புதன், 18 ஏப்ரல், 2018

மோடியை விளாசிய ‘தி நியூயார்க் டைம்ஸ்’ நாளேடு : ‘பெண்கள், முஸ்லிம்கள், தலித்துகள் மீது திட்டமிட்டு தாக்குதல்’:


 மவுனம் காக்கும் மோடியை விளாசிய ‘தி நியூயார்க் டைம்ஸ்’ நாளேடு
ஐஏஎன்எஸ்
tamilthehindu :நியூயார்க் இந்தியாவில் பெண்கள், முஸ்லிம்கள், தலித்துகள் ஆகியோருக்கு எதிராகத் திட்டமிட்டு பிரச்சாரம் செய்யப்பட்டு, தாக்கப்படுகின்றனர். இதைக் கண்டிக்காமல் மவுனம் காக்கும் மோடி தேர்தலில் மிகப்பெரிய அரசியல் விலை கொடுக்க வேண்டியது வரும் என்று ‘தி நியூயார்க் டைம்ஸ்’ நாளேடு தலையங்கத்தில் பிரதமர் மோடியைக் கடுமையாக விமர்சித்துள்ளது.
அப்பாவி முஸ்லிம்கள் மீது பசுக் குண்டர்கள் நடத்திய தாக்குதல், உ.பி. உன்னாவ் மாவட்டத்தில் பாஜக எம்எல்ஏவால் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது.காஷ்மீரில் 8வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது ஆகிய எந்தச் சம்பவங்களுக்கும் பிரதமர் மோடி உடனுக்குடன் எதிர்வினையாற்றாமல் மவுனம் காத்து வருகிறார் என்று குற்றம்சாட்டி ‘தி நியூயார்க் டைம்ஸ்’ நாளேடு இன்றைய தலையங்கத்தில் பிரதமர் மோடியை விமர்சித்துள்ளது.
‘பெண்கள் தாக்கப்படும்போது காக்கப்படும் மவுனம்’ என்ற தலைப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
பிரதமர் மோடி எந்தச் சம்பவத்துக்கும் உடனுக்குடன் ட்வீட் செய்து தன்னை புத்திசாலித்தனமான, திறமையான பேச்சாளராகக் காட்டிக் கொள்ளும் மனிதர்.
ஆனால், நாட்டில் பெண்கள், முஸ்லிம் சிறுபான்மை மக்கள் அடிக்கடி குறிவைத்து போலி தேசியவாதிகளாலும், வகுப்புவாத சக்திகளாலும், பாஜகவினராலும் தாக்கப்பட்டு வருகிறார்கள். அப்போது வெளிப்படையாகக் கண்டனம் தெரிவிக்காமல் மோடி மவுனம் காத்து வருகிறார்.

கடந்த ஜனவரி மாதம் காஷ்மீரில் 8 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டார். இந்தக் குழந்தைக்கு நீதி வேண்டி ஏராளமான இந்தியர்களும், அரசியல்கட்சிகளும் சாலையில் இறங்கி போராட்டம் நடத்தினார்கள். இதில் பாஜகவினருக்கு தொடர்பு இருப்பது தெரிந்திருந்தும், அது குறித்து பிரதமர் மோடி மிகவும் அரிதாகவே பேசினார்.
கடந்தவாரம் வரை பிரதமர் மோடி காஷ்மீர் சிறுமி விவகாரம் குறித்து எந்தவிதமான வார்த்தையும் பேசவில்லை. ஆனால், வெள்ளிக்கிழமை பேசிய மோடி இந்தச் சம்பவம் நாட்டுக்கே அவமானம், நமது மகள்களுக்கு உரிய நீதி கிடைக்கும் என்று மட்டும் பொதுவாகத் தெரிவித்தார்.
ஆனால், இந்த விவகாரம் குறித்து, பிரதமர் மோடி கடுமையான கண்டனத்தைத் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மிகவும் பொதுப்படையாக கடந்த 2 நாட்களாகத் தீவிரமாக நாம் ஆலோசித்து வரும் விவகாரம் என்று சிறுமியின் பெயரையும், உ.பியில் நடந்த பலாத்காரத்தையும் கூட குறிப்பிடாமல் மோடி பேசினார்.
அதேபோன்ற மேம்போக்கான அணுகுமுறையைத்தான் இதற்கு முன் நடந்த சம்பவங்களிலும் பிரதமர் மோடி கடைப்பிடித்தார். அதாவது, பசுக்கொலையைத் தடுக்கிறோம் என்ற போர்வையில், முஸ்லிம் சிறுபான்மையினரை பசுக் குண்டர்கள் தாக்கிய போதிலும், தலித்கள் மீது ஆதிக்கச்சாதியினர் தாக்குதல் நடத்தியபோதிலும் அது குறித்து குறிப்பிட்டு கண்டனம் தெரிவிக்காமல் மோடி மேம்போக்காகப் பேசினார்.
காஷ்மீரில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவத்திலும், உத்தரப்பிரதேசத்தில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்திலும் பாஜகவினர்களும், பாஜக எம்எல்ஏவுக்கும் தொடர்பிருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகிவிட்டது. ஆனால், அது குறித்து பிரதமர் மோடி தனது கண்டனத்தில் வெளிப்படையாகக் குறிப்பிட்டு பேசவில்லை.
பிரதமர் மோடியின் இந்த மவுனம் வேதனையையும், குழப்பத்தையும் அளிக்கிறது. இதற்கு முன் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் என்ன பாடம் புகட்டினார்கள் என்பதைப் பார்த்து மோடி கற்றுக்கொள்ள வேண்டும்.
கடந்த 2012ம் ஆண்டில் ஓடும்பேருந்தில் (நிர்பயா) இளம் பெண் ஒருவர் கூட்டுப்பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்துக்கு 2014-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சி அரசியல் ரீதியாக மிகப்பெரிய விலை கொடுத்தது மோடிக்கு நினைவிருக்கும்.
அந்தத்தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக வெற்றி பெற்றது. அப்போது மக்களிடம் மிகுந்த பொறுப்புணர்வுடன் ஆட்சி நடத்துவோம், ஊழலை ஒழிப்போம் என்றெல்லாம் பிரதமர் மோடி உறுதியளித்தார்.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் பிரதமர் மோடி எந்த ஒரு சம்பவத்திலும் மவுனமாக இருந்து, திசைமாற்றிச் செல்வது வேதனையளிக்கிறது.
தன்னுடைய ஆதரவாளர்கள் செய்யும் ஒவ்வொரு குற்றத்தையும் விவாதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை.
அதேசமயம், இந்தச் சம்பவங்கள், வழக்குகள் எல்லாம், வன்முறையின் உதாரணங்கள். முஸ்லிம்கள், பெண்கள், தலித்கள், விளிம்புநிலை சமூகத்தில் இருப்பவர்கள் மீது திட்டமிட்டு, பிரச்சாரம் செய்யப்பட்டு தாக்கப்பட்டு வருவதற்கு உதாரணங்களாகும்.
தங்களுக்கு வேண்டியவர்களையும், ஆதரவாளர்களையும் மட்டுமல்லாமல், நாட்டில் உள்ள அனைத்து மக்களையும் அரவணைத்து அவர்களுக்காகப் போராட வேண்டிய கடமை பிரதமர் மோடிக்கு இருக்கிறது. இது ஒருபிரதமரின் தலைமையாக கடமை, கடப்பாடாகும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக