சனி, 12 மே, 2018

கென்யா .. அணை உடைந்து 44 பேர் உயிரழப்பு ஏராளமான வீடுகள் அடித்து செல்லப்பட்டன


தினத்தந்தி: கென்யாவில் அணை உடைந்து விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 44-ஆக உயர்ந்தது.
நைரோபி, கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் உள்ள நாகுரு கவுண்டியில் படேல் என்ற அணைக்கட்டு உடைந்ததால் பேரழிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 44 பேர் உயிரிழந்ததுடன் 500 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கென்யா செஞ்சிலுவை சங்கத்தால் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த அணைக்கட்டுவின் மதகுகள் உடைந்ததில், அணையில் இருந்த தண்ணீர் வெள்ளமாக பாய்ந்தது. தண்ணீர் கரையோரம் இருந்த வீடுகளையும் அடித்துச் சென்றது. நூற்றுக்கணக்கான வீடுகள் நீரில் அடித்துச்செல்லப்பட்டன. வீடுகளில் இருந்த மக்களும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

 விரைந்து வந்த மீட்பு படையினர் மற்றும் செஞ்சிலுவை சங்கத்தினர், மீட்பு பணியை மேற்கொண்டனர். இதில் ஏராளமானோர் இறந்ததாக அஞ்சப்பட்டது. இந்த சம்பவத்தால் தற்போது 44 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 40 பேர் காணாமல் போயுள்ளதால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும், பலர் நீரில் அடித்துச்செல்லப்பட்டு இருக்கலாம் அஞ்சப்படுகிறது.

 தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அணைகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றுவதற்காக நீர்வழிகள் திறக்கப்பட்டுள்ளன. அந்த அணைக்கு அருகே ஒரு கிராமம் முழுவதும் காலி செய்யப்பட்டுள்ளது. மேலும் அணையால் பாதிக்கப்பட்டவர்கள், பெரும்பாலும் தொழிலாளர்கள் மற்றும் சிறிய அளவிலான விவசாயிகள் ஆவர். கிராமத்தில் வசிக்கும் பெரும்பான்மை மக்கள், அங்குள்ள ஒரு பெரிய பண்ணையில் தோட்டக்கலை, காபி, தேயிலை சார்ந்த பணியில் ஈடுபட்டு வந்தனர். மேலும் இந்த பண்ணை இரண்டு தலைமுறைகளுக்கும் மேலாக உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த விபத்து, சொத்துக்களுக்கும் மனித உயிர்களுக்கும் பேரிழப்பு என அந்நாட்டு கவர்னர் லீ கின்யான்ஜூய் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக