புதன், 18 ஏப்ரல், 2018

வேல்முருகன் :கனிமொழி இம்மண்ணில் பிறந்த தமிழச்சி! தமிழகத்தை இழிவு படுத்தும் எச்ச ராஜா ...


மின்னபலம் :பாஜகவின் தேசியச் செயலாளரான ஹெச்.ராஜா இன்று (ஏப்ரல் 17) காலை வழக்கம்போலத் தனது கீழ்த்தரமான, அநாகரிகமான முறையில் திமுக தலைவர் கருணாநிதியையும், திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழியையும் விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். இதற்கு திமுகவிலிருந்து மட்டுமல்ல, ராஜாவின் சொந்தக் கட்சியான பாஜகவுக்குள் இருந்தே கடுமையான விமர்சனங்கள் வெளிப்பட்டிருக்கின்றன.
ஏற்கனவே ஆண்டாள் சர்ச்சையின்போது கவிஞர் வைரமுத்துவை மிகக் கேவலமான சொற்களில் வசைபாடினார் ராஜா. திரிபுராவில் பாஜக ஆட்சி அமைத்து அங்கே லெனின் சிலைகளை உடைத்தபோது, ‘இதேபோல விரைவில் பெரியார் சிலைகள் தமிழகத்தில் உடைக்கப்படும்’ என்று தனது ட்விட்டரில் பதிவிட்டார் ராஜா. இதற்கு மிகப் பெரிய அளவில் எதிர்ப்புகள் எழுந்தன. ராஜா மீது மாவட்டம் தோறும் போலீஸ் நிலையங்களில் புகார் கொடுக்கப்பட்டன. ஆனால் தமிழக அதிமுக அரசின் ஆதரவால் ராஜா மீது எங்கும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. கடுமையான எதிர்ப்பு எழுந்ததால், ‘அதை நான் பதிவிடவில்லை, எனக்குத் தெரியாமல் என் அட்மின் பதிவு செய்துவிட்டார்’ என்று டெல்லியில் பேட்டி கொடுத்தார் ராஜா.

“ஹெச்.ராஜா கீழ்மையானவர்’’ - வானதி சீனிவாசன் விமர்சனம்!இப்படித் தொடர்ந்து எதிர்மறையான, சகிக்க முடியாத, சர்ச்சைக்குரிய கருத்துகள் சொல்வதையே வாடிக்கையாக வைத்திருக்கும் ஹெச்.ராஜா, இன்று தனது ட்விட்டரில் ஊடகங்கள் அச்சிலேற்ற முடியாத வார்த்தைகளைப் பதிவிட்டிருக்கிறார். இதற்கு திமுக தரப்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பெயரில் அதே ரீதியிலான ஆபாச நடையில் ஒரு பதில் அறிக்கை வெளிவந்திருக்கிறது.
ராஜா உருவ பொம்மை எரிப்பு

தமிழகத்தில் ஆங்காங்கே திமுகவினர் ஹெச்.ராஜாவின் உருவ பொம்மையை எரித்துப் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். இன்று பிற்பகல் விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் திமுக சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் தலைமையில் திமுகவினர் திரண்டு, தியாகத் துருக்கத்தில் கண்ட ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில் ஹெச்.ராஜாவின் உருவ பொம்மையைக் கொளுத்தித் தங்கள் எதிர்ப்பைக் காட்டினர்.
இதற்கிடையில் இன்று ஆளுநர் பதவி விலக வேண்டும் என்று போராட்டப் பேரணி நடத்திக் கைதான திமுகவினரை சந்திக்க வந்தார் திமுக செயல் தலைவர் ஸ்டாலின். அப்போது ஹெச்.ராஜாவின் தரம் தாழ்ந்த விமர்சனம் பற்றி அவரிடம் கேட்கப்பட்டபோது, ‘’அவரது இன்ஷியலிலேயே எச்சி இருக்கிறது. அவரைப் பற்றியெல்லாம் பேசி அவருக்கு பதில் அளித்து என்னைக் கேவலப்படுத்திக்கொள்ள, கொச்சைப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை’’ என்று பதில் தந்தார் ஸ்டாலின்.
எல்லாக் குழந்தைகளும் நல்ல குழந்தைகள்!

அதேநேரம் ராஜாவுக்கு மற்ற கட்சித் தலைவர்கள் கூர்மையான பதில் கொடுத்திருக்கிறார்கள். காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில்,
“கள்ளக் குழந்தை என்பதே தவறு. எல்லாக் குழந்தைகளும் நல்ல குழந்தைகள். ஏனென்றால் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தாய் ஒரு தந்தை இருக்கிறார்கள்’’ என்று ராஜாவுக்கு பதில் தந்திருக்கிறார்.
கனிமொழி இம்மண்ணில் பிறந்த தமிழச்சி!

இதையெல்லாம் தாண்டி தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஹெச்.ராஜா மோசமான, ஆபாசமான, அருவெறுக்கத் தக்க வார்த்தைகளைத் தொடர்ந்து பயன்படுத்திவருகிறார். இந்நிலை நீடித்தால், திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்குக் கோபம் வருகிறதோ இல்லையோ, எங்களுக்குக் கோபம் வரும். கனிமொழி எங்கள் மண்ணில் பிறந்த எம் தமிழச்சி. ஹெச்.ராஜா தனது ட்விட்டை உடனே நீக்க வேண்டும், திரும்பப் பெற வேண்டும். மீண்டும் இதுபோன்று செய்தால், ஹெச்.ராஜாக்களை எதிர்த்தும் முற்றுகைகளையும் போராட்டங்களையும் நடத்துவோம். திராவிட முன்னேற்றக் கழகத்தில் கோடிக்கணக்கான தொண்டர்கள் இருந்து என்ன பயன்? உங்கள் தலைவரை அவமானப்படுத்துகிறான், உங்கள் தலைவரின் குடும்பத்தைக் கொச்சைப்படுத்துகிறான். ஏன் பொறுத்துக் கொண்டிருக்கிறீர்கள்? வீதிக்கு வாருங்கள், போராடுங்கள்’’ என்று கூறியிருக்கிறார் வேல்முருகன்.
தமிழிசை, வானதி கண்டனம்!
ஹெச்.ராஜா அவ்வப்போது ஏதோ ஒன்றைக் கொளுத்திப் போட அதற்கு பதில் சொல்லிச் சமாளிப்பதே பாஜக தமிழக தலைவர் தமிழிசைக்குப் பெரும்பாடாக இருக்கிறது. அந்த வகையில் பெண்மையை இன்று இழிவுபடுத்தியிருக்கும் ராஜாவுக்கு நீண்ட யோசனைக்குப் பின் தமிழக பாஜக தலைவர் தமிழிசை கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
“பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் எந்தக் கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை விமர்சிக்கப்படுவது எனக்கு மிகுந்த மனவேதனையைத் தருகிறது’’ என்று குறிப்பிட்டிருக்கிறார் தமிழிசை.
கீழ்மையான விமர்சனம்
ஒரு படி மேலே சென்ற தமிழக பாஜகவின் துணைத் தலைவர் வானதி சீனிவாசன், ஹெச் .ராஜாவை பெயர் குறிப்பிடாமல் கீழ்மையானவர் என்று விமர்சித்திருக்கிறார். இன்று அவர் தனது ட்விட்டர் பதிவில்,

“பெண்கள் அரசியலில், பொது வாழ்வில் வந்தாலே அவர்களை மலினப்படுத்தியும், கீழ்த்தரமாக விமர்சித்தும், அவர்களின் உடல் நிலை, முக அமைப்பு இவைகளை பற்றி நாகரீகமற்ற முறையிலும் ஆபாசமாகவும் சித்தரிக்கும் போக்கு கவலைக்குரிய வகையில் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்தக் கீழ்மைக்கு அவர்களின் தகுதி, பதவி, கல்வி அறிவு இது ஒன்றும் தடை இல்லை. பெண்களை வெறும் போகப்பொருளாக, ஒரு நுகர்வுப் பண்டமாக அல்லாமல் சக மனுஷியாய், தாயாய், மகளாய், சகோதரியாய், தோழியாய் பாருங்கள்’’ என்று வேண்டுகோள் வைத்திருக்கிறார்.

இப்படிக் கடுமையான கண்டனங்கள் பல தரப்பிலிருந்தும் எழுந்துகொண்டிருக்கும் நிலையில், இணைய தள திமுகவோ, ஹெச்.ராஜாவை ட்விட்டரிலேயே எதிர்த்து ட்ரெண்டிங் செய்துகொண்டிருக்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக