சனி, 26 மே, 2018

தூத்துக்குடி சட்டவிரோத காவலில் 95 பேர் சித்ரவதை நேரில் பார்த்த நீதிபதி அதிர்ச்சி

தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக சட்டவிரோத காவலில் 95 பேர் சித்ரவதை நேரில் பார்த்த நீதிபதி அதிர்ச்சி
 தினத்தந்தி :  தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக 95 வாலிபர்களை சட்டவிரோத காவலில் வைத்து போலீசார் சித்ரவதை செய்தது தெரிய வந்துள்ளது. தூத்துக்குடி, தூததுக்குடி சம்பவம் தொடர்பாக 95 வாலிபர்களை சட்டவிரோத காவலில் வைத்து போலீசார் சித்ரவதை செய்தது தெரிய வந்துள்ளது. அந்த வாலிபர்களுக்கு ஜாமீன் அளிக்கப்பட்டது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து, 126 கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன், பலர் சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டதாகவும் தகவல் பரவியது. இதுதொடர்பாக சந்திரசேகர் என்ற வக்கீல், தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு பகவதி அம்மாளிடம் ஒரு மனு கொடுத்தார். சட்டவிரோத காவல் பற்றி விசாரணை நடத்தி, அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அதை ஏற்று, வல்லநாடு துப்பாக்கி பயிற்சி சரகத்தில், சட்டவிரோத காவலில் யாராவது வைக்கப்பட்டுள்ளார்களா? என்று நேரில் போய் விசாரிக்குமாறு விளாத்திகுளம் மாஜிஸ்திரேட்டு காளிமுத்துவேலுக்கு மாஜிஸ்திரேட்டு பகவதி அம்மாள் உத்தரவிட்டார்.

அதன்படி, மாஜிஸ்திரேட்டு காளிமுத்துவேல், நேரில் சென்று பார்த்தார். அங்கு 95 வாலிபர்கள் அடைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அங்கிருந்த போலீசாரிடம் விசாரித்தபோது, அனைவரும் சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டு இருப்பதை உணர்ந்து கொண்டார்.

அதனால், அந்த வாலிபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்புங்கள் அல்லது விடுதலை செய்யுங்கள் என்று போலீசாருக்கு உத்தரவிட்டார். போலீசாரும் வேறு வழியின்றி, 65 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விட்டு, மீதி 30 பேரை விடுவித்தனர்.

வழக்கு போடப்பட்ட 65 பேரும் மாஜிஸ்திரேட்டு அண்ணாமலை முன்பு நிறுத்தப்பட்டனர். அவர்களை நீதிமன்ற காவலுக்கு அனுப்ப அண்ணாமலை உத்தரவிட்டார்.

இதற்கிடையே, 65 பேரின் ஜாமீன் மனுக்களையும் இரவு முழுவதும் அமர்ந்து விசாரிக்குமாறு மாவட்ட நீதிபதி சாருஹாசினிக்கு மதுரை ஐகோர்ட்டு பதிவாளர் உத்தரவிட்டார்.

அதை ஏற்று, ஜாமீன் மனுக்களை விசாரித்து 65 பேரையும் நீதிபதி சாருஹாசினி விடுதலை செய்தார். மேற்கொண்டு யாராவது ஜாமீன் மனு போடக்கூடும் என்று எதிர்பார்த்து, அவர் நள்ளிரவுவரை கோர்ட்டில் அமர்ந்திருந்தார். வேறு யாரும் ஜாமீன் மனு போட வரவில்லை என்று அறிந்த பிறகு, இரவு 11 மணிக்கு புறப்பட்டு சென்றார். யாராவது ஜாமீன் மனு போட்டால், தனது வீட்டுக்கு அழைத்து வாருங்கள் என்று வக்கீல்களிடம் கூறிவிட்டு சென்றார். அவரது அணுகுமுறையை வக்கீல்கள் பாராட்டினர்.

ஜாமீனில் விடுவிக்கப்பட்ட 65 பேரும் மருத்துவ பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டனர். பலர் ரத்தக்காயத்துடன் காணப்பட்டனர். தாங்க முடியாத வலியுடனும், காயங்களுடனும் நடந்து சென்றனர். சட்டவிரோத காவலில் அவர்கள் சித்ரவதை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

மேலும், இந்த சித்ரவதை பற்றி மாஜிஸ்திரேட்டு அண்ணாமலையிடம் அவர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். இது, மனித உரிமை ஆணைய விசாரணையின்போது, போலீசாருக்கு பாதகமாக அமையும் என்று கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக