சனி, 5 மே, 2018

குட்கா வழக்கை திசைதிருப்ப திமுவினரை கைது செய்த எடப்பாடி அரசு

tamilthehindu :கோவையில் சட்டவிரோதமாக குட்கா ஆலை இயங்கிய விவகாரத்தில்
திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளது, இந்த வழக்கை திசை திருப்பும் செயல் என்று அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை கண்ணம்பாளையத்தில் செயல்பட்ட ரகசிய குட்கா ஆலையில் போலீஸார் சோதனை நடத்தினர். இதுகுறித்த தகவல்களை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்று கூறி திமுகவினர் போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக திமுக எம்எல்ஏ நா.கார்த்திக் உள்ளிட்ட 10 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து, அதில் 7 பேரைக் கைது செய்தனர். குட்கா ஆலை நிர்வாகத்துக்கு பேரூராட்சி முன்னாள் தலைவர் உடந்தையாக இருந்ததாகவும் போலீஸார் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில், திமுகவினர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

ஏற்கெனவே சென்னை குட்கா வழக்கில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதை திசை திருப்பவே கோவையில் திடீரென சோதனை நடத்தப்பட்டுள்ளது.
ஆளுங்கட்சி அமைச்சரின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு, சதிவலை பின்னி திமுகவினர் மீது அபாண்டமாக வழக்கு பதிவு செய்துள்ளார் கோவை எஸ்பி.
சென்னை மாதவரம் குட்கா கிடங்கில் நடத்திய சோதனையில் ரூ.250 கோடி வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது தெரியவந்ததுடன், ஒரு டைரியும் கைப்பற்றப்பட்டது. மக்களின் உடல் நலனுக்கும், சுகாதாரத்துக்கும் பொறுப்பான அமைச்சர், சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கக் கூடிய டிஜிபி, சென்னை மாநகர காவல் ஆணையர் உள்ளிட்டோர் ரூ.40 கோடி வரை லஞ்சம் வாங்கியதாக அந்த டைரியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தோம். அரசின் எதிர்ப்பையும் மீறி சிபிஐ விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய முன்னாள் அமைச்சர்கள் ஆ.ராசா, தயாநிதி மாறன் ஆகியோர் மீது புகார் எழுந்தபோது, உடனடியாக பதவி விலகி, புகார்களை சந்தித்தனர். இந்த தைரியம், நேர்மை அதிமுகவினருக்கு உள்ளதா?
இந்த விவகாரத்தை திசை திருப்புவதற்காக திமுகவைச் சேர்ந்த பேரூராட்சித் தலைவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் என்று அவர் பேசினார்.
மத்திய முன்னாள் அமைச்சர்கள் ஆ.ராசா, சுப்புலட்சுமி ஜெகதீசன், முன்னாள் அமைச்சர்கள் பொங்கலூர் பழனிசாமி, வெள்ளக்கோவில் சாமிநாதன் மற்றும் ஏராளமான திமுகவினர் இதில் கலந்து கொண்டனர்.

உள்ளூர் அமைச்சர்?

பின்னர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுகவினரை சந்தித்துப் பேசிய ஸ்டாலின், அங்கு செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவை குட்கா விவகாரத்தில் நியாயமாக உள்ளூர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதும், எஸ்பி மீதும்தான் வழக்கு பதிவு செய்ய வேண்டும். நியாயத்துக்காகப் போராடிய திமுகவினரை கைது செய்துள்ளது சர்வாதிகாரம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக