புதன், 25 ஏப்ரல், 2018

திவாகரன் தினகரன் சசிகலா ஜெயானந் .... ஒரு பெரிய மாபியா சிறு சிறு மாபியாக்களாக ..

.vikatan.com : சசிகலா தினகரன் திவாகரன் எடப்பாடிபழனிசாமி.தி.மு.க. என்ற மிகப்பெரிய கட்சியை, தான் உயிரோடு இருந்தவரை இரும்புக்கோட்டையாக வைத்திருந்தார் ஜெயலலிதா. அவருடைய மறைவுக்குப் பின்னர், அ.தி.மு.க-வில் சசிகலா குடும்பத்தினரின் ஆதிக்கத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவித்து தனி அணியாகப் பிரிந்தபோது, ஒட்டுமொத்தக் கட்சியையும், ஆட்சி நிர்வாகத்தையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டார் சசிகலா. மன்னார்குடி குடும்பத்தினரும் சசிகலாவின் கண் அசைவுகளுக்கு ஏற்ப அடங்கி ஒடுங்கியிருந்தனர். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா தற்போது பெங்களூரு சிறையில் இருப்பதால், மன்னார்குடி குடும்பத்தில் அரசியல் அதிகாரச்சண்டை இப்போது ஏற்பட்டுள்ளது. மத்திய பி.ஜே.பி அரசின் மிரட்டலுக்கு பயந்து அ.தி.மு.க-வின் துணைப் பொதுச்செயலாளராக சசிகலாவால் நியமிக்கப்பட்ட டி.டி.வி. தினகரனையும், சசிகலா குடும்பத்தினரையும் ஒதுக்கி வைப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து, பின்னர் ஓ.பி.எஸ். அணியுடன் இணைந்தார்.  இதையடுத்து, தினகரன் தன்னிச்சையாகச் செயல்படுகிறார் என்றும், குடும்ப உறவுகளை ஓரங்கட்டுகிறார் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. அதிலும், சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கும், தினகரனுக்கும் இடையே அதிகாரச் சண்டை ஏற்பட்டுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் குடும்பத்தில் இப்போது மன்னார்குடியில் இருக்கும் சசிகலாவின் சகோதரர் திவாகரனும், அவரது மகன் ஜெய் ஆனந்தும் டி.டி.வி.தினகரனுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு, `போஸ் மக்கள் பணியகம்' என்ற அமைப்பை ஜெய் ஆனந்த் தொடங்கினார். அதன் மூலம் சமூகப் பணிகளில் ஈடுபடப்போவதாக அறிவித்தார். இந்த அமைப்பின் பின்னணியில் இருப்பது ஆளும்கட்சி என்ற சந்தேகம் டி.டி.வி.தினகரன் அணியினருக்கு உண்டு. ஏனெனில், அ.தி.மு.க-வில் இளைஞரணி அல்லது மாணவரணி ஆகியவற்றில் ஏதாவது ஓர் அணியின் தலைமைப் பொறுப்பை தன்னுடைய மகனுக்குத் தர வேண்டும் என்பது ஏற்கெனவே திவாகரனின் விருப்பமாக இருந்தது. ஆனால், `எந்தப் பொறுப்பையும் அளிக்க முடியாது' என்று அந்தக் கோரிக்கையை ஆரம்பகட்டத்திலேயே ஏற்க மறுத்துவிட்டார் டி.டி.வி.தினகரன்.
மன்னார்குடி குடும்பம்
என்றாலும், திவாகரன் தொடர்ந்து குடும்ப உறவுகள் மூலம் தன்னுடைய கோரிக்கையை வலியுறுத்தி வந்துள்ளார். ``1980-களில் ஜெயலலிதாவுக்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு எவ்வளவோ கஷ்டங்களை அனுபவித்தேன். 30 வருடங்களாக, அ.தி.மு.க-வில் ஆட்சி அதிகாரத்தில் குறிப்பிடத்தக்க எந்தப் பதவியையும் நாங்கள் அனுபவிக்கவில்லை. ஜெயலலிதா மரணமடைந்த சமயத்தில்கூட கட்சியில் ஒரு கொந்தளிப்பான நிலை இருந்தபோது, சென்னையிலிருந்து அனைத்துப் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்தேன். சொத்துகள் அனைத்தும் இளவரசி குடும்பத்தைச் சேர்ந்த கிருஷ்ணபிரியா, விவேக், ஷகிலா ஆகியோரின் கட்டுப்பாட்டில் உள்ளன. கட்சி, டி.டி.வி.தினகரன் கட்டுப்பாட்டில் கொடுக்கப்பட்டது. இத்தனை ஆண்டு காலம், ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் உழைத்து நாங்கள் பட்ட அரசியல் பழிவாங்குதல்களுக்கு எல்லாம் பலன் என்ன? வேதனைகளும் சோதனைகளும்தான் எங்களுக்குக் கிடைத்தன. எனவே, எங்கள் குடும்பத்துக்குக் கட்சியில் உரிய அங்கீகாரம், மரியாதையைத் தாருங்கள்'' என்று திவாகரன் கேட்டு வந்தார்.
அதன் வெளிப்பாடுதான் இப்போது சசிகலா குடும்பத்தில் மோதலாக வெடித்துள்ளது என்கிறார்கள் மன்னார்குடி குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள். இதையடுத்தே டி.டி.வி.தினகரனுக்கு எதிராக ஜெய் ஆனந்த் வெளிப்படையாகச் சில தினங்களுக்கு முன், தனது மனக் குமுறலைப் பதிவிட்டார். ``மாபெரும் தவறுகளைப் பொறுத்துக்கொண்டிருக்கிறோம். இந்த நிலை நீடித்தால் அந்த அமைப்பு விரைவில் சமைக்கப்படும்'' என்று முகநூல் பதிவில் ஜெய் ஆனந்த் கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, டி.டி.வி.தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில், `போஸ் மக்கள் பணியகம்' லெட்டர் பேடில் ஜெய் ஆனந்த் திவாகரன் என்ற பெயரில் ஓர் அறிக்கை வெளியானது. அதில், ``எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த உறவினரை கரூரிலிருந்து வேலூருக்கு மாற்றி பழிவாங்கும் நடவடிக்கை எடுத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இதுபோன்ற சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
நாங்கள் அரசியலில் உங்களுடன் பயணித்ததால்தானே எங்களைப் பணிய வைக்க, பி.ஜே.பி. அரசு, கடந்த 8 மாத காலமாக வருமான வரித்துறை மூலமாக எங்கள்  குடும்பத்துக்கும் என்னைச் சார்ந்தோர்களுக்கும் மிகுந்த இன்னல்களையும், இம்சைகளையும் கொடுத்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? என் நண்பர்களில் ஏராளமானோர் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு 8 மாதங்கள் ஆகி விட்டன. தொழில் முடங்கி வாழ்வாதாரத்திற்கே அவர்கள் போராடும் அவலத்தை நீங்கள் அறிவீர்களா? நாங்கள் எந்தப் பதவியையும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், ஒரு சில விஷயங்களில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இருப்பதை மறுக்கவில்லை. பல மாதங்களாக திரைமறைவில் பல இன்னல்களையும், அவமானங்களையும் சந்தித்து வருகிறோம்'' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிக்கை அ.தி.மு.க-வினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜெய் ஆனந்த் சசிகலா விவேக் ஜெயராமன்
இந்தச் சூழ்நிலையில் மன்னார்குடியில் திவாகரன் பேசுகையில், ``அரசியலில் நிரந்தர எதிரியும் கிடையாது; நிரந்தர நண்பர்களும் இல்லை. `அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை' தினகரன் தொடங்கியிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அவருடன் இணைந்து இனி செயல்பட மாட்டேன். கட்சி உறுப்பினர்களைக் கேட்காமல் தினகரன் குடும்பத்தினர் தன்னிச்சையாகச் செயல்பட்டு அம்மா முன்னேற்றக் கழகத்தை தொடங்கியிருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமியோடு எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. அவர்களோடு சேர மாட்டேன். அதுபோன்ற தகவல்கள் எல்லாம் வெறும் வதந்தி. அம்மா அணி என்ற பெயரில் நாங்கள் செயல்படுவோம். தேவைப்பட்டால் தேர்தலில் தனித்து நிற்போம். திராவிடமும், அண்ணாவும் இல்லாத கட்சியின் பெயரை ஏற்க முடியாது'' என்றார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் தஞ்சையில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் டி.டி.வி.தினகரன் பேசுகையில், ``அ.தி.மு.க தொண்டர்கள் 90 சதவிகிதம் பேர் என்னுடன் உள்ளனர். இரட்டை இலையும் அ.தி.மு.க-வும் நமக்குக் கிடைத்தே தீரும். கட்சிக்கு எதிராக யார் கருத்துச் சொன்னாலும் நடவடிக்கை எடுப்பேன். உறவினராக இருந்தாலும், ஜெயலலிதா வழியில் அவர்களைத் தூக்கி எறிவேன். யாருக்காகவும், எதற்காகவும் பின்வாங்க மாட்டேன். என்னை யாரும் ஏமாற்ற முடியாது. உறவுகளையும், நட்பையும் நான் எப்போதும் மதிப்பவன். விட்டில் பூச்சிகளைப்போல துரோகிகளிடம் மாட்டிக் கொள்ளாதீர்கள்'' என்றார்.
`பி.ஜே.பி-யின் பழிவாங்கும் நடவடிக்கை'; `எடப்பாடி அரசின் நெருக்கடிகள்' என ஜெய் ஆனந்த் தன் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த போதிலும், மன்னார்குடி குடும்பத்திற்குள் தற்போது கிளம்பியிருக்கும் அதிகாரச் சண்டைதான் அனைத்திற்கும் மூலகாரணம் என்று சொல்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். ஏற்கெனவே, தனது கணவர் நடராஜன் இறுதிச் சடங்கிற்காகப் பரோலில் தஞ்சை வந்திருந்த சசிகலாவின் காதுகளுக்கு, தினகரன் - திவாகரன் இடையே நீடிக்கும் குடும்பப் பிரச்னைகள் போயின. அப்போது, இருதரப்பினருக்கும் இடையே சமாதானம் பேசியதுடன், அனைவரும் பிரச்னைகளைக் கிளறாமல் அமைதியாக இருக்கும்படி சொன்னாராம் சசிகலா.
ஆனாலும், அவர்கள் குடும்பப் பிரச்னை இன்னமும் குறைந்தபாடில்லை. அது இப்போது வெளிப்படையாக வெடித்துக் கிளம்பி விட்டது. இந்த விவகாரத்தில் அடுத்து என்ன செய்யலாம் என்று திவாகரன், தனது குடும்பத்தினருடனும் ஆதரவாளர்களுடனும் தீவிர ஆலோசனையில் இருக்கிறார். பெங்களூரு சென்று சசிகலாவைப் பார்க்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக