சனி, 19 மே, 2018

நம்பிக்கை வாக்கெடுப்பு அந்த 20 லிங்காயத்து எம்எல்ஏக்கள்? .. பாஜகவிற்கு ஆதரவா?

Shyamsundar - Oneindia Tamil . பெங்களூர்: காங்கிரஸ் மற்றும் மஜத கட்சியில் உள்ள 20 லிங்காயத்து எம்எல்ஏக்கள்தான் இன்று கர்நாடக சட்டசபையில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் மாற்றத்தை உண்டு பண்ண கூடியவர்கள். இவர்கள் யாருக்கு சாதகமாக இருக்கிறார்களோ அவர்களே வெற்றிபெற வாய்ப்புள்ளது. 
இன்று மாலை 4 மணிக்கு பாஜகவின் எடியூரப்பா அரசு கர்நாடக சட்டசபையில் தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க வேணடும். தற்போது சட்டசபையின் பலம் 222. ஆனால் இரண்டு தொகுதிகளில் வெற்றிபெற்ற குமாரசாமியின் ஒரு தொகுதி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. இதனால் தற்போதைய பலம் 221 மட்டுமே. 
இதனால் தற்போது பெரும்பான்மையை நிரூபிக்க 111 உறுப்பினர்கள் தேவை. பாஜக கட்சிக்கு 104 உறுப்பினர்கள் ஆதரவு இருக்கிறது. இன்னும் 7 பேரின் ஆதரவு அந்த கட்சிக்கு தேவை. காங்கிரஸ் மற்றும் மஜத கூட்டணிக்கு மொத்தம் 117 எம்எல்ஏக்கள் பலம் இருக்கிறது. 
 இன்று நடக்கும் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பை நிர்ணயிக்க போகும் சக்தி லிங்காயத்து எம்எல்ஏக்களிடம் மட்டுமே இருக்கிறது. கர்நாடக முழுக்க நடந்த தேர்தலில், முடிவுகளை அதிக அளவில் மாற்றியது லிங்காயத்துகள்தான். பாஜக கட்சி லிங்காயத்துகள் இருக்கும் இடத்தில்தான் அதிகம் வெற்றிபெற்றது. இந்த நிலையில் இன்று நடக்கும் வாக்கெடுப்பையும் அவர்களே மாற்றும் வல்லமை கொண்டவர்களாக இருக்கிறார்கள். பாஜக கட்சியில் இருக்கும் லிங்காயத்து எம்எல்ஏக்கள் எல்லோரும் கண்டிப்பாக அந்த கட்சியைத்தான் ஆதரிப்பார்கள் என்று கூறப்படுகிறது. 
அவர்களின் முதல்வர் எடியூரப்பா லிங்காயத்து சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், கண்டிப்பாக அவர்களின் ஆதரவு முழுக்க பாஜகவிற்கே இருக்கும். ஆனால், காங்கிரஸ் கட்சியிலும், மஜத கட்சியிலும் இருக்கும் லிங்காயத்து எம்எல்ஏக்களின் நிலைப்பாடுதான் குழப்பமாக இருக்கிறது. இந்த எம்எல்ஏக்கள் யாருக்கு தங்கள் ஆதரவை தெரிவிப்பார்கள் என்பது எல்லோருக்கும் சந்தேகமாக உள்ளது. இரண்டு கட்சியிலும் மொத்தமாக 20 லிங்காயத்து எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். இந்த 20 பேரில் மொத்தம் 5 பேர் காங்கிரஸ்- மஜத கூட்டணிக்குதான் வாக்களிப்பார்கள், அவர்கள் கூட்டணிக்கு துரோகம் செய்ய வாய்ப்பில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. 
 ஆனால் மீதம் இருக்கும் 15 பேர்தான் இப்போது இரண்டு பக்கமும் செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் பாஜக கட்சிக்கே வாக்களிப்பார்கள் என்று எடியூரப்பா தரப்பு கூறியுள்ளது. 
தற்போது இருக்கும் நிலைப்படி லிங்காயத்து சமூகத்தை சேர்ந்த எடியூரப்பா மீண்டும் முதல்வராவதை அதே சமூகத்தை சேர்ந்த எம்எல்ஏக்கள் எதிர்க்க மாட்டார்கள். அதேபோல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, எடியூரப்பாவை ஆதரிப்பதே இந்த எம்எல்ஏக்களுக்கு நல்லது என்று சொல்லப்படுகிறது. 
 
இதனால் கர்நாடக சட்டசபையில் இன்று என்ன நடக்கும் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதே சமயம் லிங்காயத்துக்களுக்கு தனி மத அடையாளம் கொடுத்தது சித்தராமையா என்பதாலும், பாஜக அதற்கு எதிராக இருந்தது என்பதாலும், இந்த லிங்காயத்து எம்எல்ஏக்கள் அப்படியே மொத்தமாக பாஜகவிற்கு ஆதரவளிக்க மாட்டார்கள், என்று தகவல்கள் கசிந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக