ஞாயிறு, 20 மே, 2018

திமுக - காங்கிரஸ் கூட்டணி: மு.க.ஸ்டாலின்

திமுக - காங்கிரஸ் கூட்டணி: மு.க.ஸ்டாலின்
மின்னம்பலம் :புதுச்சேரி மாநில திமுக நிர்வாகிகளுடன் நேற்று கலந்தாய்வு நடத்திய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க அதிகமான வாய்ப்புகள் உள்ளதாகக் கூறியுள்ளார்.
தமிழகம் முழுக்க அனைத்து மாவட்ட நிர்வாகிகளையும் சந்தித்து அறிவாலயத்தில் ஆய்வுக்கூட்டம் நடத்திய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், நேற்று (மே 19) புதுச்சேரி வடக்கு, புதுச்சேரி தெற்கு, காரைக்கால் நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதற்காக, நேற்று முன்தினம் அவர் புதுச்சேரிக்குள் வந்தபோது, ஜிப்மர் மருத்துவமனை அருகே ஸ்டாலினுக்கு வரவேற்பளித்தனர் அம்மாநில திமுக நிர்வாகிகள். புதுச்சேரி வடக்கு மாநிலச் செயலாளர் எஸ்.பி.சிவக்குமார், தெற்கு மாநிலச் செயலாளர் சிவா, காரைக்கால் நாஜிம், விழுப்புரம் மாவட்டச் செயலாளர் பொன்முடி உட்படப் பலர் அங்கிருந்தனர்.

அன்றிரவு ஹோட்டல் அக்கார்டில் தங்கிய ஸ்டாலின், திமுக நிர்வாகிகள் அனைவரையும் போகச் சொல்லிவிட்டாராம். வழக்கமாக, ஸ்டாலினுடன் அதிக நேரம் செலவழிக்கும் பொன்முடியும் கூட, நேற்று முன்தினம் அவருடன் இருக்கவில்லை. ஸ்டாலின் அறைக்குச் சென்ற சிறிது நேரத்தில் அவர் வெளியே வந்துவிட்டார்.
நேற்று காலை 9.00 மணிக்கு அக்கார்டு ஹோட்டலிலிருந்து புறப்பட்ட ஸ்டாலின், களஆய்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஹோட்டல் ஆனந்தா-இன் மீட்டிங் ஹாலுக்கு நேராகச் சென்றார். முதலில் வடக்கு மாநில கிளைச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் உள்ளே சென்றனர். அப்போது, அன்பகம் கலையுடன் வந்த ஒரு ஸ்பெஷல் டீம், உள்ளே செல்லும் ஒவ்வொரு திமுக நிர்வாகியையும் சோதித்தது. ஒவ்வொருவரையும் முழு பரிசோதனை செய்தபோது, சிலரிடம் இருந்த செல்போன்களைப் பறிமுதல் செய்தனர் இந்த டீமைச் சேர்ந்தவர்கள்; கலந்தாய்வு அழைப்பு மற்றும் ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அட்டை கொண்டு வந்தவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
களஆய்வுக்கான அழைப்பு அனுப்பும்போதே, ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அட்டையைக் கட்டாயம் எடுத்துவர வேண்டும் என்று திமுக தலைமைக்கழகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதனால், பல நிர்வாகிகள் தங்களது செல்போன்களை கார்களிலும் அருகிலுள்ள கடைகளிலும் கொடுத்துவிட்டு கள ஆய்வுக்குச் சென்றனர்.
காலையில் வடக்கு மாநில மற்றும் தெற்கு மாநில புதுச்சேரி திமுக நிர்வாகிகளுக்கான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. மதியம் ரூ.700 மதிப்பில் அனைவருக்கும் மட்டன் பிரியாணி, சிக்கன் 65 எனச் சுவையான உணவு வழங்கப்பட்டது. மதிய உணவுக்குப் பிறகு, 2.40 மணிக்கு ஹோட்டல் அக்கார்டுக்கு சென்ற ஸ்டாலின், மீண்டும் மாலையில் ஹோட்டல் ஆனந்தா-இன் மீட்டிங் ஹாலுக்கு வந்தார். அவர் வருவதற்கு முன்பாகவே, காரைக்கால் மாநில நிர்வாகிகள் அங்கு குவிந்திருந்தனர். பத்திரிகையாளர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
திமுகவைச் சேர்ந்த சிலர், ஸ்டாலினுடன் போட்டோ எடுக்கமுடியாமல் தவித்துக் கொண்டிருந்தனர். அவர்களிடம் சென்று விசாரித்தோம். அழைப்பு விடுக்கப்பட்ட வடக்கு மாநில நிர்வாகிகளில் சுமார் 30 சதவிகிதம் பேர் வரவில்லை என்றும், தெற்கு மாநில நிர்வாகிகளில் சுமார் 20 சதவிகிதம் பேர் வரவில்லை என்றும் தெரியவந்தது. காரைக்கால் மாநில நிர்வாகிகளும் இதற்கு விதிவிலக்கில்லை.
திமுக நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் தவிர்த்ததற்கு என்ன காரணம் என்று கேட்டோம். “இப்போதிருக்கும் நிர்வாகிகள் அனைவரும் நான்கு வருடத்துக்கு முன்பு நியமிக்கப்பட்டவர்கள். அதில் பலர் ஊரை விட்டுப் போய்விட்டார்கள். சிலருக்கு உடல்நலம் சரியில்லை; பலர் கட்சி மாறிவிட்டனர். தற்போது காங்கிரஸ் கட்சியில் உள்ள சில எம்.எல்.ஏக்களே திமுகவிலிருந்து போனவர்கள்தான்” என்ற பதில் கிடைத்தது.
களஆய்வுக்குச் சென்றுவந்த உடன்பிறப்புகளிடம், “உள்ளே என்ன தான் நடந்தது?” என்று கேட்டோம். “கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர்கள் சிலரது தோல்விக்குக் காரணமே திமுகவினர்தான். முதலில் அவர்களைக் களையெடுங்கள் என்று புகார் தெரிவித்தனர் சிலர். செயலாளர்கள் மீது குறைகளையும் குற்றங்களையும் அடுக்கினர். இது தொடர்பாக, பெரும்பாலானோர் புகார் மனு அளித்துள்ளனர். அணியின் அமைப்பாளர்களும் பொறுப்பாளர்களும் பேசும்போது, புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி அமைவதற்கு திமுக பெரும் உதவியாக இருந்ததாகத் தெரிவித்தனர். திமுகவிலிருந்து போனவர்கள்தான் காங்கிரஸ் கட்சியில் எம்.எல்.ஏக்களாக இருப்பதாகவும், இனிமேலாவது காங்கிரஸ் கூட்டணி வேண்டாம் என்றும் கூறினர். இதற்கு மாறாக, தலைமை எடுக்கும் கூட்டணி முடிவை ஆதரிப்போம் என்றும் சிலர் கருத்து தெரிவித்தனர்.
அனைத்துக் கருத்துகளையும் உள்வாங்கிக்கொண்ட ஸ்டாலின், பாஜகவுக்கு எதிரான பலமான கூட்டணியை அமைப்போம் என்று திமுக நிர்வாகிகளிடம் கூறினார். ‘மம்தா பேசினார்; நேற்று (மே 18) சந்திரபாபு நாயுடு தொலைபேசியில் என்னோடு பேசினார்; காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க அதிகமான வாய்ப்புகள் உள்ளது’ என்று தெரிவித்தார் ஸ்டாலின். எது எப்படியோ புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சிக்கும் திமுகவுக்கும் கூட்டணி நிச்சயிக்கப்பட்டுவிட்டது” என்றனர் திமுக உடன்பிறப்புகள்.
ஸ்டாலினின் களஆய்வு விரைவில் கூட்டணி பற்றிய திமுகவின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் என்று தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக