புதன், 9 மே, 2018

நீட் தேர்வில் 68 கேள்விகளில் தவறு ..49 கேள்விகள் முற்றிலும் தவறு! தமிழில் மொத்தம் 180 கேள்விகளில் 49 ..

நீட் தேர்வு: 49 கேள்விகள் தவறு!மின்னம்பலம் :நீட் தேர்வில் தமிழ் கேள்வித் தாளில் மொத்தம் உள்ள 180 கேள்விகளில் 49 கேள்விகள் தவறாக உள்ளன; எனவே நீட் தேர்வு எழுதிய தமிழ்வழி மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று கல்வியாளர் ராம்பிரசாத் சிபிஎஸ்இக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
மருத்துவப் படிப்புக்கான தேசிய அளவிலான நுழைவுத்தேர்வான நீட் தேர்வு கடந்த 6ஆம் தேதி நடத்தப்பட்டது. நாடு முழுவதும் மொத்தம் 136 நகரங்களில், 2 ஆயிரத்து 255 மையங்களில் நீட் தேர்வு நடத்தப்பட்டது. இதில் நாடு முழுவதும் 13 லட்சத்து 26 ஆயிரத்து 725 மாணவர்கள் நீட் தேர்வு எழுதினார்கள். இதில் தமிழ்நாட்டில் 170 மையங்களில் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 288 மாணவர்கள் நீட் தேர்வு எழுதினார்கள்.
பல சிக்கல்கள், கட்டுப்பாடுகளுக்கிடையே நீட் தேர்வு நடந்ததால் மாணவர்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகினர். தமிழக மாணவர்களுக்கு வெளிமாநிலங்களில் நீட் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டதால் மாணவர்களும் பெற்றோர்களும் பெரும் அலைச்சல்களுக்கும் மன உளைச்சல்களுக்கும் ஆளானார்கள்.

நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்கள் பயிற்சி பெறும் வகையில் மொபைல் ஆப் வெளியிட்ட தனியார் கல்வி தொண்டு நிறுவனத்தினர் சென்னையில் இன்று(மே 9) செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய கல்வியாளர் ராம்பிரசாத், "நீட் தேர்வில் தமிழ்வழியில் கல்வி பயின்றவர்களுக்கு தமிழ் வினாத்தாளில் குழப்பம் நடந்துள்ளது. வினாத்தாளில் உள்ள 180 கேள்விகளில் 68 தவறுகள் நிகழ்ந்துள்ளன. அதாவது 49 கேள்விகள் தவறானவை. ஆங்கிலத்தில் இருந்த கேள்விக்கும் அதே கேள்வி தமிழில் இருந்ததற்கும் அர்த்தம் மாறுபட்டதாக இருந்தது.
மத்திய அரசு நடத்தியுள்ள இந்தத் தேர்வில் கேட்கப்பட்ட 49 கேள்விகளும் முற்றிலும் தவறாக உள்ளன. வினாத்தாளில் உள்ள தவறுகளை நாங்கள் தனியாக சுட்டிக்காட்டி ஆவணங்களாக வைத்திருக்கிறோம். எனவே நீட் தேர்வு எழுதிய தமிழ்வழி மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும். நீட் தேர்வுக்குத் தயாராக உதவும் என்சிஆர்டி புத்தகத்தை அடுத்த ஆண்டாவது தமிழில் வெளியிட வேண்டும்" என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக