செவ்வாய், 10 ஏப்ரல், 2018

தென்னிந்திய நிதியமைச்சர்கள் கூட்டத்தை தமிழக அரசு புறக்கணிப்பது பெருந்துரோகம் என பாமக நிறுவனர் ராமதாஸ்

tamilthehindu :இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (திங்கள்கிழமை) அவர் வெளியிட்ட
அறிக்கையில்,“மத்திய அரசின் வரி வருவாயை மாநில அரசுகளுக்கு பகிர்ந்து வழங்குவதில் தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களுக்கு காட்டப்படும் பாகுபாடுகள் குறித்து விவாதிப்பதற்காக கேரளத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள தென்மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என்று தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. இது தமிழக நலன்களுக்கு இழைக்கப்படும் பெருந்துரோகமாகும்.
மத்திய அரசின் வரி வருவாயை மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிப்பதற்கான 15-வது நிதி ஆணையத்தின் அதிகார வரம்புகள் மாநிலங்களுக்கு எதிராக உள்ளன. 1976-ம் ஆண்டில் முதல் நிதி ஆணையம் அமைக்கப்பட்டது. அப்போதிலிருந்து 14-வது நிதி ஆணையம் வரை 1971-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தான் மாநிலங்களுக்கு நிதி பகிர்ந்து வழங்கப்பட்டது. ஆனால், 15-வது நிதி ஆணையத்தில் 2011-வது மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நிதி பகிர்ந்தளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

1971-ம் ஆண்டுக்குப் பிறகு தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் மக்கள் தொகை சிறப்பாக கட்டுப்படுத்தப்பட்டிருப்பதால் அவற்றுக்கான மத்திய அரசின் நிதி உதவி மிகவும் குறைந்துவிடும். இதற்கான தென்மாநிலங்களின் எதிர்ப்புகளை வலிமையாக பதிவு செய்வதற்காகத் தான் தென்மாநில நிதியமைச்சர்கள் கூட்டம் நடத்தப்படுகிறது.
இந்தக் கூட்டத்தைப் புறக்கணிப்பதன் மூலம் தமிழகத்தின் எதிர்ப்புக் குரலை பதிவு செய்வதிலிருந்து தமிழக அரசு பின்வாங்கியுள்ளது. மத்திய அரசின் அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க அஞ்சுகிறது. பதவியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக மத்திய அரசின் கால்களில் விழுந்து கிடக்கும் தமிழக அரசு, தமிழகத்தின் மீதமுள்ள உரிமைகளையும் அடகு வைக்கத்தான் போகிறது. இதை தமிழ்நாட்டு மக்கள் மன்னிக்க மாட்டார்கள். எனவே, செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள தென்மாநில நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் பங்கேற்று தமிழகத்தின் எதிர்ப்பு நிலையைப் பதிவு செய்ய வேண்டும்''என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக