வியாழன், 10 மே, 2018

விஷ்ணுப்பிரியா, ஜெகதீஸ் – நேர்மையான காக்கிச்சட்டை உயிர்பிழைக்க முடியுமா?

விஷ்ணுப்பிரியா
ஜெகதீஷ்
வினவு: காவல்துறையின் அட்டூழியங்கள் குறித்து விவாதம் எழும்போதெல்லாம் “காவல்துறையில் நல்லவர்களே இல்லையா” என்று ஒரு கேள்வி எழுப்பப்படுவதுண்டு. காவல்துறையை நேர்மையான அதிகாரிகளின் மூலம் சரிசெய்துவிட முடியும் என்ற நம்பிக்கையும் பலருக்கு இருக்கிறது. சமீபத்திய பல செய்திகள் அப்படியான ‘நல்ல’ அதிகாரிகளுக்குக்கூட இனி பாதுகாப்பில்லை என்பதை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துகின்றன.
முதலாவது செய்தி – திருச்செங்கோடு டி.எஸ்.பி விஷ்ணுபிரியாவின் மர்ம மரணம் தொடர்பான வழக்கை கைவிடுவதாக சி.பி.ஐ அறிவித்திருப்பது; இரண்டாவது செய்தி நெல்லை மாவட்டத்தில் கடந்த திங்கட்கிழமை மணல் மாஃபியாவினால் கொல்லப்பட்ட ஏட்டு ஜெகதீசின் கொலையில் எஸ்.ஐ-க்கும் பங்கிருக்கிறது என ஜெகதீசின் மனைவியே குற்றஞ்சாட்டியிருக்கும் செய்தி. விஷ்ணுபிரியாவின் மரணத்தை பொருத்தவரை, அப்போதைய நாமக்கல் எஸ்.பி.செந்தில்குமார்தான் குற்றவாளி என அன்றைக்கே குற்றச்சாட்டு எழுந்தது. விஷ்ணுபிரியாவின் தோழியும் அப்போதைய கீழக்கரை டி.எஸ்.பி-யுமான மகேஸ்வரி காவல்துறை உயர் அதிகாரிகள் தான் மரணத்திற்கு காரணம் என பகிரங்கமாக பேட்டி கொடுத்தார். அவர் தொடர்ந்து ஊடகங்களில் பேசாதவாறு தடுக்கப்பட்டார். அதன் பிறகு அவருக்கு என்ன நேர்ந்தது என்ற செய்தியில்லை.  விஷ்ணுபிரியாவுக்கு ஆதரவாக இருந்த அதிகாரிகளும் பணியிடமாற்றலுக்கு உள்ளானார்கள்.

கவுண்டர் சாதி வெறியர்களால் கொல்லப்பட்ட கோகுல்ராஜ் கொலைவழக்கிலும், குமாரப்பாளையம் தொழிலதிபர் ஜெகன்னாதன் கொலை வழக்கிலும் உண்மையான குற்றவாளிகளை விடுத்து, போலியான நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணையை கைகழுவ செந்தில்குமார் நெருக்கடி கொடுத்துவந்தார் என்றும், அதை ஏற்க மறுத்த விஷ்ணுபிரியாவுக்கு எஸ்.பி செந்தில்குமார் மூலம் நெருக்கடிகள் தொடர்ந்ததாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.

எஸ்.பி செந்தில்குமார்
அதேபோல விஷ்ணுபிரியாவின் மரணச் செய்தி தெரிந்ததும் அங்கு சென்ற எஸ்.பி செந்தில்குமார் அனைவரையும் வெளியேற்றிவிட்டு முக்கியமான தடயங்களை அழித்தாகவும் செய்திகள் வெளியாகின. அதை உறுதிப்படுத்துவது போல “உயர்போலீஸ் அதிகாரியின் உடலைமீட்கும்போது அதை வீடியோ பதிவு செய்யவேண்டும்” என்பது உள்ளிட்ட நடைமுறைகள் எதுவும் பின்பற்றவில்லை. விஷ்ணுபிரியாவின் கடிதம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் கைப்பற்றி தடயங்களை அழித்தபிறகுதான் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.
பின்னர் இவ்வழக்கை விசாரிக்க செந்தில்குமாரின் நண்பர்களை கொண்டே சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்டது அதிமுக அரசு. இதை எதிர்த்து சி.பி.ஐ விசாரணை கோரி உயர்நீதிமன்றத்தை அணுகினார் விஷ்ணுபிரியாவின் தந்தை. தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட வழக்கை எடுத்துக்கொண்ட சி.பி.ஐ, எந்த ஆதாரமும் இல்லை என வழக்கைக் கைவிடுவதாகத் தற்போது அறிவித்திருக்கிறது.
இதே போல சில ஆண்டுகளுக்கு முன்னர் கர்நாடகாவில் நேர்மையானவர் என்று பெயரெடுத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ரவி, மர்மமான முறையில் தூக்கில் தொங்கினார். மணல் மாஃபியாக்களையும் அதனுடன் தொடர்புடைய அரசியல் தலைவர்களையும் தொடர்ந்து எதிர்த்து வந்த ரவியின் மரணத்தில் மணல் மாபியாக்களின் பங்கு உண்டு என குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் சில ஆண்டுகள் கழித்து அவரது மரணம் தற்கொலை என வழக்கு இழுத்து மூடப்பட்டது. ரவியின் வழக்கையும் சி.பி.ஐ தான் விசாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விருவர் வழக்கிலும் இறந்தவர்களையே குற்றவாளியாக்கும் நோக்கில் பத்திரிகைகள் மூலம் அவதூறு பரப்புரையும் செய்யப்பட்டன.
சி.பி.ஐ ஒன்றும் வானத்திலிருந்து குதித்த கறைபடாத நேர்மையான அமைப்பு அல்ல. இதற்கு எண்ணற்ற சான்றுகள் இருக்கின்றன. சமீபத்தில் காஷ்மீர் சிறுமி ஆஷிஃபாவின் பாலியல் வல்லுறவு – கொலை வழக்கில், காஷ்மீர் மாநில போலீசார் புலன் விசாரணை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கும் நிலையில், வழக்கை தொடக்கத்திலிருந்து சி.பி.ஐ விசாரிக்க வேண்டுமென்று குற்றவாளிகளும் பாஜகவினரும் போராடுகிறார்கள். சி.பி.ஐ இன் நேர்மைக்கு இது சமீபத்திய சான்று.
விஷ்ணுப்பிரியாவின் மரணம் ஒரு தற்கொலை என்று சி.பி.ஐ கோப்பை மூடியிருக்கும் நேரத்தில், அடுத்த போலீசு அதிகாரியின் கொலைச் செய்தி வந்திருக்கிறது.

தலைமைக்காவலர் ஜெகதீசன்
நெல்லை மாவட்டம் விஜயநாராயணம் காவல்நிலையத்தின் தலைமைக்காவலர் ஜெகதீசன் கடந்த திங்கட்கிழமை(07-05-2018) நம்பியாற்றின் அருகில் கொலைசெய்யப்பட்டார். நம்பியாற்றில் மணல் திருட்டு தொடர்பாக கிடைத்த தகவலின் பேரில் காவல்நிலையத்தில் தகவல் அளித்துவிட்டு இரவு பனிரெண்டு மணிக்கு மணல்கொள்ளையர்களை பிடிக்க ஜெகதீஸ் சென்றதாகவும் அப்போது கொலைசெய்யப்பட்டார் என்றும் சொல்கிறது காவல்துறை கொடுத்த பத்திரிகை செய்தி. ஏதோ நம்பியாற்றில் யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாகத்தான் மணல் திருடப்படுவது போலவும், அது பற்றிக் காவல்துறைக்கே தெரியாது என்பது போலவும், மணல் கொள்ளையர்களைப் பிடிக்க தனி ஆளாக ஜெகதீசன் சென்றதாகவும், ஒரே வாக்கியத்தில் ஆயிரம் பொய்களைச் சொல்கிறது காவல்துறை.
ஆனால் இது போலீசார் துணையுடன் நடந்த பச்சைப் படுகொலை என்கிறார் ஜெகதீசின் கர்ப்பிணி மனைவி மரியரோஸ் மார்கரெட். இரவு வீட்டிலிருந்த ஜெகதீசுக்கு காவல்நிலையத்திலிருந்து போன் வந்தததையடுத்து கிளம்பி சென்றிருக்கிறார். ஜெகதீஸ் வீடுதிரும்பாததோடு அறிமுகமில்லாத நபர்களிடமிருந்து தொலைபேசி அழைப்புகள் வந்திருக்கின்றன. காவல்துறையினர் சிலரே வீட்டிற்கு வந்து ஜெகதீஸ் குறித்து விசாரித்து சென்றிருக்கிறார்கள். இதனால் பதற்றமடைந்து உறவினர்களை அழைத்துக்கொண்டு காவல்நிலையம் சென்றதாகவும், அங்கே தனக்கு முறையான தகவல் எதுவும் தரப்படவில்லை என்றும், அதிகாலையில் தன் கணவர் கொல்லப்பட்ட செய்திதான் கிடைத்தது என்றும் கூறியிருக்கிறார் ஜெகதீசின் மனைவி மார்கரெட். அது மட்டுமல்ல, குறிப்பிட்ட எஸ்.ஐ தான் தன் கணவர் சாவுக்கு காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டியிருக்கிறார்.
“இக்கொலையில் போலீசாரும் சம்பந்தப்பட்டிருக்க வாய்ப்பிருக்கிறது. காவல்துறை, வருவாய்துறை, கனிமவளத்துறையின் ஒத்துழைப்பு இல்லாமல் மணல்கொள்ளை நடக்கமுடியாது. லோக்கல் கான்ஸ்டபிள் முதல் தாசில்தார்,டி.எஸ்.பி அனைவருக்கும் மணல் மாஃபியாக்கள் பணம் அளிக்கிறார்கள்.  உயர் அதிகாரிகளும், சக அதிகாரிகளும் குற்றமிழைக்கிறார்கள் என்று தெரியும்போது நாமும் நமக்கெதற்கு வம்பு என்று அந்த கூட்டத்தோடு இணையத்தான் முனைவோம். இந்த அதிகாரி (ஜெகதீஸ்) மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்று முயற்சி செய்திருக்கலாம். அதனால்தான் கொல்லப்பட்டிருக்கிறார்” என்று நியூஸ் மினிட் இணைய இதழுக்கு பேட்டியளித்திருக்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு ஐ.பி.ஸ் அதிகாரி.
போலீசு துறை முற்றிலும் கிரிமினல்மயமாகிவிட்டதையும், நாட்டைத் திருத்த முடியாவிட்டாலும் நம் அளவில் நேர்மையாக இருப்போம் என்று நினைப்பவர்கள் கூட இனி அத்துறையில் உயிர் வாழ முடியாது என்பதையும் இவ்விரு நிகழ்வுகளும் வெட்ட வெளிச்சமாக்கியுள்ளன.
ஆடுமாடுகளை போல உழைக்கும் மக்களையும், நீதிக்காகப் போராடுபவர்களையும் வேட்டையாடி வந்த காவல்துறை, தன் துறையில் நீதி நியாயம் பேசுபவன் யாராவது மிச்சமிருந்தால் அவனையும் ஒழித்துவிடவேண்டும் என்று கைவைக்க ஆரம்பித்துள்ளது.
லோயாவின் மரணத்தில் சந்தேகத்துக்கிடமானவர்கள் அவருடன் இருந்த நீதிபதிகள். விஷ்ணுப்பிரியாவின் மரணத்தில் செந்தில்குமார். ஜெகதீஸின் மரணத்தில் கூடவே இருக்கும் எஸ்.ஐ.
ஊழல் பேர்வழிகளாக இருந்த போதிலும், தங்களையே ஒழித்துக்கட்டும் அளவுக்கு இவர்கள் போகமாட்டார்கள் என்று லோயாவும் ஜெகதீஸும் விஷ்ணுப்பிரியாவும் நம்பியிருக்கிறார்கள். நம்பி மோசம் போய்விட்டார்கள்.
விஷ்ணுபிரியாக்களும், ஜெகதீஸ்களும், லோயாக்களும் நமக்கு உணர்த்தும் செய்தி இதுதான். ஒரு நேர்மையான அதிகாரி, நேர்மையான நீதிபதி, நேர்மையான கட்சி என்று எந்த நேர்மையாளராலும் இந்த அமைப்பைத் திருத்த முடியாது. இது தலை முதல் கால் வரை கிரிமினல்மயமாகிவிட்ட அமைப்பு.
நேர்மையாளர்கள் தம்மளவில் நேர்மையாக வாழ்வதற்கும், உயிரோடு இருப்பதற்குமே இந்த அமைப்பை எதிர்த்துப் போராடித்தான் ஆக வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக