சனி, 28 ஏப்ரல், 2018

குட்கா அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு முற்றுகை ... பதவி விலக கோரிக்கை

முற்றுகை: சொந்த ஊருக்குப் போகாத அமைச்சர்!மின்னம்பலம் : குட்கா வழக்கில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று திமுக தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. சென்னையில் நேற்று டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிட்ட ஜெ. அன்பழகன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர். அதேநேரம் நேற்று புதுக்கோட்டையில் திமுகவினர் அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும் என்று ஆர்பாட்டம் நடத்தினர். அவர்களும் கைது செய்யப்பட்டு மாலை ஆறு மணிக்கு விடுதலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கரின் சொந்த ஊரான விராலிமலை தொகுதியில் உள்ள இலுப்பூரில் இருக்கும் அவரது வீட்டை முற்றுகையிட நேற்று இரவே திமுகவினர் தீர்மானித்தனர். இந்தத் தகவல் நேற்று சேலத்தில் இருந்த அமைச்சருக்கு தெரிந்துவிட்டது. இன்று அதிகாலை 3.30 க்கு புதுக்கோட்டைக்கு வந்த அவர் தன் சொந்த ஊருக்குச் செல்லாமல் புதுக்கோட்டை டவுனில் இருக்கும் விருந்தினர் மாளிகையிலேயே தங்கினார்.

புதுக்கோட்டை மாவட்டம் கல்லாலங்குடியில் இன்று ஜல்லிக்கட்டு என்பதால் புதுக்கோட்டை போலீஸில் பெரும்பாலானோர் அங்கே பாதுகாப்புக்குச் சென்றுவிட்டனர். எனவே காலையிலேயே தகவல் அனுப்பி திருச்சி, மதுரை போலீசாரை அமைச்சரின் சொந்த ஊரான இலுப்பூரில் குவித்துவிட்டனர்.
இன்று காலை 10.30-க்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் ஆலங்குடி மெய்யநாதன், திருமயம் ரகுபதி, மாவட்டப் பொறுப்பாளர் செல்லப்பாண்டியன் உள்ளிட்ட ஆயிரம் பேர் திரண்டு இலுப்பூரில் இருக்கும் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டை முற்றுகையிட தயாரானார்கள். தாலுகா அலுவலகத்தில் இருந்து விஜயபாஸ்கரின் வீட்டை நோக்கி ஊர்வலமாக சென்றவர்களை பஸ் நிலையம் அருகே மடக்கிக் கைது செய்தனர் திருச்சி, மதுரை போலீஸார். ஆண்கள் 522 பேர், பெண்கள் 233 பேர் என மொத்தம் 755 பேர் கைது செய்யப்பட்டனர்.
இன்று இலுப்பூரில் இருக்கும் அமைச்சர் விஜயபாஸ்கரின் குல தெய்வக் கோயிலில் பத்தாயிரம் பேருக்கு அன்னதான விழா நடக்கிறது. அதில் கூட கலந்துகொள்ளச் செல்லாமல் புதுக்கோட்டையிலேயே மதியம் வரை தங்கியிருந்தார் அமைச்சர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக