சனி, 26 மே, 2018

சட்ட விரோதக் காவலில் 95 பேர் சித்திரவதை!

மின்னம்பலம : தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தொடர்பாக 95 இளைஞர்களை சட்ட விரோதக் காவலில் வைத்து சித்திரவதை செய்தது தெரியவந்துள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த பலரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அவர்களில் 14 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்திருந்தார். இதற்கிடையில், போராட்டகாரர்களில் 126 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் சிலர் சட்ட விரோதமாகக் கைது செய்யப்பட்டதாக தகவல் பரவியது.
சட்ட விரோதக் காவலில் 95 பேர் சித்திரவதை!இதைத் தொடர்ந்து, வழக்கறிஞர் சந்திரசேகர், தூத்துக்குடி பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்ற தலைமை நீதிபதி பகவதி அம்மாளிடம் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், சட்டவிரோத காவல் பற்றி விசாரணை நடத்தி, அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அதனை ஏற்று, வல்லநாடு துப்பாக்கிப் பயிற்சி சரகத்தில் சட்டவிரோத காவலில் யாராவதுவைக்கப்பட்டுள்ளார்களா என்று நேரில் விசாரிக்குமாறு விளாத்திக்குளம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி காளிமுத்துவேலிடம் நீதிபதி பகவதி அம்மாள் வலியுறுத்தினார்.

நேரில் சென்று பார்த்த நீதிபதி காளிமுத்துவேல், 95 இளைஞர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும், அவர் போலீசாரிடம் விசாரித்து, அவர்கள் சட்ட விரோதக் காவலில் வைக்கப்பட்டிருந்தை உறுதி செய்தார்.
இதையடுத்து, இளைஞர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்புங்கள் அல்லது விடுதலை செய்யுங்கள் என்று போலீசாருக்கு நீதிபதி காளிமுத்துவேல் உத்தரவிட்டார். பின்பு, 65 பேர் மீது வழக்குப் பதிவு செய்துவிட்டு, மீதி 30 பேரை போலீசார் விடுவித்தனர்.
இதையடுத்து 65 பேர் சார்பாக ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த ஜாமீன் மனுக்களை இரவு முழுவதும் மாவட்ட நீதிபதி சாருஹாசினி விசாரித்து, 65 பேரையும் விடுதலை செய்தார். மேலும், யாராவது ஜாமீன் கேட்டு வருவார்கள் என அவர் நள்ளிரவு வரை நீதிமன்றத்தில் காத்திருந்தார். யாரும் வராததை அடுத்து, இரவு 11 மணிக்கு புறப்பட்டுச் சென்றார். யாராவது ஜாமீன் மனு போட்டால், தனது வீட்டுக்கு அழைத்து வாருங்கள் என்று வழக்கறிஞரிடம் கூறிவிட்டுச் சென்றார்.
ஜாமீனில் விடுவிக்கப்பட்ட 65 பேரும் மருத்துவப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பலர் ரத்தக் காயத்துடனும், அதிக வலியுடனும், வேதனையுடன் நடந்து சென்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக