திருந்தாலும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கவனத்தில் கொண்டுவரவே இதை செய்ய வேண்டியதாயிற்று'' எனத் தெரிவித்தனர்.
டெல்லியிலுள்ள உச்ச நீதிமன்ற வளாகம் பாதுகாக்கப்பட்ட இடமாகக் கருதப்படுகிறது. இதன் உள்ளே நுழையும் அனைவரும் பலத்த சோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இவர்களை மீறி தமிழக விவசாயிகள் ஒருவர் பின் ஒருவராக உள்ளே நுழைந்து போராட்டம் நடத்தி உள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக