வியாழன், 26 ஏப்ரல், 2018

திமுகவுக்கு தூதுவிடும் பாமக .. ச

மின்னம்பலம்: திண்டிவனம் அருகே உள்ள கீழ்சிவரி கிராமத்தைச்
சேர்ந்தவர் டாக்டர்
ராமதாஸ். 1980களில் திண்டிவனத்தில் டாக்டர் ராமதாஸ் கிளினிக் ரொம்பவும் பிரபலமானது. அந்தக் காலத்தில் ஐந்து ரூபாய்க்கு ஊசி போட்டு மாத்திரையும் கொடுத்த டாக்டர் இவர். கீழ்சிவரிக்கு அருகேயுள்ள தைலாபுரத்தில்தான் ராமதாஸ் குடும்பத்துக்குச் சொந்தமான விவசாய நிலம் இருந்தது. ஒருபக்கம் மருத்துவத் தொழில், இன்னொரு பக்கம் விவசாயம். இதுதான் ராமதாஸின் வாழ்க்கை. தன் சாதி சார்ந்த அமைப்பான வன்னியர் சங்கத்தை அப்போதுதான் ராமதாஸ் ஆரம்பித்தார். மருத்துவமும் விவசாயமும் பார்த்த நேரம்போக, வன்னியர் சமுதாயத்துக்கான விஷயங்களை முன்னெடுக்க ஆரம்பித்தார்.
87ஆம் ஆண்டு வன்னியர் சங்கம் ஒரு வாரம் நடத்திய இடஒதுக்கீட்டுக்கான போராட்டம் மக்களின் கவனத்தை ஈர்த்தது. அந்தப் போராட்டத்தில் 18 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்தப் போராட்டத்துக்குப் பிறகு 1989ஆம் ஆண்டு வன்னியர் சங்கம், பாட்டாளி மக்கள் கட்சியாக உருவெடுத்தது. கட்சி ஆரம்பிக்கப்பட்ட ஆண்டிலேயே வந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு, ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. 1991ஆம் ஆண்டு மீண்டும் தேர்தல். அதிலும் தனித்துப் போட்டி. பண்ருட்டி ராமச்சந்திரன் மட்டும் ஜெயித்தார்.
அப்போது, பாட்டாளி மக்கள் கட்சி யானைச் சின்னத்தில் போட்டியிட்டது. அதனால், பண்ருட்டி ராமச்சந்திரனை யானைமீது உட்காரவைத்து முதல்நாள் சட்டமன்றத்துக்கு அனுப்பினார்கள். 1996 தேர்தலில் வாழப்பாடி ராமமூர்த்தியின் திவாரி காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளோடு கூட்டணி வைத்து நான்கு இடங்களில் ஜெயித்தது பாமக.
அதன் பிறகு அதிமுக, திமுக என்று ஏதாவது ஒரு கட்சியோடு கூட்டணி சேர்ந்து தேர்தலைச் சந்தித்துவந்தது பாமக. தனித்துதான் போட்டி என்று சொல்வதும், தேர்தல் நேரத்தில் யாருடனாவது கூட்டணி சேருவதும்தான் பாமகவின் வரலாறாக இருந்துள்ளது. கடந்த, நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் போட்டியிட்டது பாமக. அன்புமணி மட்டும் தர்மபுரி தொகுதியில் ஜெயித்தார். பாமக என்றால் இனி, அன்புமணிதான் என்று மாற ஆரம்பித்தது. 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு அன்புமணியின் முழுமையான கட்டுப்பாட்டில் கட்சி வந்தது. இனி, யாருடனும் கூட்டணி இல்லை என்று அன்புமணி தைரியமாக அறிவித்தபோது எல்லோருமே சிரித்தார்கள். ஆனால், அவர் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. ‘அன்புமணிதான் எங்கள் கட்சியின் முதல்வர் வேட்பாளர்’ என்று ராமதாஸ் அறிவித்தார். புதிதாக யோசிக்க ஆரம்பித்தார் அன்புமணி.
மாற்றம்.. முன்னேற்றம்.. அன்புமணி! என்று ஒருநாள் இரவில் தமிழகம் முழுக்க ஒட்டிய போஸ்டர்களைப் பார்த்து கிண்டலடிக்காதவர்கள் இல்லை. அதுவே, அன்புமணிக்குப் பெரிய விளம்பரமாகிப் போனது. முதல்வர் வேட்பாளர் என்ற ஒரு விஷயத்தை மட்டுமே குறிக்கோளாக வைத்துக் காய் நகர்த்த ஆரம்பித்தார் அன்புமணி. ‘கடைசி நேரத்துல ஏதவாது ஒரு கட்சியோட சேர்ந்துடுவாங்க. அதுக்குள்ள எதுக்கு இந்த பில்ட் அப்..’ என்று சோஷியல் மீடியாவில் திட்டாதவர்கள் இல்லை. ஆனாலும் அன்புமணி அலட்டிக்கொள்ளவில்லை. தனியாகவே களத்தில் நின்றார். சட்டமன்றத் தேர்தலில் ஒரு இடம்கூட ஜெயிக்கவில்லை. அன்புமணிக்கு இது பெரும் சறுக்கல்தான்! அவர்களின் கோட்டை என்று சொல்லும் பென்னாகரத்திலேயே அன்புமணி தோற்றார். அதன் பிறகும் கூட்டணி இல்லை, தனித்துப் போட்டி, முதல்வர் நாற்காலி… என்பதை மட்டுமே யோசித்துவந்தார் அன்புமணி. இப்போது அவரது மனநிலையில் மறுபடியும் மாற்றம் வந்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
‘தனித்துப் போட்டியிட்டுத் தமிழ்நாட்டில் யாரும் இனி ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பது அன்புமணிக்கும் தெரியும். இப்போது இருக்கும் சூழ்நிலையில் திமுகவுடன் கூட்டணி என்பதுதான் சரியாக இருக்கும் என அன்புமணி வெளிப்படையாகவே தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லிவருகிறார்.
அதில் அடுத்த கட்டமாக, துரைமுருகனிடம் இது சம்பந்தமாகவும் பேசியிருக்கிறார்கள். ‘நான் தளபதிகிட்ட பேசிட்டு சொல்றேன்’ என துரைமுருகன் சொல்லியிருக்கிறார். கூட்டணிக்குக்குள் பாமக வர ரெடியாக இருக்கிறது என்ற தகவல் துரைமுருகன் மூலமாக ஸ்டாலின் கவனத்துக்கும் போயிருக்கிறது. ‘அவங்க அப்பா தினமும் ஒரு அறிக்கை விட்டு நம்மை திட்டி தீர்த்துட்டு இருக்காரு. இதுல எங்கே கூட்டணிக்கு வருவாங்க?’ என்று கேட்டாராம் ஸ்டாலின்.
‘இதற்கு முன்பு நம்மை காடுவெட்டி குரு திட்டிட்டு இருப்பாரு. அந்த நேரத்தில், ஜி.கே.மணியை அனுப்பி தலைவரிடம் கூட்டணி பேசுவாங்க. இதுவும் அது மாதிரிதான். அப்பா திட்டிட்டு இருப்பாரு. பையன் சத்தமில்லாமல் கூட்டணி பேசி முடிக்கணும்னு நினைக்கிறாரு’ என்று சொல்லியிருக்கிறார் துரைமுருகன். பாமக கூட்டணிக்கு வருகிறது என்றால் திமுக அணியில் இப்போது இருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி என்ன நிலைப்பாடு எடுக்கும் என்பதே இப்போதைய கேள்வி. இதுபற்றியும் ஸ்டாலின் ஆலோசித்திருக்கிறார்.
‘விடுதலைச் சிறுத்தைகளைப் பொறுத்தவரை இப்போது நம்மோடு இணக்கமாக இருப்பதுபோலத் தெரிந்தாலும் கடைசி வரை நம்மோடு இருப்பாங்களா என்பது தெரியாது.
அப்படியே இருந்தாலும் அவங்களால் நாம் பெறுவதைவிட இழப்பதுதான் அதிகமாக இருக்கும். அதனால், நமக்கு விடுதலைச் சிறுத்தைகளா அல்லது பாமகவா என ஒரு சாய்ஸ் வந்தால், நிச்சயம் பாமகவைச் சேர்த்துக்கொள்வதுதான் நம் எதிர்காலத்துக்கு நல்லது’ என்றும் ஸ்டாலினிடம் சொல்லியிருக்கிறார்கள் துரைமுருகன் உள்ளிட்டோர். எல்லாவற்றையும் கவனமாகக் கேட்டுக்கொண்ட ஸ்டாலின் எந்த பதிலும் சொல்லவில்லையாம்” என்று முடிந்தது அந்த ஸ்டேட்டஸ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக