புதன், 30 மே, 2018

பழம்பெரும் இயக்குநர் முக்தா சீனிவாசன் காலமானார்!

விகடன் : பழம்பெரும் இயக்குநரும் தயாரிப்பாளருமான முக்தா சீனிவாசன்
உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
958 -ம் ஆண்டு 'முதலாளி' என்ற படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானார் முக்தா சீனிவாசன். பின், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன் ஆகியோரை வைத்துப் பல ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார். ரஜினி நடித்த 'பொல்லாதவன்' படத்தை இயக்கியவரும் இவரே. ஜெயலலிதாவின் 100 -வது படமான 'சூரியகாந்தி' படத்தையும் இவர்தான் இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 65 படங்களை இயக்கிய இவர் தன் முதல் படத்திற்கே தேசிய விருது பெற்றுள்ளார். 'நாயகன்' உட்பட ஏராளமான படங்களை தயாரித்துள்ளார்.
இயக்குநர், தயாரிப்பாளர் என்பதைத் தாண்டி அரசியலிலும் தடம் பதித்துள்ளார். மூப்பானார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்த போது, அக்கட்சியின் பொதுச் செயலாளராக இவர் நியமிக்கப்பட்டார்.
மேலும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். இதுவரையிலும் சுமார் 350 சிறுகதைகள், மூன்று நாவல்களை எழுதியிருக்கிறார். இவர் எழுதியிருக்கும் சிறுகதைகள் அனைத்தும் 16 தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. மேலும் ‘தமிழ்த் திரைப்பட வரலாறு’, ‘தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் வரலாறு’, ‘கலைஞர்களோடு நான்’, ‘கதாசிரியர்களோடு நான்’, ‘அறிஞர்களோடு நான்’ போன்ற புத்தகங்களையும் எழுதியுள்ளார். தமிழ்த் திரைப்பட வரலாற்றில் மிக முக்கிய பங்கு வகித்தவர் ஆவார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக