செவ்வாய், 8 மே, 2018

நீட்டுக்கு 3வது உயிரழப்பு .. புதுச்சேரிக்கு சென்ற பண்ருட்டி மாணவி தந்தை நெஞ்சு வலியால் மரணம்!

புதுவை: பண்ருட்டியைச் சேர்ந்த மாணவி ஒருவரின் தந்தை மகள் நீட் தேர்வு எழுதச் சென்றபோது, நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று உயிரிழந்துள்ளார். நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள உயிர்பலி மூன்றாக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு நேற்று நடந்த நிலையில், தமிழக மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தான், சிக்கிம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தது.
இதில் ஏற்பட்ட அதீத மன உளைச்சல் மற்றும் அலைக்கழிப்பின் காரணமாக கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் தேர்வெழுதச்சென்ற திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த கஸ்தூரி மகாலிங்கம் என்கிற மாணவனின் தந்தை கிருஷ்ணசாமிக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் உயிரிழந்தார். அதேபோல, சிவகங்கை சிங்கம்புணரியைச் சேர்ந்த கண்ணன், மதுரை பசுமலையில் தேர்வெழுதி விட்டு மகள் ஐஸ்வர்யாவை ஊருக்கு அழைத்து வரும் வழியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இந்த இரு மரணங்களும் தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் இன்று புதுவையில் உயிரிழந்துள்ளார். நேற்று மகள் சுவாதியை புதுவையில் உள்ள தனியார் கல்லூரியில் நீட் தேர்வு எழுத அழைத்து வந்த நிலையில், அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இன்று சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இதன் மூலம் ,தமிழகத்தின் நீட் தேர்வால் ஏற்பட்ட மரணங்கள் இந்த ஆண்டு மூன்றாக அதிகரித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக