செவ்வாய், 24 ஏப்ரல், 2018

கிரிஜா வைத்தியநாதன் மீது ஊடகவியலாளர் கவின் மலர் உயர்நீதி மன்றத்தில் மனு .. எஸ் வி சேகரை அடைக்கலம் கொடுக்கிறார் கிரிஜா ..

தலைமைச் செயலாளர் மீது வழக்கு!மின்னம்பலம் :“எஸ்.வி.சேகரைக் கைது செய்ய வேண்டும். அவருக்கு அடைக்கலம் கொடுத்துவரும் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கோரி பத்திரிக்கையாளர் கவின் மலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஏப்ரல் 24) மனு தாக்கல் செய்துள்ளார்.
அண்மையில் பெண் பத்திரிக்கையாளர்கள் தொடர்பாக, எஸ்.வி.சேகர் தனது முகநூலில் பதிவு செய்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவரின் கருத்துக்குப் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சேகரின் வீட்டு முன்பு பத்திரிக்கையாளர்கள் போராட்டம் நடத்தினர். சேகரின் முகநூல் கருத்து தொடர்பாக பத்திரிக்கையாளர்கள் காவல் துறை ஆணையரிடம் புகார் அளித்திருந்தனர். மேலும் பல்வேறு காவல் நிலையங்களிலும் அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பத்திரிக்கையாளர் கவின்மலர் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “எஸ்.வி.சேகர் மீது காவல் துறையிடம் புகார் அளித்தும் அவரைக் கைது செய்யவில்லை, அது தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எஸ்.வி.சேகர், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதனின் உறவினர் என்பதால் அவரைக் கைது செய்யக் கூடாது என்று காவல் துறைக்கு ரகசிய உத்தரவை கிரிஜா வைத்தியநாதன் பிறப்பித்துள்ளார். எனவே எஸ்.வி.சேகரைக் கைது செய்யக் காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும்; கைது நடவடிக்கைக்குத் தடை விதித்திருக்கும் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மனுவில் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
ஏப்ரல் 22ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மின்னம்பலம்.காம் பகல் ஒரு மணிப் பதிப்பில் தலைமைச் செயலாளர் வீட்டில் எஸ்.வி.சேகர்?என்ற தலைப்பிட்டு ஒரு செய்தி வெளியிட்டிருந்தோம். அந்தச் செய்தியில், “எஸ்.வி.சேகர் மீது போடப்பட்ட வழக்குகளில் பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்ட வழக்கு முக்கியமானது மட்டுமல்ல, தீவிரமானதும்கூட. எனவே, எப்போது வேண்டுமானாலும் சேகர் கைது செய்யப்படலாம் என்ற நிலையில் நேற்று காலையில் இருந்து எஸ்.வி.சேகர் இருக்குமிடம் யாருக்கும் தெரியாமல் போனது. அவரது செல்போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகிவிட்டது.
போலீஸார் இப்போது எஸ்.வி.சேகரைத் தேடிவரும் நிலையில் போலீஸாருக்குள்ளேயே ஒரு தகவல் பரவிவருகிறது. ‘எஸ்.வி.சேகர் முன் ஜாமீனுக்கு முயன்றுவருகிறார். இன்று ஞாயிற்றுக்கிழமையை எப்படியாவது கடத்திவிட்டால் நாளை கோர்ட்டில் முன் ஜாமீனுக்கு முயற்சித்துவிடுவார். அதனால் இப்போது அவர் தனது சகோதரரின் மனைவியான தமிழகத் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனின் வீட்டில்கூட இருக்கலாம். தமிழகத்தின் தலைமைச் செயலாளர் இல்லத்துக்குள் போலீஸார் நுழைய முடியாது என்பதால் அந்தப் பாதுகாப்பை அவர் பயன்படுத்திக்கொண்டிருக்கலாம்’ என்பதுதான் தற்போது சென்னை போலீஸ் வட்டாரத்தில் விவாதிக்கப்பட்டுவரும் தகவல்” என்பதைப் பதிவு செய்திருந்தோம்.
இந்நிலையில்தான் இன்று எஸ்.வி.சேகருக்கு அடைக்கலம் தருவதாகத் தலைமைச் செயலாளர் மீதே வழக்குத் தொடுக்கப்பட்டிருக்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக