திங்கள், 14 மே, 2018

காவிரி நீரை பகிர்ந்து கொடுக்க 10 பேர் கொண்ட குழு- வரைவு செயல் திட்டத்தில் தகவல்

காவிரி நீரை பகிர்ந்து கொடுக்க 10 பேர் கொண்ட குழு- வரைவு செயல் திட்டத்தில் தகவல்மாலைமலர் :காவிரி நதிநீரை பகிர்ந்து கொடுப்பதற்காக 10 பேர் கொண்ட குழுவை வரைவு செயல் திட்டத்தில் மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. இந்த குழுவிற்கு தண்ணீர் திறக்க முழு அதிகாரம் இருக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. புதுடெல்லி: காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக மத்திய அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் வரைவு செயல் திட்ட அறிக்கையை தாக்கல்  செய்துள்ளது. அமைச்சரவை ஒப்புதலுக்குப் பிறகு அரசிதழில் வெளியிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதற்கு முன்பாக அந்த அறிக்கையின் நகல்கள் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டு, அவர்களின் கருத்துக்களை கேட்டறியும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு விசாரணையை 16-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.
மத்திய அரசு தாக்கல் செய்துள்ள வரைவு அறிக்கையில், நதி நீர் பங்கீடு தொடர்பாக முடிவு எடுப்பதற்கு ஒரு குழுவை பரிந்துரை செய்துள்ளது. 10 பேர் கொண்ட அந்த குழுவில் தலைவர், மத்திய அரசு அதிகாரிகள் 5 பேர், மாநில பிரதிநிதிகள் 4 பேர் இடம்பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங்கும் இந்த குழுவில் இடம்பெறுவார். காவிரி தொடர்பான அமைப்பின் தலைவர், 5 ஆண்டுகள் பதவியில் நீடிக்க முடியும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. காவிரி நடுவர் மன்றம் கூறிய பணிகளை இந்த  அமைப்பு மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறைந்த அவகாசமே இருப்பதால் இன்றே வரைவு செயல் திட்ட நகல்கள் மாநில அரசுகளிடம் வழங்கப்படும். அதன்பின்னர் மாநில அரசுகள் அதில் உள்ள அம்சங்களால் தங்கள் மாநிலத்திற்கான சாதக பாதகங்கள் குறித்து ஆய்வு செய்து நீதிமன்றத்தில் தெரிவிக்கும்.

தமிழக அரசு எடுத்த சட்ட நடவடிக்கையால், வரைவு செயல் திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்திருப்பதாகவும், வரைவு செயல் திட்டத்தின் குறை, நிறைகளை ஆராய்ந்து, நாளை மறுநாள் பதில் மனு தாக்கல் செய்யப்படும் என்றும் தமிழக அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

காவிரி விஷயத்தில் நடுநிலையாக செயல்பட்டு நதி நீரை திறந்துவிடுவதற்கு இந்த குழுவிற்கு முழு அதிகாரம் உள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தண்ணீரை திறந்துவிடும் அதிகாரம், மத்திய அரசு பரிந்துரைக்கும் குழுவுக்கு இல்லை என்றால் நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்க உள்ளதாக தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் கூறியிருக்கிறார்.

எனவே, நாளை மறுநாள் நடைபெறும் விசாரணை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். மத்திய அரசு கேட்டபடி, ஸ்கீம் என்பது வாரியமா? அல்லது குழுவா? என்பதை உச்ச நீதிமன்றம் தெரிவிக்கவும் வாய்ப்பு உள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக