திங்கள், 30 ஏப்ரல், 2018

கோவையில் சட்டவிரோத குட்கா ஆலை.. வடநாட்டை சேர்ந்த அமித் ஜெயின் , ராம் தேவ், சொஜிராம் ....


tamilthehindu :

கோவையில் சட்டவிரோதமாக இயங்கிய குட்கா ஆலையில் இருந்து சுமார் 26 டன் குட்கா, பாக்கு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆலை உரிமையாளரைப் பிடிக்க தனிப்படை போலீஸார் டெல்லி விரைந்துள்ளனர்.
கோவை சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையத்தில் 5 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த தொழிற்சாலையில் சட்டவிரோதமாக குட்கா, பான்மசாலா பொருட்கள் தயாரிக்கப்பட்டு வந்தது. ரகசிய தகவல் மூலம் இதை அறிந்த கோவை மாவட்ட போலீஸார், கடந்த வெள்ளிக்கிழமை இரவு தொழிற்சாலைக்குள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். விடிய விடிய நடைபெற்ற இந்த சோதனையில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா பொருட்கள் மூட்டை மூட்டையாக கைப்பற்றப்பட்டன.
அதைத் தொடர்ந்து ஆலை உரிமையாளரான டெல்லி பிதம்பூராவைச் சேர்ந்த அமித் ஜெயின் (36), ஆலை மேலாளர் கோவை கண்ணம்பாளையத்தைச் சேர்ந்த ரகுராமன் (45), தொழிலாளர்களான உத்தரப்பிரதேசம் கான்பூரைச் சேர்ந்த அஜய் (30), ராஜஸ்தான் நாகூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராம்தேவ் (24), மக்ரானா மாவட்டத்தைச் சேர்ந்த சோஜிராம் (29) ஆகிய 5 பேர் மீது புகையிலை பொருட்கள் தடைச் சட்டப் பிரிவுகள் 7 மற்றும் 20, உடலுக்கு கேடு விளைவுக்கும் பொருட்கள் தயாரித்தல், விற்பனை செய்தல், கூட்டுசதி ஆகிய 4 பிரிவுகளின் கீழ் சூலூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
அதன் பேரில் மேலாளர், ஊழியர்கள் என 4 பேரை நேற்று கைது செய்து 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர். தலைமறைவாக இருக்கும் நிறுவன உரிமையாளர் அமித் ஜெயினை கைது செய்ய தனிப்படை போலீஸார் டெல்லி சென்றுள்ளனர்.
குட்கா ஆலையை சீல் வைத்த போலீஸார், அங்கு பதுக்கப்பட்டிருந்த 648 கிலோ குட்கா பொருட்கள், 758 கிலோ அனுமதி பெற்றதாக கூறப்படும் பான்மசாலா மற்றும் 25 ஆயிரம் கிலோ மூலப் பொருட்கள் (97 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள், பாக்கு உள்ளிட்டவை) ஆகியவற்றை கைப்பற்றி உணவு பாதுகாப்புத்துறை, தடய அறிவியல் பிரிவினர் மூலம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அரசியல் தலையீடு

ஸ்வீட் சுபாரி எனும் இனிப்பு பாக்கு வகைகளை தயார் செய்வதற்கான உரிமம் பெற்று, தடை செய்யப்பட்ட போதை பாக்குகளையும், குட்கா வகைகளையும் அங்கு தயாரித்து வந்துள்ளது போலீஸாருக்கும், அனுமதி வழங்கிய உணவுப் பாதுகாப்புத் துறையினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆலையில் முறைகேடுகள் நடப்பது தெரிந்தே பல்வேறு மட்டங்களில் உதவிகள் செய்யப்பட்டுள்ளதாகவும், அரசியல் தலையீடுகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து போலீஸார் தரப்பில் கேட்டபோது, ‘5.5 ஏக்கர் மில்லுக்கு சொந்தமான இடத்தை 2010-ல் வாங்கி, 2011-ல் குட்கா தயாரிப்புக்கு அனுமதி பெற்றுள்ளனர். அடுத்த ஆண்டே குட்காவுக்கு தமிழக அரசு தடை விதித்ததால், 2013-ல் பான்மசாலா தயாரிப்பு என்ற பெயரில் அனுமதி பெறப்பட்டுள்ளது. இதுவரையிலும் ஸ்வீட் சுபாரி, பான்மசாலா தயாரிப்பு மட்டுமே நடப்பதாக கூறப்பட்டு வந்துள்ளது. பல மட்டங்களிலும் இந்த நிறுவனத்துக்கு ஆதரவு இருந்ததால் மிக ரகசியமாக போலீஸ் சோதனை தொடங்கியது. உள்ளூர் போலீஸாருக்கும்கூட அதன் பிறகே தகவல் தெரிவிக்கப்பட்டது. அரசியல் பின்புலம் குறித்து விசாரித்து வருகிறோம். குட்கா ஆலை உரிமையாளருக்கு ஈரோட்டிலும் ஓர் ஆலை இருப்பதாகக் கூறப்படுகிறது. விசாரித்து வருகிறோம்’ என்றனர்.

2 ஆண்டுகள் முன்பே ஆய்வு

பாக்குகளை டன் கணக்கில் எடுத்து வந்து தரம் பிரித்து உலர்த்தி, பொடியாக்கி, குட்கா வகைகளாக மாற்ற பெரிய அளவில் உற்பத்தி கருவிகள் இங்கு இயக்கப்பட்டுள்ளன.
தடை செய்யப்பட்டவை என்பதால் இரவில் லாரிகள் மூலம் அவை விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. 2 ஆண்டுகளுக்கு முன்பு துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் கண்ணம்பாளையம் பேரூராட்சியில் புகார் அளித்துள்ளனர். மக்கள் மத்தியில் அழுத்தம் ஏற்பட்டதையடுத்து ஆய்வும் நடந்துள்ளது.
அப்போதையை பேரூராட்சித் தலைவர் முருகேசன் (திமுக) கூறும்போது, ‘பேரூராட்சித் தலைவர் பதவிக்காலம் முடியும் தருவாயில் 2 முறை மக்கள் புகார் அளித்தார்கள். ஆய்வு செய்தபோது, வெறும் பாக்கு உற்பத்தி மட்டுமே நடந்து கொண்டிருந்தது. பின்னர் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தகவல் தெரிவித்தோம். அவர்களது ஆய்விலும் ஏதும் இல்லை எனக் கூறிவிட்டார்கள். பின்னர் படிப்படியாக துர்நாற்றம் குறைந்துவிட்டது’ என்றார்.
ஆனால் அதை மறுக்கும் மக்கள், ‘முன்பிருந்தே போதை பொருட்கள் உற்பத்தி இருந்து வந்தது. மக்கள் பிரச்சினையை கிளப்பியதால், நறுமணப் பொருட்கள் மூலம் நாற்றத்தை கட்டுப்படுத்தி விட்டனர். அப்போதே முறையாக ஆய்வு நடத்தியிருந்தால் முன்னரே முறைகேட்டைத் தடுத்திருக்கலாம். இதில் உள்ள அரசியல் தலையீடுகள் குறித்து உரிய முறையில் விசாரிக்க வேண்டும்’ என்கின்றனர்.
அதிகாரிகளுக்கு தெரியவில்லையா?
குட்கா ஆலைக்கு உணவு பாதுகாப்புத்துறை அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்படுவது குறித்து அத்துறை அலுவலர்களிடம் கேட்டபோது, ‘2013ல் உணவு பொருள் தயாரிப்புக்கான அனுமதி பெற்றுள்ளனர். 2018 ஜூன் வரை லைசென்ஸ் புதுப்பித்து வைத்துள்ளனர். இதுபோக கடந்த 3 மாதம் முன்பு துறை ரீதியாக ஆய்வு நடத்தி, அதில் சந்தேகப்படும்படியாக எந்த பொருளும் தயாரிக்கப்படுவதில்லை என அப்பகுதி உணவு பாதுகாப்பு அலுவலர் அறிக்கை அளித்துள்ளார். இந்த ஆலையில் விஐபி என்ற பெயரில் கைப்பற்றப்பட்ட குட்கா பொட்டலங்களில் என்ன உள்ளன, எப்போது தயாரித்தார்கள், எங்கு தயாரித்தார்கள், அதை எங்கு விற்பனை செய்கிறார்கள் என்ற எந்த விபரமும் உணவுப்பாதுகாப்புத்துறைக்கு தெரியாது என்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக