வெள்ளி, 4 மே, 2018

ஸ்டாலின்: நீட் தேர்வு முடிவினை உடனடியாக கைவிட வேண்டும்

தினத்தந்தி :ஆயுர்வேதம், சித்தா உள்ளிட்ட படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம்
என்ற முடிவினை உடனடியாக கைவிட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,  தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. ஆயுர்வேதம், சித்தா உள்ளிட்ட படிப்புகளுக்கும் இந்தாண்டு முதல் நீட் தேர்வு கட்டாயம் என்று, மாநில உரிமைகளின் மீது தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கும் பா.ஜ.க. மத்திய அரசு அறிவித்து, அதை அ.தி.மு.க. அரசும் ஏற்றுக் கொண்டிருக்கிறது. எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம் உள்ளிட்ட மருத்துவக்கல்விகளில் நீட் நுழைவுத்தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றமே ஒருமனதாக மசோதா நிறைவேற்றி, அதை ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பியிருந்தும், அ.தி.மு.க. அரசு இரட்டைவேடம் போட்டு இப்படி ஒப்புதல் வழங்கியிருப்பதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

இது ஒருபுறமிருக்க, தமிழகத்தில் உள்ள கிராமப்புற மாணவர்கள் மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்களின் எதிர்காலக் கனவினை தகர்த்துள்ள மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வை நடத்துவதில், பல்வேறு குழப்பங்களை போட்டிப் போட்டுக் கொண்டு விளைவித்து வருகிறது மத்திய பா.ஜ.க. அரசு. குறிப்பாக, தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்களுக்கு ராஜஸ்தான் போன்ற வெளி மாநிலங்களில் தேர்வு மையங்களை ஒதுக்கி வஞ்சித்தது.

சொந்த மாநிலத்தில் தேர்வு எழுதுவதற்கே உயர்நீதிமன்றத்தை நாடி உத்தரவு பெற வேண்டிய கட்டாயத்திற்கு தமிழ்நாட்டு மாணவர்கள் தள்ளப்பட்டதுடன், 6-ந் தேதி தேர்வு நடைபெறுகின்ற நிலையில், வெளி மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்ட தமிழ்நாட்டு மாணவர்களுக்கு, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, தமிழ்நாட்டில் தேர்வெழுத வேண்டிய புதிய தேர்வு மையங்கள் பற்றிய தகவல்கள் இதுவரை அனுப்பப்படவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது.

தமிழகத்தில் உள்ள கிராமப்புற மருத்துவர்களின் எண்ணிக்கையை குறைக்கவும், சமூகநீதியை தட்டிப்பறிக்கவுமே நீட் தேர்வை அறிமுகப்படுத்தி, இவ்வளவு குழப்பங்களை மத்திய பா.ஜ.க., அரசு செய்து கொண்டிருக்கிறது என்பது கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை என்பது போல் அப்பட்டமாகத் தெரிகிறது. மத்திய பா.ஜ.க. அரசின் எதேச்சதிகாரப் போக்காலும், மாநிலத்தில் உள்ள அ.தி.மு.க. அரசின் மெத்தனத்தாலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் நீட் தேர்வில் ஒவ்வொரு ஆண்டும் சொல்லொனாத் துயரத்திற்கு உள்ளாகி வருகிறார்கள்.

நீட் தேர்வில், மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள குழப்பங்களை உடனடியாக சரி செய்து, உரிய தேர்வு மையங்களை மாநிலத்திற்குள்ளேயே ஒதுக்கி, சட்டத்தை மீறிய கெடுபிடிகள் ஏதுமின்றி முறையாக தேர்வு நடைபெறுவதற்கு மத்திய பா.ஜ.க. அரசு அவசர நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.

ஆயுர்வேதம், சித்தா உள்ளிட்ட படிப்புகளுக்கும், 2018-2019 கல்வியாண்டு முதல் நீட் தேர்வு கட்டாயம் என்ற முடிவினை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உடனடியாக கைவிட வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசு ஒருவேளை அதற்கு திரைமறைவில் ஒப்புதல் அளித்திருந்தால், தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள மசோதாவினை மதித்து, உடனடியாக தனது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாட்டு மாணவர்கள் இங்கே தேர்வு எழுத மையங்கள் அமைக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. இது சமூகநீதிக்கு விரோதமான ஒன்று. இதை வன்மையாக கண்டிக்கிறோம்’ என்று கூறியுள்ளார். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக