வெள்ளி, 20 ஏப்ரல், 2018

உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ராவை தகுதி நீக்கம் செய்ய கோரி எதிர்கட்சிகள் மனு ...

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியை தகுதி நீக்கம் செய்யக்கோரி துணை ஜனாதிபதியிடம் நோட்டீஸ்மாலைமலர் :நீதிபதி லோயா மரணம் தொடர்பாக சுதந்திரமான விசாரணை குழு அமைக்க மறுத்துவிட்ட சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை தகுதி நீக்கம் செய்யக்கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மனு அளித்தனர். புதுடெல்லி: மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதியான பிரிஜ்கோபால் ஹரிகிருஷ்ணன் லோயா (48), கடந்த 2014 டிசம்பர் 1-ம் தேதி நாக்பூரில் சக நீதிபதியின் குடும்ப திருமண விழாவுக்கு சென்றபோது மாரடைப்பால் உயிரிழந்தார்.
இவர் குஜராத்தின் சொராபுதீன் என்கவுன்டர் வழக்கை விசாரித்து வந்தார். இந்த வழக்கில் தற்போதைய பாஜக தேசிய தலைவர் அமித்ஷா குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். லோயா மரணத்துக்குப் பிறகு பொறுப்பேற்ற நீதிபதி, வழக்கில் இருந்து அமித் ஷாவை விடுவித்து உத்தரவிட்டார். எனவே, “நீதிபதி லோயா மரணம் இயற்கையானது அல்ல” என்று குற்றம்சாட்டி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நீதிபதி லோயா மரணத்தில் மர்மம் நீடிப்பதாகவும், இதுகுறித்து சுதந்திரமான சிறப்பு குழுவினரின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் காங்கிரஸ் பிரமுகர் தெசீன் பூனவாலா, பத்திரிகையாளர் பி.ஆர்.லோன் உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்தனர்.


நீதிபதி லோயா மரணம் தொடர்பாக மீண்டும் விசாரணை நடத்த கூடாது என மகாராஷ்டிரா மாநில அரசு பதில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது.

நீதிபதி லோயா மரணம் குறித்து சிறப்பு விசாரணை கோரிய மனுக்களை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் நேற்று தீர்ப்பு அளித்தனர்.

‘இந்த மனுக்கள் விசாரணைக்கு உகந்தது அல்ல. லோயாவுடன் பொறுப்பில் இருந்த நீதிபதிகள் அளித்த அறிக்கைகள் மீது எந்த சந்தேகமும் இல்லை. மனுதாரர்களின் முயற்சியானது நீதித்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் செயல். சுதந்திரமான விசாரணை கேட்பது நீதித்துறை மீதான தாக்குதல். அரசியல் போட்டிகள் ஜனநாயக அரங்கில் தீர்க்கப்பட வேண்டும்’ என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், மாநிலங்களவையில் இடம்பெற்றுள்ள ஏழு எதிர்க்கட்சிகளை சேர்ந்த 64 எம்.பி.க்கள் குலாம் நபி ஆசாத் தலைமையில் இன்று டெல்லியில் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடுவை சந்தித்தனர். நீதிபதி லோயா மரணம் தொடர்பாக சுதந்திரமான விசாரணை குழு அமைக்க மறுத்துவிட்ட சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி திபக் மிஸ்ராவை தகுதி நீக்கம் செய்யக்கோரி மாநிலங்களவை சபாநாயகராகவும் பதவி வகிக்கும் வெங்கய்யா நாயுடுவிடம் அவர்கள் நோட்டீஸ் அளித்தனர்.

இந்த நோட்டீசில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், இ.கம்யூனிஸ்ட், மா.கம்யூனிஸ்ட், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் கையொப்பமிட்டுள்ளனர். இந்த நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்க காரணம் இருப்பதாக பாராளுமன்ற மாநிலங்களவை சபாநாயகர் தீர்மானித்தால், இவ்விவகாரத்தில் பாராளுமன்ற மக்களவையை சேர்ந்த 100 எம்.பி.க்களும், மாநிலங்களவையை சேர்ந்த 50 எம்.பி.க்களும் இந்த தகுதி நீக்கத்துக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக