செவ்வாய், 22 மே, 2018

தூத்துக்குடிக்கு விரைகிறார் ஸ்டாலின்.... குமாரசாமி பதவியேற்பில் பங்கேற்கவில்லை!

Stalin insist on judicial enquiry on tuticorin firing tamil.oneindia.com/authors/aravamudhan: சென்னை: தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் தலைமைச் செயலரை நேரில் சந்தித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார். இந்த நிலையில், தூத்துக்குடிக்கு நேரில் சென்று பார்வையிட உள்ளதால், கர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்கும் விழாவில் பங்கேற்கப் போவதில்லை என்று அவர் கூறினார்.
தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையால் நிலத்தடி நீர் மாசுபடுவதுடன் விவசாயம் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மூச்சுத்திணறல், புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவதாகவும் கூறி கடந்த 3 மாதங்களுக்கு மேலாக அந்த நிறுவனத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் இன்று 100-ஆவது நாளை எட்டியது. போராட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட மக்கள் பேரணியாக சென்றனர். அதை போலீசார் தடுத்து நிறுத்தி, தடியடி நடத்தினர்.

அதையடுத்து பொதுமக்கள் ஆத்திரமடைந்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். அதை தடுப்பதற்காக போலீசார் இரண்டு இடங்களில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 3 பெண்கள் உள்பட 10 பேர் பலியாயினர்.
இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள திமுக செயல் தலைவர் ஸ்டாலின், தலைமைச் செயலகத்துக்கு சென்று தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதனை சந்தித்தார். அப்போது தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்த இடங்களைப் பார்வையிட தூத்துக்குடிக்கு செல்கிறார் ஸ்டாலின். அதனால், கர்நாடகா முதல்வராக குமாரசாமி நாளை பதவியேற்கும் விழாவில் பங்கேற்கப் போவதில்லை என்று அவர் நிருபர்களிடம் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக