புதன், 25 ஏப்ரல், 2018

திவாகரன் Vs தினகரன் : அண்ணாவும் திராவிடமும் இல்லாத கட்சியை ஏற்கமாட்டோம் ..திவாகரன் அறிவிப்பு

Gajalakshmi - Oneindia Tamil :  டிடிவி. தினகரனுடன் இனி வரும் காலங்களில் இணைந்து செயல்படப்போவதில்லை என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியுள்ளார். 
அம்மா அணி என்ற பெயரில் தனித்து செயல்படுவோம் தேவைப்பட்டால் தேர்தலை சந்திப்போம் என்றும் திவாகரன் தெரிவித்துள்ளார். 
டிடிவி. தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் மூலம் திவாகரன், தினகரன் இடையே இருக்கும் பனிப்போர் வெளிவந்த நிலையில், வெற்றிவேலுக்கு திவாகரனின் மகன்  ஜெயானந்த் காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். 
வெற்றிவேலும், ஜெயானந்தும் மாறி மாறி சசிகலாவின் தியாகத்திற்காகத் தான் அமைதியாக இருக்கிறோம் என்று ஆளாளுக்கு உரிமை கொண்டாடி வந்தனர். 
தினகரன் திவாகரனிடையே நடந்த பங்காளிச்சண்டைக்கு திவாகரனே முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியதாவது : இனி வரும் காலங்களில் தினகரனுடன் இணைந்து செயல்படப்போவதில்லை. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை. தினகரன் குடும்ப உறுப்பினர்களுக்காகவே கட்சியை தொடங்கியுள்ளார். அண்ணாவும் திராவிடமும் இல்லாத கட்சியை நாங்கள் எப்போதும் ஏற்கமாட்டோம்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நேற்று பெய்த மழையில் முளைத்த காளான். அம்மா அணி என்ற பெயரில் நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம், தேவைப்பட்டால் தேர்தலிலும் போட்டியிடுவோம். அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை நண்பனும் இல்லை. வெற்றிவேலும், செந்தில்பாலாஜியும் அதிமுகவில் இடையில் வந்தவர்கள். அதிமுகவின் சுவடே இருக்கக் கூடாது என்று தினகரன் நினைக்கிறார். கட்சி உறுப்பினர்களை கேட்காமல் தன்னிச்சையாக தினகரன் கட்சி தொடங்கியுள்ளார். நானும் எனது மகனும் எடப்பாடி பழனிசாமியுடன் நெருக்கமாக இருப்பதாக அவதூறு கருத்துகளை பரப்பி வருவதாகவும் திவாகரன் கடுமையாக விமர்சித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக